கடந்த ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய நடிகர் விஜய் வாக்குசாவடிக்கு வந்த போது வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் காட்சியளித்தார். கையில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு வகையான பதட்டம், சோர்வு அவரது முகத்தில் தெரிந்தது.
ஆனால் அதற்கான காரணம் என்ன என்று யூகிக்க முடியவில்லை. சைக்கிள் டிரைவர் வராததால் காரில் வந்தார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்ச்சிக்கப்பட்டார் விஐய்.
அவரது சோர்வுக்கும், பதட்டத்திற்கும் காரணம் என்ன என்பது குறித்த அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்போது ரிஸ்க்கான ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கும்போது டூப் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதை மறுத்து அந்தச் சண்டை காட்சியில் நானே நடிக்கிறேன் என்று விஜய் பிடிவாதமாகச் சொல்லி அப்படியே செய்திருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. தலையில் பலத்த அடி மட்டுமின்றி கை கால்களில் பெரும் சிராய்ப்புகள் ஏற்பட்டதோடு ஓரிரு இடங்களில் எலும்பிலும் அடிபட்டிருக்கிறது. அங்கேயே முதலுதவிகள் செய்து கொண்டு சென்னை வந்துவிட்டாராம்.
சென்னை வந்த பின் மருத்துவ சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. வாக்களிக்க வந்தபோது தலையில் ஏற்பட்ட காயம் தெரியாமல் இருக்கும் வகையிலான முடியலங்காரத்துடன், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டுதான் வாக்களிக்க வந்திருக்கிறார். அதனால்தான் வழக்கத்துக்கு மாறான பதட்டம், சோர்வு அவரிடம் தெரிந்திருக்கிறது.
உடலெல்லாம் அடிபட்டும் கட்சி தலைவர் வாக்களிக்கவில்லை என்றால் விமர்சனத்திற்கு உள்ளாவோம் என்பதால் வாக்களிக்க வந்த விஜய் அதன்பின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா? என்றால் இல்லை என்கின்றனர்.
அடுத்த ஓரிரு நாட்களிலேயே சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. விஜய் ஓய்வெடுத்தால் உடன் நடிக்கும் நடிகர்களின் தேதிகளில் சிக்கல் ஏற்படும் என்பதால் விஜய் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமானுஜம்
ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!
வெறுப்புப் பேச்சு : மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!