‘தி லெஜெண்ட்’ : விமர்சனம்!

சினிமா

தமிழ் சினிமா ஆவலுடன் எதிர்பார்த்த தி லெஜெண்ட் சரவணன் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 2000ம் திரைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.  சுமார் 40 கோடி ரூபாய் வரை இந்தப் படத்தின் தயாரிப்பு, வெளியீடு, விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் அன்று அதிகாலை காட்சி திரையிடப்படும்.  சாதனை நிகழ்த்திய  நடிகர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி, உச்ச கட்ட விளம்பரம் காரணமாக அருள்சரவணன் நடித்த முதல் படத்திற்கே கிடைத்திருக்கிறது.

 சென்னை நகரில் காலை நான்கு மணி காட்சி திரையிடப்பட்டிருக்கிறது.  இணையம், தொலைக்காட்சி, வீடியோ வலைத்தளங்கள் அனைத்திலும் தி லெஜெண்ட் சரவணன் திரைப்பட வெளியீடு பேசும் பொருளாக கடந்த ஒரு வார காலமாக இருந்து வருகிறது.

லெஜண்ட் எப்படி?

சிறந்த திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை என்பது ஒருங்கிணைக்கப்பட்டால் சாமான்யன் நடித்தால் கூட படம் வெற்றியடையும்.  ஆனால் மேற்குறிப்பிட்ட எதுவும் படத்தில் இல்லை என்பதுதான் தி லெஜெண்ட் சரவணன் படத்தின் குறை.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை பல வடிவங்களில் கையாளப்படும் மக்களுக்கான கண்டுபிடிப்பு என்கிற ஒருவரி கதைதான்.  பிகரை நம்பி படமெடுக்கும் தமிழ் சினிமாவில்  “சுகரை” நம்பி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் 19 வருடங்களுக்குபின் திரைப்படம் இயக்கியிருக்கும் ஜெ.டி.ஜெர்ரி இரட்டை இயக்குநர்கள்.

படத்தின் நாயகன் சரவணனாக அருள் சரவணன். நாயகிகளாக துளசியாக கீத்திகா, மதுவாக ஊர்வசி ரௌட்டெலா. இவர்களுடன் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் குணசித்திர நடிகர் நடிகைகளான விஜயகுமார், நாசர், பிரபு, லதா, லிவிங்ஸ்டன்,சச்சு, விவேக், ரோபோ ஷங்கர், மயில்சாமி, யோகி பாபு, முனிஸ்காந்த், தீபா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஹரிஷ் பேரடி, வம்சி கிருஷ்ணா,  சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அஷ்வத் குமார், மானஸ்வி, அமுதவாணன் என ஒட்டு மொத்தமாய் வருகிறார்கள். வந்த வேகத்தில் போகிறார்கள். பெரும்பாலும் இவர்களின் ஒரே வேலை கதாநாயகன் துதி பாடுவது.


இவர்கள் போதாது என கிளாமருக்கு லக்‌ஷ்மி ராய், யாஷிகா ஆனந்த் என ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகிகள் வேறு.   ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், படத்தொகுப்புக்கு ரூபன் பாடல்களுக்கு வைரமுத்து, கார்க்கி, பா.விஜய், சினேகன், கபிலன் சண்டைக்கு அனல் அரசு  எனத் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப  குழுவும் படத்தில் இருக்கிறது. 

ஆனால், அதற்கான தேவை என்பது படத்தில் சுத்தமாய் இல்லை என்பதே சோகம்.

கதைதான் என்ன?

பிரபலமான விஞ்ஞானி சரவணன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையில் அரசு வழங்க விரும்பும் அனைத்து உயர் பதவிகளையும் புறக்கணித்து,  சொந்த ஊர் திரும்புகிறார். அங்கு நிகழும் அவருக்கு நெருக்கமான நண்பரின் உயிர் இழப்பு, சரவணனை சர்க்கரை நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. அதற்கான முயற்சியில் அவர் இறங்க, இறுதியில் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா? அதற்கு தடையாக இருக்கும் மருந்து மாஃபியா கும்பல் அவரை என்ன செய்தது? இதையெல்லாம் சமாளித்த டாக்டர் சரவணன் எப்படி ‘தி லெஜண்ட்’ சரவணன் ஆனார் என்பது தான் படத்தின் திரைக்கதை. 

படுத்தி எடுக்கும் சரவணன் 

அறிமுக நாயகன் சரவணணை ஆக்க்ஷன் நாயகனாக்கும் ஆசையில் அவரை மையமாக கொண்டே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  அதனை சுமந்து படம் முழுவதும் பார்வையாளனை கட்டிப்போடக் கூடிய திரைக்கதை இல்லை என்பதுடன் சினிமாவுக்கான உடல் மொழியும், குரல் மொழியும் சரவணனிடம் இல்லை. படத்தை நகர்த்தி செல்ல அவரது நடிப்பு நாடித்துடிப்பு போல இருந்திருக்கவேண்டும்.  ஆனால் அவரது செயற்கைத் தனமான நடிப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை.

கண்ணீர் சிந்தி அழும் காட்சிகளிலும், எதிராளியிடம் கோபமாக வசனங்களை பேசவேண்டிய காட்சியிலும், காதல், காமெடி நடனம் என எல்லா இடங்களிலும் உணர்ச்சி வறட்சியாகி பார்வையாளனை படுத்தி எடுக்கிறது. எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவங்களை காட்டி நம்மை பயமுறுத்துவதில் லெஜெண்டாக இருக்கிறார் சரவணன்.

நாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் அவர்கள் வரும் காட்சிகளுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
 நடிகர் விவேக் (அவரது இறுதிப்படம்) வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை. அவருக்கு மட்டும் படப்பிடிப்பின்போது பதிவான லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

தி ’லெஜண்ட்’ படத்தின் மிகப்பெரிய பிரச்சினை தொடர்பு இன்றி நகரும் அதன் காட்சியமைப்புதான். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு முழுப் படமாக நகராமல், விளம்பரப் படம் போன்று தனித்தனி காட்சிகளாக நகர்கிறது. படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என புரியவில்லை.  காட்சிகளை  மட்டும் எழுதிவிட்டு பின்னர் அதை ஒட்டி திரைக்கதையாக்கி இருப்பார்களோ என தோன்றுகிறது.   துன்புறுத்தும் காமெடி காட்சிகள், அவன் சாதாரண ஆள் இல்ல என்ற பில்டப் வசனங்கள், தேவையில்லாத பாடல்கள் என படம் முழுக்க பார்வையாளன் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

 இடையிடையே, நாசர் வேறு திரையில் தோன்றி வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாமல் ‘வெல்டன் மை டியர் பாய்’ என ‘பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ என்பதைப்போல நாயகனுக்கு அவ்வப்போது எனர்ஜி கொடுத்து செல்கிறார். ஒரு காட்சியில் நடந்து வரும் நாயகன் அதை கட் செய்தால் ஓடும் ரயிலில் சண்டை போடுகிறார்.  குலு மணாலியில் இருப்பவர் திடீரென அவர் சொந்த கிராமத்தில் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒருவேளை படம் சூப்பர் ஹீரோ படமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

 எம்.ஜி.ஆரைப் போல சாட்டை எடுத்துக்கொண்டு தோன்றுவதும், காட்சிக்கு காட்சி  ஒரு காஸ்டியூம் மாற்றுவதும், முழுக்க முழுக்க ஹீரோயிசத்தை மையப்படுத்திய ஓவர் டோஸ் திரைக்கதையை தாங்குகிற அளவிற்கு கதாநாயகன் அருள் சரவணன் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் இல்லை என்பது இயக்குநர்களுக்கு தெரியாமல் போனது புரியவில்லை.

மொத்தத்தில் மருந்தை கண்டிபிடித்து மக்களை காப்பாற்ற நாயகன் போராடுகிறார். ஆனால் பார்வையாளர்களை காப்பாற்றுவது குறித்து அவரும், படக்குழுவினரும் சிந்திக்கவில்லை.   இதன் மூலம் பார்வையாளர்களை ‘தி லெஜண்ட்’ ஆக்கியிருக்கும் விதத்தில் தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறது படம்.

வசூல் எப்படி?

கடந்த ஒரு வார காலமாக விளம்பரங்கள், ஊடகங்களால் உயர்த்தி பிடிக்கப்பட்ட “தி லெஜெண்ட் சரவணன் ” படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தொடக்க காட்சிக்கு அரங்கம் நிறையவில்லை என்றாலும் குறைந்தபட்ச பார்வையாளர்கள் தியேட்டருக்கு வருகை தந்தனர்.  அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை இரட்டை இலக்கத்திற்கு மாறியது.

 திரையரங்கில் ஒரு திரைப்படம் தொடர்ச்சியாக ஓட்டப்படவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 டிக்கட்டுகளாவது விற்பனை ஆகவேண்டும்.  அது குறையாமல் திரையரங்கில் படத்தை தொடர வைப்பதற்கான முயற்சியை கதாநாயகன் அருள் சரவணன் தரப்பிலும், அவர் சமூகம் சார்ந்த அமைப்புகளும் எடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் தமிழகத்தில் 78 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது

இராமானுஜம்

+1
0
+1
4
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0