தேனாண்டாள் பிலிம்ஸுக்கு உதவும் லைகா நிறுவனம்!

Published On:

| By Kavi

தமிழ் திரையுலகில் சிறுபட்ஜெட் படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருந்தது தேனாண்டாள் பிலிம்ஸ் .

தயாரிப்பு, இயக்கம், விநியோகம் என பன்முக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் இராம நாராயணன் வளர்த்த நிறுவனம். அவரது மறைவுக்கு பின் தற்போதைய பிரம்மாண்ட பட்ஜெட் மாயையில் சிக்கிய அவரது மகன் முரளி ராமசாமி  2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க போவதாக அறிவித்த  சங்கமித்ரா படம் கைவிடப்பட்டது.

தனுஷ் இயக்கத்தில் பாதிவரை படப்பிடிப்பு நடந்த படமும் நிறுத்தப்பட்டது. முழுமையாகத் தயாரான இறவாக்காலம் படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் அந்நிறுவனம் படத் தயாரிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த சங்கமித்ரா படத்துக்கு முன் செலவு பத்து கோடி ரூபாய் ஆனது என்றார்கள். அப்படம் கைவிடப்பட்டதால் அப்பணம் முடங்கியது. இப்போது சங்கமித்ரா படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முடிவாகியிருக்கிறது.

அதனால் அப்படத்துக்காக தேனாண்டாள் நிறுவனம் செலவு செய்த தொகையை லைகா நிறுவனம் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறதாம்.

அப்பணத்தை வைத்து நின்று போன தனுஷ் படத்தைத் தொடங்க அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

தனுஷிடம் இதுபற்றிப் பேசியதற்கு அவரும் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள். தனுஷ் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் நாற்பது நாட்கள் வரை நடந்துள்ளது. இப்போது அதை மீண்டும் தொடர தனுஷ் முன்வந்திருக்கிறார்.

இதனால் தேனாண்டாள் நிறுவனம் மீண்டும் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.

இராமானுஜம்

வாரிசை தொடர்ந்து வாத்தி : லலித்குமாரின் திட்டம்!

மல்யுத்த வீரராக மோகன்லால் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share