வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பானங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு செல்லும் போது உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட குளிர்பானங்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் தியேட்டரில் விற்கப்படும் இவற்றின் விலையே திரைப்பட டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. இதனை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி நரசிம்மா அமர்வு முன்பாக இன்று (ஜனவரி 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், திரையரங்கில் குடிநீரெல்லாம் வழங்கப்படுகின்றன. ஆனால் உணவுகள் எல்லாம் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், அதற்கு பாதுகாப்பு காரணங்களும் சொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள் , “ திரையரங்கு என்பது தனி நபருக்கு சொந்தமான இடம். அந்த இடத்தில் என்ன விதிமுறைகளை வகுக்க வேண்டும் ? என சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
தனிநபர் சொத்து சார்ந்த இடத்தில் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, “வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பானங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பதற்கு திரையரங்குகளுக்கு உரிமை உள்ளது.
அதே நேரத்தில் இலவசமாக குடிநீர் திரையரங்கில் வழங்க வேண்டும் . அதேபோல குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பெற்றோர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் அங்கு விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை ஏற்கனெவே அதிகமாக உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற கவலை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜாம்பவான் மரணத்திலும் செல்ஃபி : வசைபாடும் நெட்டிசன்கள்!
ஏசி பெட்டிக்குள் 60 லட்சம், 200 ஏக்கர்: மாஜி அமைச்சர் சம்பத் தலைமறைவு?