திரையுலகில் பிரபலங்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது சகஜமான ஒன்று. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் சூரிக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இடையே பண பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதனால் இருதரப்பும் அவ்வப்போது மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆனால் இவர்களின் மோதலுக்கு காரணம் என்ன?
‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்ததாகவும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் சூரியை அழைத்து பணத்திற்கு பதிலாக சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக சூரி கூடுதலாக 2 கோடியே 70 லட்சம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
அதன்படி சூரியும் பணம் கொடுத்தபோதும், நிலம் ஏதும் வாங்கி தராமல் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வெறும் 40 லட்ச ரூபாயை மட்டும் தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை திரும்ப தரவில்லை என்று சூரி தரப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய விஷ்ணு விஷால், “சூரி தான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
சூரி – விஷ்ணு விஷால் இடையே நடந்த இந்த மோதல் சமூக வலைதளங்களில் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.
மூன்றாவது நபரால் சண்டை! – விஷ்ணு விஷால்
இதனை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் இந்த விவகாரம் குறித்து விஷ்ணு விஷால் பேசிய போது, ”சூரியை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சூரி தரப்பில் சில விஷயங்கள் சொல்லப்பட்டது, நாங்களும் எங்கள் தரப்பில் சில விஷயங்களை விளக்கி சொன்னோம். தற்போது இருவரும் மனதளவில் ஒரு புரிதலுக்கு வந்து விட்டோம். எங்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது ஆக ஒரு நபர் வந்து விளையாடி விட்டார். அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் சூரி பாதிக்கப்பட்டது எந்த அளவு உண்மையோ அதே அளவு, என் அப்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் உண்மை. ஆனால் நாங்கள் இருவரும் தற்போது பேசி இந்த விஷயத்தை முடித்து விட்டோம்” என்று விஷ்ணு விஷால் கூறியிருந்தார்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே
நன்றிங்க @TheVishnuVishal
— Actor Soori (@sooriofficial) April 9, 2024
நடப்பவை எல்லாம் நன்மைக்கே! – சூரி
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இன்று (ஏப்ரல் 9) தனது எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா, நடிகர் சூரி ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இந்த நீண்ட கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு “நடப்பவை எல்லாம் நன்மைக்கே… நன்றிங்க விஷ்ணு விஷால்” என்று நடிகர் சூரி பதிவிட்டிருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் அறிமுக படமான வெண்ணிலா கபடி குழு படத்திலிருந்து சூரியும் விஷ்ணு விஷாலும் இணைந்து நடித்து வருகின்றனர். இவர்கள் காம்போவில் வெளியான குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் விஷ்ணு விஷாலும் சூரியும் இணைந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வைத்த இரண்டு வாதங்கள்..ஏற்க மறுத்த நீதிபதிகள் சொன்னது என்ன?