விமர்சனம் : தீராக் காதல்!
காதல் மனம் ஒரு அட்சய பாத்திரம்!
ஒரு படத்தின் டைட்டிலே கதையின் தன்மை என்னவென்பதைச் சொல்லிவிட வேண்டும். ‘தீராக் காதல்’ அப்படிப்பட்ட ஒன்று. ஏனென்றால், காதல் பொங்கும் மனம் என்றுமே ஒரு அட்சய பாத்திரம் எனும் கவிதைத்தனமான வரியை மையப்படுத்தியே இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அழகி, 96, ஆட்டோகிராப், சில்லுன்னு ஒரு காதல் உட்படப் பல படங்களில் நாம் பார்த்த அதே கதைதான் இதிலும் உள்ளது. அதனை இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல, இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்றாற்போலத் தருவது மாபெரும் சவால்.
ஏனென்றால், காதலுக்கும் காமத்துக்குமான மெல்லிய கோடு எப்போதோ அழிந்துவிட்டதாக நம்பிக்கையைப் பரப்பும் சமூகவலைதளக் கலாசாரத்தின் நடுவே திகட்டத் திகட்டக் காதலைத் திரையில் பரப்ப வேண்டுமென்பது சாத்தியமற்ற ஒரு விஷயம்.
‘தீராக் காதல்’ படக்குழு அதனை எவ்வாறு கையாண்டுள்ளது? இந்தக் கேள்விதான் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.
காதல் நட்பாக மாறாது!
ஒரு ஆண். தனது மனைவி, மகள் உடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் பணி நிமித்தம் வெளியூர் செல்கிறார். வழியில் ஒரு பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கிறார். அந்த நபர் அந்தப் பெண்ணை ஒருகாலத்தில் உயிருக்கு உயிராகக் காதலித்தவர். இப்போது அந்தப் பெண்ணுக்கும் திருமணமாகி விட்டது. இருவருமே வெவ்வேறு குடும்பங்களின் பிரதிநிதிகள். ஆனாலும், அவர்களுக்கு இடையிலான தொடர்பிழை மீண்டும் அரும்புகிறது. கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றிணைந்த கணம் அது. அவ்வளவுதான்! அந்த தருணங்களின் மீது காதல் நிறையத் தொடங்குகிறது.
அந்த ஆணும் பெண்ணும் பேசி, சிரித்து, ரசித்து, சுற்றி, அந்த தருணங்களைக் கொண்டாட்டத்திற்கு உரியதாக மாற்றுகின்றனர். ஒருநாள் வருகிறது. அவர்களுக்கு இடையிலான பந்தம் மீண்டும் முற்றுப் பெறுகிறது.
இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்ல வேண்டிய கட்டாயம். ’இனி ஒருபோதும் சந்திக்கக் கூடாது; ஒருவேளை சந்திக்க வேண்டிய சூழல் வந்தால் அந்நியர்களாக அறிமுகமாகிக் கொள்வோம்’ என்பது இருவருக்கும் இடையே கையெழுத்திடாத ஒப்பந்தம் அமலாகிறது. இருவரும் ஊர் திரும்புகின்றனர்.
சந்தர்ப்பச் சூழல் காரணமாக, ஒருநாள் அந்தப் பெண் தனது கணவரை விட்டுப் பிரிகிறார். தனிமையில் உழல்கிறார். இனி காதலர் மட்டுமே ஆறுதல் என்றெண்ணி மருகுகிறார். ‘குடும்பத்தை விட்டு வா, சேர்ந்து வாழ்வோம்’ என்கிறார்.
அந்த காதலர் அதனை ஏற்றாரா அல்லது குடும்பத்தைப் பிரிய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாரா என்று நகர்கிறது ‘தீராக் காதல்’ படத்தின் மீதிப்பாதி.
கொஞ்சம் பிசகினாலும், கள்ளக் காதல் என்று ஊடகங்களில் செய்திகளாக மாறிவிடக் கூடிய ஒரு கதை. அதனை நாகரிகமான பார்வையில் வெளிப்படுத்துகிறது திரைக்கதை.
பிரிந்து சென்ற காதலர்கள், மீண்டும் சந்தித்து நண்பர்களாக மாறுவது சாத்தியமில்லாத விஷயம் என்கிறது இப்படம். கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களே விவாகரத்துக்குப் பிறகு நட்புடன் வாழ முடியும் என்று வாதிடுபவர்களால் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அது போன்ற சில விஷயங்களே ‘தீராக் காதல்’ படத்தை, காதலை மனதுக்குள் பூட்டி வைத்து சந்தோஷமடையும் மனிதர்களுக்கானதாக ஆக்குகிறது.
சில்லுன்னு ஒரு காதல்!
காதலர்கள் பிரிந்தாலும், அவர்களது மனதுக்குள் இருக்கும் காதல் என்றும் சில்லிப்புடன் இருக்கும். அதேநேரத்தில், நிகழ்காலக் குடும்ப வாழ்வையும் மனதில் இருந்து தூக்கியெறிய முடியாது. அதனை அடிப்படையாகக் கொண்டே, சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
‘தீராக் காதல்’ திரைக்கதை அந்தப்புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு சின்ன மாற்றமாக, இதில் அந்த சந்திப்பு இயற்கையின் கருணையால் நிகழ்கிறது.
திரையில் காதல் மிளிர மையப்பாத்திரங்களின் நடிப்பு, அவர்களுக்கான ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு உட்படப் பல விஷயங்கள் புத்துணர்வூட்டுவதாக இருக்க வேண்டும். ‘தீராக் காதல்’ படத்தில் அவையனைத்தும் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளன.
பளிச்சென்று பரவும் ஒளி வெள்ளத்தின் நடுவே பெரும்பாலான பிரேம்களை வார்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம். ராமு தங்கராஜின் கலை வடிவமைப்பும் அதற்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பானது தேனில் ஊறிய பலாச்சுளையைச் சிந்தாமல் சிதறாமல் சுவைக்கும் அனுபவத்தைப் பெற உதவுகிறது.
பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகும் காதல் சிறுகதைகளிலேயே கவிதைத்தனத்தை நிரப்பும் ஜி.ஆர்.சுரேந்திரநாத் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். காட்சிகள் கவித்துவமாக நகரும் வகையில் திரைக்கதையை வடித்திருப்பதால், வசனங்களில் இயல்புத்தன்மை ரொம்பவே அதிகம்.
’உங்கூட ஃபர்ஸ்ட்டுல இருந்த மாதிரி இருக்கணும்’, ‘முன்னெல்லாம் லவ்வர பார்த்தா தான் ப்ரெண்ட்ஸை கழட்டிவிடுவீங்க; இப்போ எக்ஸ் லவ்வர பார்த்தா கூட கழட்டி விடுறீங்களே’, ‘எனக்கு ஒரு லவ்வர் இருந்து, அவனை இப்படி ரோட்டுல கட்டிப் பிடிச்சுட்டு நின்னா உன்னால ஏத்துக்க முடியுமா’ என்பது போன்றவை அதற்கான உதாரணங்கள்.
தான் பணியாற்றிய ‘பேச்சுலர்’ உட்படப் பல படங்களில் பின்னணி இசையில் அசத்திய சித்துகுமார், இதிலும் அதனைத் தொடர்ந்திருக்கிறார். பல காட்சிகளில் அவரது பின்னணி இசை காதல் மழையாக மாறியிருக்கிறது. வாலு பார்ட்டி பாடல் துள்ளாட்டல் போட வைக்கிறது; நீ சொல்லாட்டி, உசுரான் கூட்டில், ஒத்தையாக பாடல்கள் காதலைக் காற்றில் நிரப்பும் ரகம். ஒரு கனவு மென்சோகத்தை வெளிப்படுத்தும் பாடல். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவொரு ஹிட் ஆல்பம் தான்!
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா மூவருமே அருமையான நடிப்பைத் தந்துள்ளனர். ஐஸ்வர்யாவைச் சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகளில் ஜெய் அசத்தினால், அவரது காதலைப் பெற முடியாமல் தவிக்கும் இடங்களில் முன்னவர் கண் கலங்க வைக்கிறார். திரையில் ஐஸ்வர்யாவைக் கண்டதும் வெறுப்பு பூக்காமல் பரிதாபம் மேலிடுவது அப்பாத்திரத்தின் வெற்றி.
இந்த படத்தில், மனைவியைக் காரணமே இல்லாமல் வதைக்கும் கணவனாக வந்திருக்கிறார் அம்ஜத் கான். அதற்கு நேர்மாறாகத் தன் கணவனை, குடும்பத்தை நேசிக்கும் மனைவியாக ஷிவதாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதையைச் சுவாரஸ்யப்படுத்தும் முரண். பார்வையில், முகம் திரும்பலில், சின்னச் சின்ன உடல் அசைவுகளில் ஒரு சாதாரண இல்லத்தரசியாக நம்மை உணர வைத்திருக்கிறார் ஷிவதா; அதுவே, ஒரு நல்ல புரிதல் கொண்ட இல்லத்தரசியாக அவரது பாத்திரத்தைக் காட்ட உதவியிருக்கிறது.
குழந்தை நட்சத்திரம் விருத்தி விஷால் ‘க்யூட்’டாக இருப்பதோடு அழகாக நடித்துள்ளார். நாயகனின் நண்பன் வேடம் என்றாலும், ஆங்காங்கே நாம் சிரிக்கக் காரணமாக விளங்குகிறார் அப்துல் லீ. இவர்கள் தவிர்த்து மாரிமுத்து, ஸ்ரீஜா, விஜே ஆனந்தி உட்பட மிகச்சிலர் திரையில் வந்து போயிருக்கின்றனர்.
ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதாவைச் சுற்றியே கதை நகரும் காரணத்தால், மற்ற பாத்திரங்களுக்கு ஓரளவுக்கு மேல் முக்கியத்துவம் தராமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அது, காதலர்களின் உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமில்லை என்ற எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்கிறது.
வரவேற்பு கிடைக்குமா?
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘96’ உட்படப் பல காதல் படங்கள் இங்கே வெகுதாமதமாகவே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஒருதலைராகம், சேது, ஆட்டோகிராப் கூட அந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை. ’தீராக் காதல்’ படத்திற்குப் பெருமளவில் வரவேற்பு இல்லாத சூழல் நிலவுவதைப் பார்க்கையில் அதுவே நினைவுக்கு வருகிறது.
மேற்சொன்ன படங்களில், பார்வையாளர்கள் பிரதான பாத்திரங்களோடு தங்களைப் பொருத்திப் பார்க்கச் சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு திரைக்கதையில் சிறிய அளவிலாவது சொல்லப்பட்டிருக்கும். ‘தீராக் காதல்’ அந்த விஷயத்தில் வெகுவாக விலகி நிற்கிறது.
ஹைடெக் அபார்ட்மெண்ட், பார்க்கிங்கில் நிறைந்திருக்கும் கார்கள், லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மாந்தர்கள், காரணமே இல்லாமல் செலவழிக்கத் தயாராக இருக்கும் மனோபாவம் என்று இந்தப் படத்தில் நிறைந்திருக்கும் சில அம்சங்கள் சாதாரண வாழ்க்கை வாழும் பார்வையாளர்களைத் திரையோடு ஒட்டவிடாமல் தடுக்கின்றன. ஹீரோவின் நண்பருக்கென்று தனி காமெடி ட்ராக் வைத்து, அது போன்ற தடைகளைச் சமாளிப்பது கூட சில படங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும், அதெல்லாம் இயல்பாக வாய்ப்பதுதான் பார்வையாளர்களைத் தானாக ஈர்க்கும்.
நிச்சயமாகத் திரையரங்கில் மொய்க்காத கூட்டம் ஓடிடி வெளியீட்டுக்கு ‘க்யூ’ கட்டி வந்து நிற்கும். அதற்குப் படத்தின் தரம் மட்டுமே காரணமாக இருக்கும். அது ஏற்புடையதா இல்லையா என்பது படக்குழுவினர் மட்டுமே பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
பெரிதாகத் திருப்பங்கள் இல்லாமல், காதலில் திளைக்கும் படங்களைப் பார்க்கவென்றே மேற்குலகில் ரசிகப் பட்டாளம் உண்டு. ‘ஒரு யூரோப்பியன் பிலிம் மாதிரி திகட்டுற அளவுக்கு ரொமான்ஸ் படம் பார்க்கணும்’ என்று விரும்புபவர்கள் இங்கும் உண்டு. ’தீராக் காதல்’ அவர்களைத் திருப்திப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரத்தில், ஒரு ஐரோப்பிய பாணி காதல் கதையை எதற்கு இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இப்படம் எந்தப் பதிலையும் தராது.
உதய் பாடகலிங்கம்
ராமேஸ்வரத்தில் இருந்து நடைப் பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!
“மருத்துவரிடம் பேசிய ஆடியோ” : ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் கண்டனம்!