திரைப்பட தயாரிப்பில், அதனை வெளியிடுவதில் நிதானத்தை கடைப்பிடிக்கும் பிரபல இளம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது தயாரிப்பில் வெளியாகும் படத்தை வெளியிடும் போது நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் பின்வாங்குவது இல்லை.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெளிவரும் நாட்களில் இரண்டாம் கட்ட, மற்றும் சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் தவிர்த்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் 2019 அக்டோபர் 25ஆம் தேதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்த கைதி திரைப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிகில் அறிவிப்பு காரணமாக கைதி படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் கிடைக்காது, அதனால் வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டும் என்று அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் அழுத்தம் கொடுத்தனர். இருந்த போதிலும் ‘கைதி படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்களில் அறிவித்தபடி படம் வெளியாகும்’ என்றார் எஸ்.ஆர்.பிரபு.
180 கோடி ரூபாய் பட்ஜெட், விஜய், அட்லி கூட்டணியில் தயாரான பிகில் படத்துடன் 25 கோடி ரூபாயில் தயாரான கைதி படத்தை வெளியிட வேண்டுமா என்று எஸ்.ஆர் பிரபுவிடம் அப்போது கேட்டபோது, “வெற்றியை தீர்மானிப்பது கதையின் பிரம்மாண்டம் மட்டுமே. படத்தின் பட்ஜெட் இல்லை” என்றார்.
700க்கும் மேற்பட்ட திரைகளில் பிகில் வெளியாகி கல்லா கட்டிய போது 230 திரைகளில் வெளியான கைதி முதல் நாள் 30% பார்வையாளர்களே தொடக்க காட்சியை பார்த்தனர். அடுத்தடுத்த காட்சிகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பிகில் படத்திற்கான சம போட்டியாளராக கைதி திரைப்படத்தின் வசூல் அதிகரித்தது.
அதே போன்ற சூழலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது எஸ்.ஆர். பிரபுவின் டிரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம்.
வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நட்சத்திர குவியலுடன் நடித்துள்ள வேட்டையன் வெளியாக உள்ளது. ஒரு நாள் கடந்து அக்டோபர் 11 ஆம் தேதி ஜீவா நாயகனாக நடித்துள்ள பிளாக் படம் வெளியாகும் என நேற்று (அக்டோபர் 4) மாலை அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் பிளாக் படத்தை
டிரீம் வாரியரின் மற்றொரு கிளை நிறுவனமான பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு, கைதி படம் போன்று ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவமாக திரைக்கதை எழுதப்பட்டுள்ள படம்தான் பிளாக்.
”ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தும் இடமாக பார்க்கப்படும். அங்கு நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள பிளாக் படம் த்ரில்லர் படமாக இருப்பதால் ரசிகர்களைக் கவரும் என்ற எதிர்பார்ப்பில் வெளியிடுகிறோம் என்கிறார்” எஸ்.ஆர்.பிரபு
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கோயம்புத்தூர்சுப்பையா சண்முகம் ஐந்து கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
25 கோடியில் தயாரிக்கப்பட்ட கைதி படத்திற்கு 125 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனது. 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பிகில் 300 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. முதலீடு, நட்சத்திர அந்தஸ்து ஒப்பீட்டளவில் கைதி படம் பிகில் படத்துடன் ஒப்பிடும்போது ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. ஆனால் முதலீட்டு அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கைதி பிகில் படத்தை முந்தியது.
அதேபோன்று ஒரு நாள் தள்ளி வந்தாலும் பிரம்மாண்டம், நட்சத்திர குவியலுடன் வெளியாகும் வேட்டையன் படத்துடன்பிளாக் படத்தை ஒப்பிடவே முடியாத தொலை தூரத்தில் இருக்கிறது. 2019ல் நிகழ்ந்த ஆச்சரியம், சாதனையை ஜீவாவின் பிளாக் நிகழ்த்துமா என்கிற எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா வட்டாரம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– இராமானுஜம்
”வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்” : சேகர்பாபு உறுதி!
குகையில் இருந்து மீட்கப்பட்ட சாதுவுக்கு வயது 188? அதிரும் நெட்டிசன்கள்!