The Road Movie Review

தி ரோடு: விமர்சனம்!

சினிமா

நகம் கடிக்க வைக்கும் திரையனுபவமா?

ஏதேனும் ஒரு நாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து சில ‘த்ரில்லர்’ திரைப்படங்கள் வந்துள்ளன. அடர்ந்த காடு, மலைப்பாங்கான இடம், வன்முறை எண்ணங்கள் கொண்ட மக்கள் கூட்டம் போன்றவை அப்படங்களின் திரைக்கதையில் முக்கியக் காரணியாக அமைந்திருப்பதையும் காண முடியும். அதேபோல, நெடுஞ்சாலை அல்லது சாதாரண சாலைகளில் நிகழும் பயணங்களை முன்வைத்தும் ‘த்ரில்லர்’ படங்கள் நிறைய வந்துள்ளன.

இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்தாற்போல, நெடும்பயணம் மேற்கொள்பவர்கள் ஓரிடத்தில் எதிர்கொள்ளும் அல்லல்களை முன்வைத்து மிகச்சில படங்களே வந்துள்ளன. அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, மியா ஜார்ஜ், ஷபீர் கல்லாரக்கல், வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தி ரோடு’ திரைப்படமும் அதிலொன்று என்பதனை அப்படத்தின் ட்ரெய்லர் முன்னுணர்த்தியது.

The Road Movie Review

முழுப்படமும் அதே பாணியில் தான் அமைந்திருக்கிறதா?

தொடர் விபத்துகள்!

மதுரை அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை 44இல் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. நான்குவழிச் சாலை அமைத்தபிறகும், அவ்வாறு நிகழ்வதன் காரணம் புரியாமல் காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தவிக்கின்றனர். அந்த விபத்துகளில் எவருமே உயிர் தப்புவதில்லை. ஆனால், அந்த சம்பவங்கள் எதுவுமே கவனக் குறைவினால் நிகழ்ந்தவை அல்ல. அந்த தொடர் விபத்துகள் அனைத்துமே ஒரு வன்முறைக் கும்பலால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்கள்.

அது போன்றதொரு திட்டமிடப்பட்ட குற்றமொன்றில், கணவர் ஆனந்தையும் (சந்தோஷ் பிரதாப்) மகன் கவினையும் (மாஸ்டர் சாத்விக்) இழந்து தவிக்கிறார் பத்திரிகையாளர் மீரா (த்ரிஷா). அந்த துக்கத்தில் இருந்து வெளியேற முடியாமல் இருப்பவர், ஒருநாள் தோழி உமா (மியா ஜார்ஜ்) உடன் சம்பவ இடத்திற்குச் செல்கிறார். அங்கு அவரது கார் ரிப்பேர் ஆக, சாலையோரம் இருந்த ஒரு வீட்டில் தங்குகிறார்.

The Road Movie Review

நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைய, கணவரும் மகனும் இறந்த இடத்திற்குச் செல்கிறார். அப்போது, சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதை ஓட்டி வந்த நபர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். ‘தண்ணீர்’ கேட்டு அலறுகிறார். உடனே, தனது கார் நிறுத்தப்பட்ட இடத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகிறார் மீரா. வந்து பார்த்தால், அந்த இடத்தில் விபத்துக்குள்ளான கார் இல்லை. உடனே, இது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்.

ஏட்டு (எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும், அவர்கள் உடன் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். அங்கு விபத்து நடந்த தடயமே இல்லை. அந்த நேரத்தில், மைல்கல்லை தொட்டுப் பார்க்கிறார் ஏட்டு. அதில் காரின் சிவப்பு நிற பெயிண்ட் ஒட்டியிருந்ததைக் கவனிக்கிறார். அதன் மூலமாக, அங்கு விபத்து நடந்தது உறுதிப்படுத்தப்படுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நபர் காணாமல் போனதாகப் புகார் பதிவாகிறது. புகாரில் இருக்கும் புகைப்படத்தில் மீரா பார்த்த அதே நபர் இடம்பெற்றிருக்கிறார்.

ஒரு நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக மரணங்கள் நடைபெறுவது எப்படி? அந்த குற்றங்களின் வழியாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு போனது? ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத பெருங்கூட்டம் அதன் பின்னணியில் எவ்வாறு ஒன்றிணைகிறது? அவர்களைக் கட்டுப்படுத்துவது  யார்?

இந்தக் கேள்விக்குப் பதிலாக, மாயழகன் (ஷபீர் கல்லாரக்கல்) என்ற கல்லூரி ஆசிரியர் ஒருவரின் வாழ்வு திரைக்கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது.

பாலியல்ரீதியாக அத்துமீறியதாக, மாணவி ஒருவர் மாயன் மீது புகார் கொடுத்ததையடுத்து அவரது வாழ்வு தலைகீழாகிறது. தற்கொலை செய்யும் முடிவை நோக்கி அவர் நகர்வது கிளைக்கதையாக விரிகிறது.

இரு கதைகளும் ஒன்றிணையும்போது ‘சஸ்பென்ஸ்’ உடைய வேண்டும். ஆனால், முக்கால்வாசி படத்திலேயே அந்த ‘ட்விஸ்ட்’ என்னவென்று நம்மால் எளிதாக உணர முடிகிறது. அதுவரை வேகமாக நகரும் திரைக்கதை, அதன்பிறகு ‘போதும்பா ஓட்டம்’ என்று நின்றுகொள்கிறது.

மனம் கவரும் த்ரிஷா!

முழுக்கதையும் த்ரிஷாவைச் சுற்றியே நகர்வதற்கு ஏற்ப, அவரும் அழகாக, ஆக்ரோஷமாக, சோகமாக நடித்து நம் மனம் கவர்கிறார். அவரது உடலமைப்பு கட்டுக்கோப்பாக இருந்தாலும், முகத்தில் விழ ஆரம்பித்த சுருக்கங்கள் வயதைக் காட்டிக்கொடுத்து விடுகின்றன. அதற்கேற்ற வகையில் நடுத்தர வயது பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வருவது த்ரிஷாவின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

The Road Movie Review

சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு, தமிழில் பெயர் சொல்லும்படியான வேடத்தை இதில் பெற்றிருக்கிறார் ஷபீர் கல்லாரக்கல். அவரது நடிப்பு, அந்த பாத்திரத்தின் மீது அனுதாபத்தையும் ஆத்திரத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

மியா ஜார்ஜுக்கு இதில் த்ரிஷாவின் தோழி வேடம். ஒரு பாத்திரமாக, அவரது பங்களிப்பு ஓகே ரகம். அதேநேரத்தில், அவரது கணவராக வரும் விவேக் பிரசன்னாவை ஊறுகாய் போல பயன்படுத்தியிருப்பது ஏனோ?

சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் சாத்விக் இருப்பு, சட்டென்று நம் மனம் கவர்கிறது. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரது நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும்.

இவர்கள் தவிர்த்து குட்லக் சுப்பிரமணி, கருப்பு நம்பியார், வினோத் சாகர், செம்மலர் அன்னம், கல்லூரி மாணவியாக வரும் லட்சுமி பிரியா, திருநங்கையாக வரும் நேகா ஷாகின் என்று படத்தில் இடம்பெற்ற பல கலைஞர்கள் மனதில் பதிகின்றனர். ஷபீரின் நண்பராக நடித்தவர் அதில் முக்கியமானவர்.

ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் யதார்த்தமான காட்சியாக்கத்தை நிறைக்கத் தேவையான அளவுக்கு உதவியிருக்கிறது சிவா யாதவின் கலை வடிவமைப்பு.

The Road Movie Review

வசனக் காட்சிகளில் அமைதியாக நகரும் கே.ஜி.வெங்கடேஷின் கேமிரா, ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரப்பாக ஓட்டமெடுக்கிறது. காட்சிகளின் தன்மைக்கேற்றாற் போல வெளிச்சத்தையும் இருளையும் திரையில் நிரப்புகிறது.

முக்கால்வாசி படம் வரை சீராகக் கதை சொல்ல வகை செய்திருக்கிறது ஏ.ஆர்.சிவராஜின் படத்தொகுப்பு. ஆனால், இறுதியாக வரும் கால்வாசி பகுதியில் திருப்திகரமான அனுபவத்தை ஊட்டத் தவறியிருக்கிறது.

பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் இப்படத்தின் முக்கியமான அம்சம். குறிப்பாக, படத்தில் ஏகப்பட்ட விபத்துகள் இடம்பெற்றிருப்பது ஒரு சவால் என்றே சொல்ல வேண்டும்.

இவர்கள் அனைவரையும் தாண்டி, ‘தி ரோடு’ படத்தைப் பரபரப்பான த்ரில்லர் ஆக மாற்றும் முதல் காரணமாகத் திகழ்பவர் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம். இதில், அவரது பெயருக்கு முன்னால் ‘இசை அரக்கன்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எழாத அளவுக்குப் பிரமாதமான பிண்ணனி இசையைத் தந்திருக்கிறார் மனிதர்.

ஓ விதி, நகராத நொடியோடு பாடல்கள் கதையோட்டத்தோடு சேர்ந்து பயணிக்கின்றன.

முன்பாதியில் இடம்பெற்ற த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல் வாழ்க்கை நிகழ்வுகள் திரைக்கதையை மெதுவாக நகர்த்தக் காரணமாக இருக்கின்றன; அதேநேரத்தில், அவை நேர்த்தியாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. இடைவேளை மற்றும் அதன்பிறகான ஆக்‌ஷன் காட்சிகளை உயிரோட்டமிக்கதாக மாற்றவும் காரணமாகின்றன.

திரைக்கதையில் சொல்லப்பட்ட முடிச்சுகளும் அவை விடுபடும் இடங்களும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். ஆனால், அதன்பிறகுதான் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். அதனால், படத்தின் இறுதிவரை நகம் கடிக்க வைக்கும் காட்சியனுபவம் ’மிஸ்’ ஆகியிருக்கிறது.

லாஜிக் மீறல்கள்!

ஒரு கும்பல் திட்டமிட்டு சாலை விபத்துகளை நிகழ்த்துவதுதான் இக்கதையின் ஆதார மையம். ஆனால், அது எப்படி தடயவியல் மற்றும் காவல் துறையினரின் கவனத்திற்கு வராமல் போனது என்பது இக்கதையில் விவரிக்கப்படவில்லை. அந்த விஷயத்தில் லாஜிக் மீறல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

The Road Movie Review

இந்தக் கதையில் விவேக் பிரசன்னாவின் பாத்திரத்திற்குப் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை. போலவே, லட்சுமி பிரியாவின் இருப்பும் அடிக்கோடிட்டுக் காட்டப்படவில்லை. அதனால், கிளைமேக்ஸ் பகுதி ‘சவசவ’ என்று நகர்கிறது.

மிக முக்கியமாக, இறுதியாக வரும் ஆக்‌ஷன் காட்சி முழுமையாகப் படம்பிடிக்கப்படாதது போன்ற உணர்வு எழுகிறது. த்ரிஷாவின் முகபாவனைகளோடு அமைந்திருக்க வேண்டிய முதல் கிளைமேக்ஸ் முழுமையற்று இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாகம் வருவதற்கேற்ப ‘செகண்ட் கிளைமேக்ஸை’ காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஷபீர் கல்லாரக்கல் ஏற்ற பாத்திரத்தின் மன மாற்றத்தைத் துல்லியமாகச் சொல்லவில்லை திரைக்கதை. போலவே, படத்தின் நீளம் அதிகமாகும் என்ற பயத்தில் சில காட்சிகள், ஷாட்கள் ‘கட்’ செய்யப்பட்டிருக்கின்றனவோ என்ற எண்ணமும் நமக்கு உண்டாகிறது. பாதிக்கிணறு தாண்டிய பிறகு, படம் சறுக்குமிடமும் அதுதான். அதனைச் சரி செய்திருந்தால், ‘தி ரோடு’ ஒரு சிறப்பான ‘த்ரில்’ அனுபவத்தைத் தந்திருக்கும்.

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்!

துணை முதல்வர்  வாகனம் மீது தக்காளி வீசிய விவசாயிகள்: காரணம் என்ன?

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *