’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உண்மைக் கதை அல்ல என நிரூபித்தால் சினிமா இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்வதாக அந்த படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
அவர், இதனை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். கோவா திரைப்பட விழா நவம்பர் 28 அன்று நிறைவுபெற்றது. அதனையொட்டி நடைபெற்ற விழாவில் இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நாடவ் லாபிட் பேசும்போது,
“வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது.
எனது விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்த விமர்சனம் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை எழுப்பி இருந்தது. அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. லாபிட் விமர்சனத்தை உடனடியாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நார்கிலோன் கண்டித்ததுடன், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கோவா திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்ற மற்ற உறுப்பினர்கள், ”இது அவருடைய சொந்தக் கருத்து. குழுவின் கருத்து இல்லை” என தெரிவித்தனர். இந்த நிலையில் நாடவ் லாபிட் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி.
“இது எனக்கு புதிது அல்ல. ஏனென்றால் நாட்டைப் பிளவுப்படுத்த விரும்பும் சக்திகள் இப்படிச் சொல்வது வழக்கம். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால் இந்த கருத்து சொல்லப்பட்டுள்ள இடம்தான்.
இந்திய அரசு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் இது நடந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க விரும்புபவர்கள் சொல்லியுள்ள கருத்து இது. இந்தியாவில் வாழ்ந்து வரும் சிலரும் எதிராக கருத்து சொல்லி உள்ளனர். இவர்கள் எல்லாம் யார்?
இது பிரச்சார படம் எனச்சொல்பவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் வரும் ஒரு சிங்கிள் ஷாட், வசனம் மற்றும் நிகழ்வுகள் என எதுவும் நிஜம் அல்ல என யாரேனும் (அந்த இஸ்ரேல் இயக்குனர் உட்பட) நிரூபித்தால் நான் சினிமா இயக்குவதை நிறுத்திக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குவதற்கு முன்னர் சுமார் 700பேரை நேர்காணல் செய்ததாக அவர் சொல்லியுள்ளார். கடந்த 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என அப்படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.
இந்த வருடம் மார்ச் 11அன்று வெளியான இந்த படத்திற்கு இந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள சில மாநிலங்களில் வரி விலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வடஇந்திய மாநிலங்களில் வசூல்ரீதியாக கல்லா கட்டியிருந்தது ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
மக்கள் போராட்டத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்
சேலம் புத்தகத் திருவிழா: 4 நாட்கள் நீடிப்பு!