சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா

சினிமா

தமிழ் திரை உலகில் ஒருவர் பன்முகம் கொண்டவராக வலம் வருவது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை அல்லது அதனை சாத்தியப்படுத்தியவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரில் முக்கியமானவர் நடிகர் மனோபாலா.

சிறுவயதில் ஓவியர், சிறுகதை எழுதும் திறமை கொண்ட மனோபாலா திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல்வேறு அவதாரங்களில் தன்னை வெற்றிகரமாக அடையாளப்படுத்தியுள்ளார்.

கவர்ந்து இழுக்கும் கேமிராவுக்கு பின்னும், முன்னும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனோபாலா தனது 70வது வயதில் இன்று மறைந்துள்ளார்.

மனோபாலா ஆரம்பகால வாழ்க்கை!

1956 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மனோபாலா. தனது 16வது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவர், 1970 களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அப்போது தனக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நட்பால் அவருக்கு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அதன்மூலம் 1979 ஆம் ஆண்டு வெளியான ’புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அந்த படத்தில் பஞ்சாயத்து மெம்பராகவும் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

உதவி இயக்குநராக பணியாற்றிக்கொண்டே, பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இயக்குநர் அவதாரம்!

அதன்பின்னர் கார்த்திக்-சுஹாசினி நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ’ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக தன்னை அடையாளம் காட்டினார் நடிகர் மனோபாலா. 

தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த ’சிறைப்பறவை’, ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ’மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ’பிள்ளை நிலா’ உள்பட சுமார் 40க்கும் மேலான திரைப்படங்களையும், பஞ்சவர்ணம், புன்னகை உள்ளிட்ட 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார் மனோபாலா.

கடைசியாக 2002ஆம் ஆண்டு ஜெயராம், வடிவேலு நடித்த ’நைனா’ திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.

மனோபாலாவை மாற்றிய வில்லன்!

அதே ஆண்டில் அஜித் நடிப்பில் வெளிவந்த ’வில்லன்’ திரைப்படத்தில் நடித்த மனோபாலா, அதன்பிறகு தமிழ் சினிமாவில் முழு நேர குணச்சித்திர நகைச்சுவை நடிகராக பரிணமிக்க தொடங்கினார்.

சூர்யாவுடன் பிதாமகன், ரஜினியுடன் சந்திரமுகி, விஜயுடன் நண்பன், துப்பாக்கி, தலைவா, பிகில், கார்த்தியுடன் சிறுத்தை, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் என முன்னணி நடிகர்களுடன் இவர் கலக்கிய படங்கள் ஏராளம்.

மேலும் கலகலப்பு, அலெக்ஸ் பாண்டியன், அரண்மனை, காஞ்சனா ஆகிய திரைப்படங்களில் தனது ஒல்லியான தேகத்துடன் மனோபாலா திரையில் அதகளம் செய்த நகைச்சுவை காட்சிகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரையுலகம் என சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

the life journey of director actor manobala

திறமைசாலிகளுக்கு அடையாளம்

மேலும் இயக்குநர், நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி சில அற்புதமான படங்களை தயாரிக்கவும் செய்தார். கடந்த 2014 ஆவது ஆண்டில் வெளியான ’சதுரங்க வேட்டை’ மனோபாலா தயாரித்த முதல் திரைப்படமாகும். அதனையடுத்து ’பாம்பு சட்டை’, ’சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

அத்துடன் தன்னை வளர்த்த தமிழ் சினிமாவிற்கு பல்வேறு திறமைசாலிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார் மனோபாலா. 1992 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளிவந்த செண்பகத் தோட்டம் திரைப்படத்தில் நாராயணன் என்பவரை ’சிற்பி’ என்ற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

the life journey of director actor manobala

அதன்பின்னர் சதுரங்க வேட்டையின் மூலம் இன்று தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹெச்.வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தியவரும் இவரே.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் வெளிவந்த ’தி லயன் கிங்’ படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரமான சாசூ கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து ஹாலிவுட்டிலும் தனது குரல் பதித்தார் மனோபாலா.

இப்படி இயக்குநர், நடிகர் தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முக கலைஞராக வலம் வந்த மனோபாலாவிற்கு உஷா என்ற மனைவியும், ஹரீஷ் என்ற மகனும் உள்ளனர்.

the life journey of director actor manobala

மனோபாலாவின் கடைசி நாட்கள்!

கடந்த ஜனவரி மாதம் நகைச்சுவை நடிகர் மனோபாலா நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார்.

மனோபாலா தனது கடைசி திரைப்படமாக நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த அப்டேட்டை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன், அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்..” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மனோபாலா இன்று (மே 3) உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார். கடந்த 15 நாட்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் எல்.வி.பிரசாத் சாலையில் உள்ள தனது வீட்டில் மனோபாலா இன்று மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா முதல் அனைத்து திரைநட்சத்திரங்களும் நடிகர் மனோபாலா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

the life journey of director actor manobala

டிவி முதல் யுடியூப் வரை

50களில் பிறந்த ஒரு மனிதன் இன்றைய தொழில்நுட்பத்துடனும், இன்றைய இளம் இயக்குநர்களுடன் பழகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது கடினமான ஒன்று… ஆனால் இந்த இரண்டையும் வெற்றுக்கதைகள் என்று நிரூபித்து காட்டியுள்ளார் மனோபாலா.

4 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர்களை பெற்று Manobala’s Waste Paper என்ற யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு பிரபலங்களுடன் நேர்காணல் செய்துள்ள மனோபாலா, தான் இறப்பதற்கு முந்தைய நாளிலும் கூட நகைச்சுவை நடிகை கோவை சரளாவுடன் செய்த நேர்காணலை வெளியிட்டுள்ளார்.

மேலும் திரையுலகில் மூத்த நடிகர் ஆனாலும், ஹெச்.வினோத்தை அறிமுகப்படுத்திய மனோபாலா, லோகேஷ் கனகராஜ், அட்லீ போன்ற இளம் ஹீரோக்களுடனும் நட்பு பாராட்டி அவர்களை ஊக்குவித்துள்ளார்.

80 களில் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த மனோபாலா, கடந்த 45 ஆண்டுகளாக டிவி, சினிமா, தற்போதை யூடியுப் வரை என அனைத்து தளங்களிலும் தனது கடைசி நாட்கள் வரை உற்சாகமாக உழைத்துள்ளார். எனவே தொடர்ந்து ’உழைத்தால் முன்னேறலாம்’ என்பதற்கு ஒரு நட்சத்திர அடையாளமாக மக்கள் மனதில் மனோபாலா என்றும் வாழ்வார் என்பதே அவரது வாழ்க்கை உணர்த்தும் உண்மை!

கிறிஸ்டோபர் ஜெமா

’பேரிழப்பு’ : மனோபாலாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

மரணத்தை கூட நகைச்சுவையாக பார்த்த மனோ பாலா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0