பூதத்தைக் கிளப்பும் கதை!
எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வெளியான ஒரு ட்ரெய்லரே ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மீது ரசிகர்களின் ஒட்டுமொத்தக் கவனமும் திரும்பக் காரணமாக இருந்தது.
அதே சூட்டோடு தற்போது நாடு முழுக்க அப்படம் வெளியாகியிருக்கிறது. நீதிமன்றங்களில் அதன் வெளியீட்டுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டபோதும், அவற்றை மீறி திரையரங்குகளை வந்தடைந்திருக்கிறது. தனித் திரையரங்குகளில் இப்படம் வெளியாகாத போதும், சென்னையின் குறிப்பிட்ட சில மல்டிஃப்ளெக்ஸ்களில் திரையிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராகச் சில இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்தின. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் போலவே இதுவும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டின.
ஒரு பெரிய கோடு இருக்கிறது. அதனை அழிக்காமல் சிறிதாக்க வேண்டுமென்றால், அதனை விடப் பெரிதாக ஒரு கோட்டை அருகில் வரைவது ஒரு உத்தி. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பைப் பார்த்தபிறகு, அதனை மிகச்சிறிதாக மாற்றும் யோசனையின் விளைவாக, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சுதீப்தா சென். அந்த அளவுக்கு, படம் முழுக்க இஸ்லாம் எதிர்ப்பு நிறைந்திருக்கிறது.

காசர்கோட்டில் நடக்கும் கதை!
‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லரில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருந்ததோ, அதுவே படத்திலும் நிறைந்திருக்கிறது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாலினி (அடா சர்மா) எனும் பெண் காசர்கோட்டில் இருக்கும் ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்கிறார். அந்தப் பெண்ணுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள தாய், பாட்டி இருவர் மட்டுமே இருக்கின்றனர். விடுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரின் மகளான கீதாஞ்சலி (சித்தி இத்னானி), கோட்டயத்தைச் சேர்ந்த நிமா மேத்யூஸ் (யோகிதா பிஹானி) மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த ஆசிபா (சோனியா பலானி) ஆகிய மூன்று பெண்களோடு அறையைப் பகிரும் வாய்ப்பு கிடைக்கிறது.
கல்லூரிக் காலத்தில் ஆசிபா தன் மதம் பற்றிக் கூறும் ஒவ்வொரு விஷயமும் ஷாலினியை ஈர்க்கிறது. ஒருமுறை மால் ஒன்றுக்குச் செல்லும்போது ஷாலினி, நிமா, கீதாஞ்சலியை மானபங்கப்படுத்துகிறது ஒரு கும்பல். அதன்பிறகு, ஹிஜாப் அணிவதே பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று ஆசிபா சொல்வதை கீதாஞ்சலியும் ஷாலினியும் நம்பத் தொடங்குகின்றனர்.
ஆசிபாவின் வழிகாட்டுதலில் மெல்ல இருவரும் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். ஆனால், நிமா மட்டும் அவர்களிடம் இருந்து விலகி நிற்கிறார். ஒருகட்டத்தில் ஆசிபாவின் நண்பர்கள் அவர்களுக்கு அறிமுகமாகின்றனர். அவர்களில் ஒருவரான ரமீஸ், ஷாலினி இடையே காதல் முளைக்கிறது. ஒருகட்டத்தில் ஷாலினி கர்ப்பமாகிறார். அதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால், அது நடைபெறவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து, ஆப்கானிஸ்தான் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் அப்போது, தன் பெயர் பாத்திமா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்குகிறார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் பகிரும் விதமாக மொத்தக் கதையும் விரிகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், இப்படம் மதமாற்றத்தை விமர்சிப்பது போன்று தோன்றலாம். ஆனால், படத்தில் காட்சிமொழிக்கான முக்கியத்துவத்தைக் காட்டிலும் பிரசார நெடியே மேலோங்கி நிற்கிறது.
அடா நடிப்பு!
மொத்தப் படமும் அடா சர்மா ஏற்ற ஷாலினி பாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. அதற்கேற்ப, அவரும் துறுதுறு மாணவியாக, பருவத்திற்கே உரிய குறும்புகள் கொண்ட பெண்ணாக, தத்துவார்த்தமான விளக்கங்களைத் தேடும் மனுஷியாக, தன் நிலையை விளக்கப் போராடுபவராகப் படத்தில் தோன்றியிருக்கிறார். ’அடடா’ என்று அசரும் அளவுக்கு பார்வையாளர்களை எளிதில் வசீகரிக்கிறது அவரது நீண்ட, நெடிய நடிப்பு அனுபவம். படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கும் அதுவே காரணமாக அமைந்திருக்கிறது.
அடாவுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடிக்கிறார் சித்தி இத்னானி. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக வந்தவர். இவரைப் போலவே யோகிதா பிஹானி, சோனியா பலானி பாத்திரங்களும் அழுத்தமானதாகப் படைக்கப்பட்டுள்ளன.
நால்வரது நடிப்பே கிட்டத்தட்ட 70 சதவீதக் காட்சிகளை நிறைக்கிறது; அடாவின் தாயாக நம்மூர் தேவதர்ஷினி தோன்றியுள்ளார். இவர்கள் தவிர்த்து அடாவின் கணவராக வருபவர், காதலராக நடித்தவர் உட்பட இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் தோன்றுகின்றன.
நடிப்புக் கலைஞர்கள், படமாக்கப்பட்ட களங்கள் தவிர்த்து இப்படத்தில் பெருஞ்செலவு என்று எதுவும் தென்படவில்லை. ஆனால், முன்பின்னாக நகரும் திரைக்கதைக்கேற்பக் காட்சிகளை செறிவானதாகக் காட்டியிருக்கிறது பிரசாந்தனு மொகபத்ராவின் ஒளிப்பதிவு. சஞ்சய் சர்மாவின் படத்தொகுப்பு மிகக்கூர்மையாகக் கதை சொல்வதிலும் காட்சிகளை முடிப்பதிலும் கவனம் காட்டியிருக்கிறது.
வீரேஷ் ஸ்ரீவல்சாவின் இசையில் வெளியான பாடல்கள் மலையாளத் திரையிசையை நினைவூட்ட, மெலடி மெட்டில் மனம் கவர்கிறார் பிஷாக் ஜோதி. பிஷாக்கின் பின்னணி இசையில் ரஹ்மானின் சாயல் நிறையவே தென்படுகிறது.
என்னதான் பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்தி கதை சொன்னாலும், இடைவேளைக்குப் பின் திரைக்கதை நகர்வதில் தொய்வு அதிகம். அதனால், பெரும்பாலான இடங்களை வசனங்களே நிரப்புகின்றன. அவை சர்ச்சைக்குரிய வகையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் பஷ்டூன் நகரிலுள்ள ஒரு வீட்டினுள் நுழையும்போது, அங்கு சிதார் போன்ற ஒரு இசைக்கருவியைப் பார்க்கிறார் நாயகி. ‘இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இசை போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் தரலாமா’ என்று அவர் கேட்க, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம் என்று பதில் சொல்கிறார் அந்த வீட்டின் தலைவி. ‘தி கேரளா ஸ்டோரி’ பேசும் விஷயங்கள் எந்த அளவுக்குச் சர்ச்சைக்குரியவை என்பதற்கான குறைந்தபட்சப் பதம் இதுவே. அதேநேரத்தில், நாடகத்தனமான பாத்திரப் படைப்பும் செயல்பாடுகளும் சீரியல் பார்க்கிறோமோ என்ற உணர்வை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.
கிளம்பும் பூதம்!

காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட் சமூகத்தினர் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்ததை, அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழலைப் பேசியது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. அப்படத்தில் இஸ்லாமிய வெறுப்பு என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. சினிமா மொழியை மிகச்சீரிய வகையில் அப்படம் கைக்கொண்டிருந்ததும் அதற்கொரு காரணம். ஆனாலும், விமர்சகர்களின் நுண்ணிய அவதானிப்பினால் அதற்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மாறாக, அதைவிடப் பல மடங்கு எதிர்ப்பை நிறைத்தவாறு வெளியாகியிருக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’. மிக நேரிடையாக, பிரசாரத் தொனியில் படத்தின் திரைக்கதை வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்துத்துவத்தை வெளிப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பொதுவுடைமைச் சித்தாந்தங்களால் இந்து மதத்தைச் சார்ந்த இளைய தலைமுறையினர் புராண இதிகாசங்களைக் கொஞ்சமும் அறியாதவர்களாக வளர்கின்றனர் என்று குற்றம்சாட்டுகிறது ‘தி கேரளா ஸ்டோரி’.
படத்தின் முடிவில், சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் கற்பனையல்ல என்று சொல்லும் வகையில், சம்பந்தப்பட்ட மனிதர்களின் கருத்துகளாகச் சில விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே, இப்படத்தில் கதை சொல்லப்பட்ட விதம் ’அமைதியின்மை’ எனும் பெரும்பூதத்தைத் தட்டியெழுப்பும் வகையில் உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கும் நோக்கில் கேரளாவில் இளம்பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளைப் பின்னணியாகக் கொண்டுள்ளது இப்படம். வழக்கமான கமர்ஷியல் படங்களில் கையாளப்படுவது போன்று இக்கருவைப் பெரிதாக சர்ச்சைகள் உருவாகாத வகையில் திரைக்கதை ஆக்கியிருக்க முடியும். அதைத் தவிர்த்து, நேரடியாக மத அரசியலை முன்னெடுத்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த படத்தை இந்தியச் சமூகம் எப்படி கடந்து செல்லப் போகிறது எனும் கேள்வியைப் பூதாகரமாக்கியிருக்கிறது.
உதய பாடகலிங்கம்