”சினிமா தொழிலாளர்களின் சம்பள பிடிப்பு தொகை எங்கே?” : ஆர்.கே.செல்வமணி

சினிமா

சினிமா துறைக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்று திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான ஆர்.கே செல்வமணி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.

சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை.

வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக்கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக்கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது?.

இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நலநிதி கூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்று கூறினார்.

இராமானுஜம்

சந்திர கிரகணம் : வெறும் கண்களால் பாா்க்கலாமா?

இதுதான் உடனடி கர்மா: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *