மலையாள திரையுலகம் தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்று நடிகை சனம் ஷெட்டி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
இதற்கிடையே வெளியான ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையானது மலையாள திரை உலகில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல், நடிகைகள் மீதான அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி நேற்று (ஆகஸ்ட் 20) சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ஒரே வாரத்தில் 4 சம்பவங்கள்!
அவர் பேசுகையில், “கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் தாளாளர் கொடுத்த பாலியல் தொல்லைகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து 21 வயது கல்லூரி பெண் லிப்ட் கேட்டு சென்றபோது அவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உடனடியாக கடும் தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் எவனும் ஒரு பொண்ணை தொடுவதற்கு ஆயிரம் முறை யோசிப்பான். இல்லையென்றால் பணம் பதவியை வைத்து பல பேர் தவறு செய்து எஸ்கேப் ஆகி கொண்டே இருப்பார்கள். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தான் தனியார் அமைப்புடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தோம்” என்று சனம் ஷெட்டி தெரிவித்தார்.
அப்போது அவரிடம் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது போல தமிழ் திரையுலகிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செக்ஸ் டார்ச்சர் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது!
அதற்கு அவர், ”உண்மையில் நான் ஹேமா அறிக்கையை ரொம்பவே பாராட்டுகிறேன். அவங்க வெளிப்படையாக இதுதான் நடக்கிறது என்று வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். அதனால் அவருக்கு நான் சல்யூட் சொல்கிறேன்.
இந்த மாதிரி தமிழ் இன்டஸ்ட்ரியில் நடக்கிறதா என்று கேட்டால் ஆமாம் நடக்கிறது என்று தான் சொல்வேன். செக்ஸ் டார்ச்சர் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி நான் இரண்டு நாள் முன்னாடி போட்ட வீடியோவில் கூட சொல்லி இருக்கிறேன். அப்போது ‘இந்த சம்பவம் நடந்தபோதே நீங்க சொல்லி இருக்கலாமே’ என்று பலர் கேட்பார்கள்.
என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவனிடம் அப்போதே ’செருப்பால அடிப்பேன் நாயே’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்திருக்கிறேன்.
அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் மோசம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர்தான் தப்பான அர்த்தத்தில் பேசுகிறார்கள். இப்போ நான் நடிச்ச எல்லா ப்ராஜெக்ட்டுலயும் 100% நல்லவங்க இருக்குறாங்க. நல்ல ப்ராஜெக்ட்களில் தான் நடித்து வருகிறேன்” என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
7 மணி நேரம் நடப்பீர்களா? ஒரு நாளுக்கு ரூ.28,000 ஊதியத்துடன் டெஸ்லா நிறுவனத்தில் வேலை!
உலகளவில் மீண்டும் ’A+’ ரேங்க் பெற்ற இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்!