சர்ச்சைக்குரிய ‘ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு நேற்று (ஜூன் 13) உச்சநீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதற்கு பல்வேறு முஸ்லீம் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அன்னு கபூர், மனோஜ் ஜோஷி, பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ‘ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, இது தொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.
இந்த படம் முஸ்லீம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 1 முஸ்லிம் உறுப்பினர் உட்பட 3 பேர் அடங்கிய குழுவை மும்பை நீதிமன்றம் நியமித்தது. மேலும், திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் முடிவில் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருந்த 2 சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கினால் திரைப்படத்தை வெளியிடலாம் என அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், ‘ஹமாரே பாரா’ திரைப்படம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி வெளியாகவிருந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பல சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ், இந்த படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ‘ஹமாரே பாரா’ என்ற திரைப்படத்தை, குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வெளியிட தடை விதித்துள்ளது. இதற்கிடையே இப்படம், ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், “ஹமாரே பாரா திரைப்படம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் அசார் பாஷா என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, “நாங்கள் காலையில் படத்தின் டிரெய்லரைப் பார்த்தோம், டிரெய்லரில் இஸ்லாம் மதத்தை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்த மனு மீதான விரைவான முடிவை எடுக்க மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகிறோம். மேலும், அதுவரை “ஹமாரே பாரா” படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, இப்படம் தொடர்பாக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் அன்னு கபூர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு பல முஸ்லீம் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதித்ததற்கு பிரபல எழுத்தாளரும், திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான சையதா சையதை ஹமீது கூறியதாவது, “நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாராட்டிற்குரியது. இந்த படம் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்துவதற்கும், வெறுப்பை அதிகரிக்கவும், குர் ஆனின் போதனைகளை சிதைப்பதற்கும் ஒரு கருவியாகும். இஸ்லாம் மதம் பெண்களுக்கு மிகப்பெரிய கண்ணியத்தையும், அதிகாரத்தையும் வழங்குகிறது” எனக் கூறினார்.
மேலும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-முஷாவரத்தின் தலைவரான டாக்டர். ஜஃபருல் இஸ்லாம் கான், “சர்ச்சைக்குரிய திரைப்படமான ஹமாரே பாரா படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஊக்கமளிக்கிறது. இந்த படம் முஸ்லீம் சமூகத்தின் ஒரே மாதிரியான பிம்பத்தை முன்வைப்பதாக அவர் விமர்சித்தார்.
“ஹமாரே பாரா படத்தை வெளியிட தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இருப்பினும் இறுதித்தீர்ப்பு என்னவாக இருக்கும் என எங்களுக்கு தெரியவில்லை.
உண்மைகளை திரித்து திரைப்படங்கள் எடுப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து திரைப்படங்களை தயாரிப்பது சிறப்பாக இருக்கும்” என ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தி சங்கத்தின் தலைவர் மாலிக் மொடாசிம் கருத்து தெரிவித்தார்.
“ஹமாரே பாரா படம் வெறும் பிரச்சாரம். இது மத உறவுகளை பாதிக்கும் ஒரு இஸ்லாமிய வெறுப்பு திரைப்படம். இது பெண்களையும் மோசமான வெளிச்சத்தில் காட்டுகிறது. ஒரு வேளை நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் இவ்வளவு குழந்தைகளைப் பெற்றிருக்கலாம்.
இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதங்கள் உண்மையில் அனைத்து சமூகங்களையும் விட வெகுவாகக் குறைந்துள்ளன” என்று மோடாசிம் கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழிசை வீடு தேடிச் சென்ற அண்ணாமலை
வயநாட்டில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி?