கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடுவர் குழுவின் தலைவரான இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் நதவ் லாபிட், “தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படம் மிகவும் மோசமான படம் என்று விமர்சித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படமான தி காஷ்மீர் பைல்ஸ் இந்தியா முழுவதும் வெளியாகி பேசு பொருளானது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பாராட்டினர். இந்தப் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் படத்தை இழிவு படுத்துவதற்கான சதி என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் காவல்துறைக்கு இப்படம் பார்க்க ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த சூழலில் நிறைவு விழாவில் நேற்று பேசிய நடுவர் குழுவின் தலைவரான நதவ் லாபிட், “திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதை கண்டு அனைவரும் கலக்கமடைந்தனர் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் கலைப் போட்டி பிரிவுக்கு இப்படம் திரையிடப்பட்டது பொருத்தமற்றது. இது ஒரு கொச்சையான (vulgar) மற்றும் பிரச்சாரத் தன்மை கொண்ட திரைப்படம் ஆகும். இந்த மேடையில் உங்களுடன் இந்த உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். இந்த விமர்சனத்தை திரைப்பட விழா ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்” என்று கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் #vulgar என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பிரியா