கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாகக் கருதப்படும் கோவா திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களும் திரையிடப்படும்.
இந்தாண்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கோவா திரைப்பட விழா 28 ஆம் தேதி நிறைவு பெற்றது.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழாவைக் கோவா மாநில அரசு இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தியது.
இந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் இல்லாத படங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இதில் தான் இந்த ஆண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.
கோவா திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படமும் திரையிடப்பட்டது.
இதற்கிடையே கோலாகலமாக நடைபெற்று வந்த கோவா திரைப்பட விழா நவம்பர் 28 ஆம் தேதி நிறைவுபெற்றது.
இந்த நிலையில் , திரைப்பட திருவிழாவின் நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார்.
காஷ்மீர் பைல்ஸ் வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம் என அவர் கடுமையான சாடினார்.
பெருமை மிகுந்த கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பொறுத்தமற்ற இந்த படத்தை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சி தருவதாக அவர் சாடி இருக்கிறார்.
“இந்த திரைப்படத்தால் நாங்கள் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தோம். காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு மேடையிலேயே நாங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.” என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியால் சிறந்த படம் என்று பாராட்டப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் பல மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. அரசு அலுவலர்கள் இதனை காண விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம், தவறாக தகவல்களை கொண்டு காஷ்மீர் மக்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டு மத்திய அரசால் திரைப்பட திருவிழாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விமர்சித்த நாடவ் லாபிட் யார் என பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள்.
நாடவ் லாபிட் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிறந்தவர். திரைப்பட எடிட்டர் எரா லாபிட் மற்றும் எழுத்தாளர் ஹைம் லாபிட் தம்பதிக்கு 1975 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் நாடவ் லாபிட்.
இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய இவர், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கல்வியும், ஜெருசலேமில் உள்ள சாம் ஸ்பீகல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
2011 ஆம் ஆண்டு போலீஸ்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமான லாபிட், லோகார்னோ திரைப்பட திருவிழாவில் ஜூரி விருதை வென்றார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான தி கிண்டர்கார்டன் டீச்சர் படமும் சர்வதேச விமர்சகர் வாரத்தில் திரையிடப்பட்டது.
விருதுகள் அதை தொடர்ந்து டைரி ஆஃப் எ வெட்டிங் போட்டோகிராஃபர், சினானிம்ஸ், எஹெட் நீ ஆகிய திரைப்படங்களையும், சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார். இதில் சினானிம்ஸ் படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி விருதை வென்றது.
இவர் புகழ்பெற்ற கேன்னஸ் திரைப்பட விழாவின் ஒரு பகுதியான சர்வதேச விமர்சகர் வாரத்தின் ஜூரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்ரேலில் பிறந்தாலும் பாலஸ்தீன் மக்களுக்காக பல வகைகளில் குரல் எழுப்பி இருக்கிறார்.
பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அந்நாட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டது, ஏவுகணை தாக்குதல்கள், காசா எல்லை பிரச்சனை, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் குறித்து பேசி உள்ளார்.
சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இயக்குநரான லாபிடின் இக்கருத்து உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்: ரூ.420 கோடி ஒதுக்கீடு!