யாரு பார்த்த வேலை இது
வெப்சீரிஸ்களுக்கென்று வெற்றிகரமான திரைக்கதை வடிவமொன்று உள்ளது, அல்லது வெற்றிகரமான வெப்சீரிஸ்களை பார்த்தபிறகு அதுவே நல்ல வடிவமாகத் தென்படுகிறது என்று கூட சொல்லலாம்.
முதல் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன்கதை, அதன்பின் டைட்டில், அதையடுத்து தற்போதைய நடப்பு என்று எபிசோடு நகரும். அதன் முடிவில், ஒரு பெரும் திருப்பம் காட்டப்படும். அதற்கடுத்த எபிசோடுகளும் கூட, இதே வடிவில் அமைந்திருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட காலகட்டங்களைச் சொல்லும் கதைகளில், தற்போதைய நிகழ்வுகளும் பிளாஷ்பேக்குகளும் மாறி மாறி காண்பிக்கப்படும். ஆனால், கதையில் பெரும் திறவுகளைக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடக்கத்தில் இடம்பெறுவதிலும், முக்கியமான திருப்பங்கள் இறுதியில் இருப்பதிலும் பெரிதாக மாற்றம் இராது.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா, திவ்யா, ஆடுகளம் நரேன், முத்துகுமார், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘தி வில்லேஜ்’ வெப்சீரிஸில் மேற்சொன்ன எதுவுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
‘அப்படியென்றால்..’ என்று நீங்கள் மனதுக்குள் எண்ணுவது புரிகிறது. சரி, இந்த வெப்சீரிஸ் பார்த்தபிறகு நம் மனதில் தோன்றுவது என்ன?
ஒரு கிராமத்தில்…
ஒரு இளம்பெண் பிரசவ வலியில் துடிக்கிறார். கணவரும் இதர உறவினர்களும் அவரை ஒரு வேனில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் சில இடையூறுகள் ஏற்பட, மாற்றுப்பாதையில் செல்கின்றனர். அங்கிருக்கும் மைல்கல்லில் ‘கட்டியல் 5 கி.மீ.’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொஞ்சம் பதைபதைப்போடு அவர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் முகங்களில் பயம் அலைமோதுகிறது.
திடீரென்று நடுக்காட்டில் வேன் நின்றுவிடுகிறது. காரணம், ஒரு ஆள் அதன் மீது மோதியதுதான். அவர் என்னவானார் என்று பார்க்கச் செல்கிறார் அப்பெண்ணின் கணவர். அடுத்த நொடியே, அந்த வேனில் இருப்பவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். கொடூர உருவில் இருக்கும் சிலர், அவர்களை வேட்டையாடுகின்றனர்.
கட்டியல் எனும் அந்த ஊரில் வீடுகள் இடிந்துபோய், ஆளில்லாமல் கிடக்கின்றன. ஒரு பெரிய ஆலை சிதைந்த நிலையில் இருக்கிறது.
சில ஆண்டுகள் கழித்து, கௌதம் (ஆர்யா) எனும் மருத்துவர் தனது மனைவி நேஹா (திவ்யா), மகள் மாயா (ஆலியா) உடன் காரில் பயணிக்கிறார். காரில் அவர்கள் வளர்த்துவரும் நாயும் இருக்கிறது. தூத்துக்குடி அருகே வருகையில், நெடுஞ்சாலையில் ‘ட்ராபிக் ஜாம்’ ஆகிறது. அதனால், கூகுள் மேப் பார்த்து இன்னொரு வழியில் பயணிக்கின்றனர். அதே கட்டியல் கிராமம் வழியாகப் போகின்றனர். நடுக்காட்டில் ஓரிடத்தில் கார் டயர் பஞ்சர் ஆகிறது.
உடனே காரை விட்டுக் கீழிறங்கும் கௌதம், அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று பஞ்சர் ஒட்ட ஆட்களை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். திடீரென்று ஏதோ சத்தம் கேட்க, காரில் இருந்து வெளியே குதித்தோடுகிறது நாய். அதனைப் பிடிக்க மாயாவும் நேஹாவும் ஓடுகின்றனர். அந்த நேரத்தில், ஏதோ ஒரு உருவம் நேஹாவைச் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்கிறது. மாயாவும் கடத்தப்படுகிறார்.
நடந்து சென்று அருகிலிருக்கும் ஊரை அடைகிறார் கௌதம். அவர்களிடம் கட்டியல் அருகே தங்களது கார் சிக்கிக்கொண்டதாகச் சொல்கிறார். அதைக்கேட்டதும் ஊரார் மிரள்கின்றனர். அங்கு பேய் இருப்பதாகச் சொல்லி அஞ்சுகின்றனர். அவர்கள் உதவமாட்டார்கள் என்று அறிந்ததும், கௌதம் மீண்டும் வந்த வழியே திரும்புகிறார்.
சக்திவேல் (ஆடுகளம் நரேன்), பீட்டர் (ஜார்ஜ் மரியான்), கருநாகம் (முத்துகுமார்) ஆகியோர் அவருக்கு உதவ முன்வருகின்றனர். காட்டுக்குள் சென்றால், கௌதம் நிறுத்திய இடத்தில் அந்த கார் இல்லை. அதனைக் கண்டு நால்வரும் அதிர்ச்சியடைகின்றனர்.
அப்போது, கொடூர உருவத்துடன் இருக்கும் சில நாய்கள் அவர்களைத் துரத்துகின்றன. அவற்றிடம் இருந்து தப்பிக்க முனைகையில், ஒரு பெரும் பள்ளத்தில் விழுகின்றனர். அது, கட்டியல் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆலைக்காகத் தோண்டப்பட்ட சுரங்கம்.
அங்கு மாயா அணிந்த ஹேர்பின் கிடப்பதைக் காண்கிறார் கௌதம். அதனைத் தொடர்ந்து, அந்த சுரங்கத்திற்குள்தான் மனைவியும் மகளும் அடைக்கப்பட்டதாக உணர்கிறார். கத்திக் கதறியவாறே அதன் உள்ளே ஓடுகிறார்.
அவர்கள் எதிரே ஒரு பெரிய உருவம் வந்து நிற்கிறது. அதன் குரலைக் கேட்டதும், ‘அப்பா’ என்கிறார் சக்திவேல். ஆனால், அவர் ஆணைக்கிணங்க கொடூர உருவம் கொண்ட ஒரு கும்பல் அவர்களைத் தாக்குகிறது.
மனிதர்களாக இருந்த அந்த நபர்கள் கொடூரமானவர்களாக மாறியது எப்படி? அவர்களது பிடியில் இருந்து மாயாவையும் நேஹாவையும் கௌதம் மீட்டாரா என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘தி வில்லேஜ்’.
இந்தக் கதைக்கு நடுவே சக்திவேல் குடும்பத்தினரின் பண்ணையார்தன அடக்குமுறைகளும், அவர்களைத் தேடி சிங்கப்பூரில் இருந்து வந்த விஞ்ஞானி ஜிஎஸ்ஆரின் (ஜெயபிரகாஷ்) கண்டுபிடிப்புச் செயல்பாடுகளும் சொல்லப்படுகின்றன. ஜிஎஸ்ஆரின் மகன் பிரகாஷும் (அருண் சிதம்பரம்) உதவியாளர் ஜெகனும் (தலைவாசல் விஜய்) சேர்ந்து, கட்டியல் கிராமத்திற்கு விஞ்ஞானிகள் குழு மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அனுப்பியதும் இடையே காட்டப்படுகிறது.
மனிதர்களைக் கொன்று குவிக்கும் அந்த கொடூரமான கும்பலிடம் இருந்து அனைவரும் தப்பிக்க முடிந்ததா, இல்லையா என்ற கேள்வியே இதில் பிரதானம். அதற்கு இடமே தராமல் அவர்கள் சராமாரியாகக் கொல்லப்படுவதைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒருகட்டத்தில் அதுவே தொடர்கதையாகும்போது நம்முள் ஏற்படும் குமட்டல் நிற்பதாக இல்லை.
வீணாகியுள்ள உழைப்பு
‘தி வில்லேஜ்’ சீரிஸின் நாயகனாக நடித்திருக்கிறார் ஆர்யா. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மீகாமன்’, ‘மதராசப்பட்டணம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘டெடி’ என்று தான் நடித்த படங்கள் அனைத்திலும் பாத்திரங்களின் இயல்பை மீறி ஒருவிதமான அலட்சியத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பார். சில படங்களில் அது கேள்விக்குட்படுத்தும் வகையில் ‘துருத்தலாக’ தெரியும். பெரிய ஈர்ப்பையும் உண்டுபண்ணாது. அந்த வரிசையில், ‘தி வில்லேஜ்’ஜும் சேர்கிறது.
நாயகி திவ்யா, குழந்தை ஆலியாவுக்கு இக்கதையில் பெரிதாக இடமில்லை. தொடக்கக் காட்சியில் வரும் பெண்களைத் தவிர கலைராணி மட்டுமே அவ்வப்போது தலைகாட்டியிருக்கிறார். அதுவும் கூட எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.
ஆடுகளம் நரேன், முத்துக்குமார், ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் மட்டுமே இந்த தொடரில் பார்க்கும்படியாக உள்ளன. பல படங்களில் பார்த்த காட்சிகள், வசனங்களைப் போல அவை இருந்தாலும், அவர்களது நடிப்பு அதனை மறக்கடிக்கிறது.
தலைவாசல் விஜய், அருண் சிதம்பரம் காட்டப்பட்ட அளவுக்குக் கூட, இதில் ஜெயபிரகாஷுக்கு இடமில்லை. பாதுகாப்புக் குழுவினராகக் காட்டப்படும் ஜான் கொக்கன், பூஜா, ஆனந்த் சாமி உள்ளிட்டோருக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.
கொடூரமான வில்லன் கூட்டமாகக் காட்டப்பட்டவர்களில் பி.என்.சன்னி, அவரது மகனாக நடித்துள்ள ஆத்மா பேட்ரிக் ஆகியோருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கோர முகங்களுடன் திரிவதால், அவர்கள் யார் என்பதில் நம் கவனம் திரும்புவதில்லை. பின்னணியிலும் சில நூறு பேர் இடம்பெற்றுள்ளனர்.
சுரங்கம், இடிந்த ஆலை, உயிரியல் ஆய்வுக்கூடம், சிதைந்த கிராமம் உட்படப் பல்வேறு களங்கள் இதில் காட்டப்படுகின்றன. அவையனைத்தும் ‘செட்’ என்பதால், தயாரிப்பு வடிவமைப்பாளர் ரெம்போன் பால்ராஜ் குழுவினரின் உழைப்பு அதிகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒப்பனைக்குழுவினரும் கூட கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். கோரமான உருவங்களைத் திரையில் காட்ட ‘ப்ரோஸ்தடிக்’ குழுவினர் பங்களித்துள்ளனர்.
விஎஃப்எக்ஸுக்கு இடம் தந்து, நேர்த்தியான ஒளிப்பதிவைத் தர முயன்றிருக்கிறார் சிவகுமார் விஜயன். லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, இயக்குனர் தந்த காட்சிகளைக் கோர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறது.
பரபரப்பூட்டும் இசை தந்து, ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, நிறமூட்டல் உட்படப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்துள்ளன. தூத்துக்குடி வட்டார வழக்கை வெளிப்படுத்தும் வகையிலேயே பெரும்பாலான வசனங்களைத் தந்திருக்கிறது மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி, தீப்தி கோவிந்தராஜன் கூட்டணி.
ஆனால், இந்த உழைப்பையெல்லாம் மீறி நம்மைக் கவர்வதில் பின்னடைவைச் சந்திக்கிறது ‘தி வில்லேஜ்’. காரணம், கிளிஷேக்கள் நிறைந்த திரைக்கதை. அது சுவாரஸ்யமற்று இருப்பது பலரது பேருழைப்பையும் வீணாக்கியுள்ளது.
வீழ்வது யார்?
அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி, ஷமிக் தாஸ்குப்தா எழுதிய ‘தி வில்லேஜ்’ எனும் கிராஃபிக் நாவலை அடியொற்றி இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அது எத்தகைய வெற்றியைப் பெற்றது என்று தெரியவில்லை.
ஒரு ஆலையில் முறைகேடாக நடத்தப்படும் ஆய்வுகளால், அதன் கழிவுகளால் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமானவர்களாக மாறினார்கள் என்பதே இதன் அடிப்படைக் கதை. அந்தச் சூழலே ‘வினோதங்கள் நிறைந்ததாக மாறுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விளக்கங்களோ, அது நிகழ்ந்த விதமோ இதில் சொல்லப்படவில்லை.
இது போன்ற படைப்புகளில் சினிமாத்தனத்தை விட யதார்த்தத்திற்கு அதிக இடம் தரப்பட வேண்டும். இயக்குனர் மிலிந்த் ராவ் அவ்விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. திரும்பத் திரும்ப சில விஷயங்களே சுழன்று மேலெழும் வகையிலான காட்சியமைப்பை அவர் சரி செய்யவே இல்லை.
‘போனான் வந்தான் செத்தான்’ என்று ’மாநாடு எஸ்.ஜே.சூர்யா’ போல நாம் புலம்பும் அளவுக்கு, இந்த வெப்சீரிஸில் பல பேர் கொல்லப்படும் காட்சிகள் உள்ளன. அவ்வாறு அவர்கள் கொல்லப்படும்போது, நமக்கு பதைபதைப்பு வரவேண்டும். ஆனால், அப்படி எந்த உணர்வும் நமக்கு ஏற்படுவதில்லை. காரணம், அதற்கேற்ப அப்பாத்திரங்களின் முன்கதைகள் எதுவும் நமக்குச் சொல்லப்படவில்லை.
‘உருவம்’ மோகன் நடித்த 99வது திரைப்படம். அதில் அருவெருப்பான உருவத்தில் வந்தது, அவரது கேரியரையே சாய்த்தது.
அருவெருப்பூட்டும் உருவங்களைத் திரையில் காட்டுவது இதர மொழிப்படங்களில், வெப்சீரிஸ்களில் சகஜம் என்றாலும், அவ்வாறு இந்தியாவில் வெளியாகும் படைப்புகள் பெரியளவில் வரவேற்பைப் பெற்றதில்லை. அதனை மீறிய சில படைப்புகளிலும் கூட, அவற்றைக் குறைந்த நொடிகளே காட்டுவதில் கவனம் செலுத்தப்பட்டிருக்கும். 2018இல் வெளியான ‘தும்பட்’ திரைப்படம் அதற்கொரு உதாரணம்.
அப்படி எந்த வரையறையையும் இதில் இயக்குனர் மிலிந்த் ராவ் பின்பற்றவில்லை. பட்ஜெட் குறைவால் விஎஃப்எக்ஸ், ஒப்பனை போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் பதில் சொல்வாரானால், அதனை நிச்சயம் ஏற்க முடியாது. ’யாரு பார்த்த வேலை இது’ என்றே ‘தி வில்லேஜ்’ முடிந்ததும் புலம்ப வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே ‘ஸ்கிப்’ செய்து ஐந்து எபிசோடுகளை பார்த்து முடித்தால், ஆறாவது எபிசோடில் அடுத்த சீசனுக்கான குறிப்புகளை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறார் இயக்குனர். இறுதியாக, அடுத்த பாகம் உறுதி என்பதாக ‘தி வில்லேஜ்’ முடிவடையும்போது ‘திரும்பவும் முதல்ல இருந்தா’ என்றே அலறத் தோன்றுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
எக்சிட் போல் 2023 மத்திய பிரதேசம்: காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி!