இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’கஜினி – 2’ வெளியாக வாய்ப்புள்ளது என சமீபத்தில், நடிகர் சூர்யா இந்தி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் உறுதியளித்துள்ளார்.
அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘கங்குவா’ திரைப்படத்திற்காக அவர் ஒரு தனியார் இந்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ ரொம்ப நாட்கள் கழித்து தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ‘கஜினி – 2’ ஐடியாவுடன் வந்து எனை அணுகினார். கண்டிப்பாக பண்லாம் சார் என நான் அதற்கு கூறினேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் படம் நடக்க நிறைய வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் அப்டேட்டாக இருக்க விரும்புவீர்கள். ஆனால் 5 வருடங்களுக்கு ஒரு முறை அந்த குறிப்பிட்ட தலைமுறையின் ரசனை மாறும். இந்தத் தலைமுறை ‘கஜினி’ திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இன்றும் ‘கஜினி’ , ‘காக்க காக்க’ போன்ற என்னுடைய படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.
தற்போது காலகட்டத்திற்கு ஏற்றவாறு நான் அப்டேட்டாக இருக்க வேண்டும். தற்போது ஆடியன்ஸைத் தியேட்டருக்கு அழைத்து வர அவர்கள் கவனம் பெறும் படி வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். வெறும் ஹீரோ, வில்லன் கதைகளாக இல்லாமல் திரைக்கதையில் சிறிய மாற்றம் வேண்டும்’ எனப் பேசினார்.
இயக்குநர் சிவாவை பற்றி பேசும் போது, ’சமீபத்தில் நான் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர், ‘இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவ விடலன்னு..!?’ என என்னிடம் கேட்டார். அஜித்துக்கு மிக சிறப்பான படங்களைத் தந்தவர் சிவா. அவருக்கு தியேட்டர் மொமெண்ட்களை எழுதுவது நன்றாக வரும்’ எனப் பாராட்டினார்.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகவுள்ள ‘கங்குவா’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கான புரொமோஷனாக நடிகர் சூர்யா, இயக்குநர் சிவாவுடன் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர்களான பாபி டியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘யோலோ’ என்கிற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. ஏற்கனவே அக்.10 ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்தத் திரைப்பட்ம ‘வேட்டையன்’ ரிலீஸால் தற்போது நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா