பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் அஜீத் குமார் நடித்துள்ள துணிவு, விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு என இரண்டு படமும் தெலுங்கில் மூன்று படங்களும் வெளியாகும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
500 கோடி ரூபாய் செலவில் அகில இந்திய அளவில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதி புரூஷ் படம் பொங்கல் வெளியீடு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இராமாயணத்தை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்திருக்கிறார்
பொங்கல் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
குழந்தைகள் பார்க்கும் சேனல்களின் லோகோவுடன் ஆதிபுரூஷ் டீசர் காட்சிகளை இணைத்து வந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த கேலி கிண்டல்கள் படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தன.
குறிப்பாக இயக்குனர் ஓம் ராவத், இந்த ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஆதிபுரூஷ் படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
மோசமான கிராஃபிக்ஸை தூக்கி விட்டு, தரமான கிராபிக்ஸ்சுடன் படத்தை கொண்டு வர படக்குழுவினர் முயற்சித்து வருகிறார்களாம்.
இதனால்தான் படம் பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது. 2023 ஏப்ரலில் படத்தை வெளியிடும் திட்டத்துடன் படக்குழுவினர் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
கிராபிக்ஸ் பிரச்சினை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மாநில மொழி படங்கள் திரையரங்குகளை ஆதிக்கம் செய்யும் என்பதால் ஆதிபுருஷ் போன்ற பன்மொழி படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும்.
இதனால் வசூல் பாதிக்கப்படும் என்பதும் காரணம் என்கிறது திரைத்துறை வட்டாரம். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.
இராமானுஜம்
விநியோக உரிமை: பிறமொழி படங்களையும் கைப்பற்றும் ரெட் ஜெயண்ட்!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!