தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் குறிப்பிட்ட மால்களில் மட்டுமே வெளியாகிறது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் வணிக சினிமாவை கடந்து படைப்புக்காக பாராட்டுக்களையும், விருதுகளையும் குவிக்க கூடியது மலையாள திரையுலகம். இந்தியாவில் அதிகமான மத மோதல்கள் நிகழும் மாநிலங்களில் கேரளமும் இடம் பெறுகிறது.
அரசியல், சமூகம் சார்ந்த திரைப்படங்கள், மத மூடநம்பிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து மலையாளத்தில் படங்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. அம்மாநில மக்கள் அதனை திரைப்படமாக மட்டுமே பார்த்து கடந்துபோயிருக்கிறார்கள். திரைப்படங்களை அரசியலுடன் இணைத்து பார்ப்பது இல்லை.
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் அம்மதத்தை கடுமையாக விமர்சித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ என்கிற திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்துப்பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதம் மாற்றி, பின்னர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தப்படத்தின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்தப்படத்திற்கு கண்டனங்களும் படத்தை வெளியிட தடை கோரியும் நாடெங்கிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை குறிப்பு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,”சன்ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில், இன்று திரைக்கு வருகிறது.
எந்த ஆய்வும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல், உண்மைச் சம்பவம் எனக்கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் இப்படத்தின் டீசரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களைக் கொண்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி‘ படத்தை வெளியிட அனுமதித்தால், இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த திரைப்படத்தை வெளியிட முழுமையான தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில்,” டீசரில் உண்மை கதை என்றும், பேட்டிகளில் கற்பனை கதை என்றும் கூறுகின்றனர். இந்த படத்துக்கு எதிராக அளித்த புகாரின் மீது உத்தரவு பிறப்பிக்காமல் தணிக்கைச் சான்று வழங்க முடியாது” என்று வாதிடப்பட்டது.
அப்போது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கற்பனைக் கதைதான் இந்தப் படம். ஏற்கெனவே தணிக்கைச் சான்று வழங்கப்பட்ட நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. தணிக்கைச் சான்றை எதிர்த்துதான் வழக்கு தொடர முடியுமே தவிர, படத்துக்கு தடை கோர முடியாது.

படத்தில் 14 காட்சிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கேரளாவில் வெளியிடும்போது தமிழகத்தில் ஏன் தடை செய்ய வேண்டும்?” என வாதிடப்பட்டது.
தமிழக அரசின் தரப்பில், “ஏற்கெனவே இந்தப் பட விவகாரம் தொடர்பாக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு ஆதரவோ, எதிர்ப்போ இல்லை” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி” செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம்’ தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிறதா எனக் கேட்டபோது, “சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள மால் திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகள் இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக தமிழகத்தில் படத்தை ரீலீஸ் செய்கின்றனர். படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது” என்றார்.
ராமானுஜம்
அதிபர் மாளிகை தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா!
KKR vs SRH: வருண் சக்கரவர்த்தி சுழலில் சுருண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்