கடந்த 4 வருடங்கள் கடினமான தருணம் – தாயின் நிலை குறித்து திவ்யா சத்யராஜ் உருக்கம்!
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அடிக்கடி பகிர்ந்து வருவார்.
சமீபத்தில் தன்னுடைய தாயார் கோமாவில் இருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய தாயாரின் தற்போதைய நிலை குறித்து மற்றொரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடைய தாயாரின் உடல்நிலை பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகள் எங்களுக்கு மிகுந்த சவாலான காலகட்டமாக அமைந்தது. எங்கள் வீட்டிலேயே தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கோமா நிலையில் உள்ள எனது அம்மாவை கவனித்து கொள்கிறேன்.
இது கடினமான விஷயம். எனது பெற்றோரை பாதுகாக்க இந்த உலகில் எதையும் மாற்றி அமைப்பேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வலியும் வேதனையும் நிறைந்த காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன். தற்போது, ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகப் பிரிவினருக்கு சத்தான உணவுகள் கிடைக்க தொண்டு நிறுவனம் ஒன்றை நான் தொடங்கி இருக்கிறேன். நான் இயல்பாக மாறவும் உதவி உள்ளது. எதை கண்டும் அச்சப்பட வேண்டாம் என்று இப்போது உணர்ந்துள்ளேன்.
இருள் சூழ்ந்த இந்த நெடிய சாலையில் சிறு வெளிச்சத்தை என்னால் பார்க்க முடிகிறது. அதை நான் எட்டும் போது, நான் அந்த நல்ல செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
திவ்யாவின் நல்ல செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அவருடைய தாயார் உடல்நிலை விரைவில் குணமாகி அவர் பழைய நிலைக்கு வருவார் என்று பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி
’விஜய் வருகையால் பயமில்லை’ : லண்டனில் இருந்து திரும்பிய அண்ணாமலை பேட்டி!