’தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் அடுத்த அப்டேட்!
’தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 5 ஆம் தேதி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தை இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கியிருந்தார்.
சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்குவங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது.
இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும்போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இயக்குநர் சுதிப்டோ சென் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இன்று(ஜூன் 10) அளித்த பேட்டியில் , ”நான் அடுத்ததாக இயக்க உள்ள படம்…இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய படம். இந்த படத்தையும் தி கேரளா ஸ்டோரி படத்தை தயாரித்த விபுல் ஷா தான் தயாரிக்க உள்ளார். அவருடன் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாடாளுமன்றத் தேர்தல் : சேலத்தில் அச்சாரம் போட்ட ஸ்டாலின்
“பாஜக முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம்”: மு.க.ஸ்டாலின்