விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலை குவித்த ‘தி கேரளா ஸ்டோரி’!

சினிமா

பெண்களை மையப்படுத்திய திரைக்கதையில் தயாரிக்கப்பட்ட படங்களில் இதுவரை ரூ.200 கோடிக்கு மேலாக வசூலித்த முதல் படம் என்ற சாதனையை தி கேரளா ஸ்டோரி படம் பெற்றுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் மே 5 அன்று வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது முதல் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

தமிழ்நாட்டில் இந்தியில் வெளியான இப்படம் ஒரே நாளில் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதாக தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது. கேரளாவில் திரையிடப்படவில்லை.

இதன் ஒரு பகுதியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்குவங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும்போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.

மேற்கு வங்கம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், ‘தி கேரளா ஸ்டோரி ‘ மீதான தடை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு  பிறகு, ஏற்கனவே திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் திரையிடுவதை தவிர்க்க முடியாது. எனவே அடுத்த இரண்டு வாரங்களில் படத்தை திரையிட திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என கூறியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் , “குறிப்பிட்ட தரப்பால்” அச்சுறுத்தப்படுவதாகவும், படத்தை திரையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல அரங்கு உரிமையாளர்கள் தனக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள போங்கானில் ஒரு ஒற்றைத் திரையில் படத்தை திரையிட தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து ‘தி கேரளா ஸ்டோரி’படத்தின் இசையமைப்பாளர் பெங்காலைச் சேர்ந்த பிஷாக் ஜோதி கூறுகையில்,

“பெங்கால் முழுவதும் உள்ள பெரும்பாலான அரங்குகள் இன்னும் ‘தி கேரளா ஸ்டோரி’க்கு இடம் கொடுக்கத் தயங்கும்போது, ​​எனது நகரத்திலிருந்து ஒரு திரையரங்கம் எங்கள் படத்தைக் காட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தைத் திரையிட வேண்டாம் என்று விநியோகஸ்தர்களுக்கும், ஹால் உரிமையாளர்களுக்கும் மறைமுக உத்தரவு வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஸ்ரீமா மட்டுமின்றி வேறு சில திரையரங்குகளிலும், குறிப்பாக ஒற்றைத் திரையரங்கிலும் படத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். விரைவில் மேற்கு வங்கத்தில் இன்னும் பல அரங்குகளில் இது காண்பிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று பிஷாக் ஜோதி தி எகனாமிக் டைம்ஸ் செய்தியாளரிடம் தனது மகிழ்ச்சியையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தி கேரள ஸ்டோரி கேரள மாநிலத்தை கதைகளமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட படமாகும். படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள். கதை நிகழும் கேரள மாநிலத்திலும், படத்தின் இயக்குநரின் சொந்த மாநிலத்திலும் இத்திரைப்படம் முதலில் வெளியாகவில்லை.

சினிமாவிற்கு இந்தியாவின் பிரதான மாநிலங்களான மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள திரையரங்குகளில் தி கேரள ஸ்டோரி வெளியாகவில்லை என்ற போதிலும் வட இந்திய மாநிலங்களில் இப்படம் 204 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியான பின்னர் அது சம்பந்தமான எதிர்மறையான விமர்சனங்களால் தி கேரள ஸ்டோரி படம் சர்வதேச சினிமா சந்தை கவனத்திற்கு உள்ளானது. பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இவை அனைத்தும் சாதாரணமாக திரையிடப்பட்டு படைப்புரீதியாக தோல்வியை சந்தித்து இருக்ககூடிய படத்தை எதிர்மறையான விமர்சனங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்கு எல்லாமாக சேர்ந்து தி கேரள ஸ்டோரி திரைப்படத்தின் வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக இந்திய சினிமா வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

இராமானுஜம்

ஆசிய கோப்பை: முடிவு எப்போது? ஜெய் ஷா பதில்!

சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பா? – கொதிக்கும் கே.எஸ்.அழகிரி

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *