தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. கேரளப் பெண்கள் 32,000 பேரை ஏமாற்றி முஸ்லிமாக மாற்றியதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும் அவதூறு பரப்புவதாகவும் இந்த படத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்டத்திற்கு தடைகேட்டு பத்திரிகையாளர் அரவிந்தாஷன் பிஆர் என்ற பத்திரிக்கையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை நேற்றுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த படம் நாட்டில் மத நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும்,
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தனர் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்களை எதுவும் குறிப்பிடாமல், சன்ஷைன் பிக்சர்ஸ் கேரளா ஸ்டோரி படத்தின் டீசரை உண்மைக் கதை என்று கூறி வெளியிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, படத்தை வெளியிட முற்றிலுமாகத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இதனை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே இதேபோன்ற சவாலை விசாரித்து வருவதாக கூறிய நீதிமன்றம், மனுதாரர் “கடைசி நேரத்தில்” நீதிமன்றத்தை அணுகியதாக குற்றஞ்சாட்டியது.
மேலும் முன்பே வந்திருந்தால் படத்தைப் பார்த்து முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதே போல் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடைக்கேட்டு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை ஏற்றுக்கொள்ள மீண்டும் மறுத்துவிட்டது.
இதனையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்நாடு, கேரளா உட்பட நாடு முழுவதும் உளவுத்துறையின் எச்சரிக்கையையும் மீறி பலத்த போலீசாரின் கண்காணிப்பிற்கு இடையே நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
’செந்தில்பாலாஜியை நீக்குங்கள்’: முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை!