‘கோட்’ சாட்டிலைட் உரிமம்… ‘சன்’னிடம் இருந்து தட்டிப்பறித்த ‘ஜீ’… பின்னணி என்ன?

சினிமா

தமிழ் சினிமா வியாபாரத்தில் ஓடிடி உரிமம் வருவதற்கு முன்பு வரை தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைக்கும் வருவாய் படத்தயாரிப்பு செலவில் பிரதான பங்காக இருந்தது.

ஓடிடி உரிமம் என்பது நடைமுறைக்கு வந்த பின், தொலைக்காட்சி உரிமம் விலைக்கு இணையாக அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் கிடைக்க தொடங்கியது.

படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பின்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும். ஆனால், ஓடிடியில் நான்கு வாரத்தில் படத்தை வெளியிடலாம்.

அதனால் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமம் இரண்டையும் இணைத்தே சன் தொலைக்காட்சி புதிய படங்களின் உரிமையை வாங்கி வந்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்களின் தொலைக்காட்சி உரிமம் சன் குழுமத்தை தவிர்த்து பிற தொலைக்காட்சிகளுக்கு அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாது.

இந்தநிலையில், விஜய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் தொலைக்காட்சி உரிமம் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது சினிமா, தொலைக்காட்சி வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் நாம் பேசியபோது,

“2023 ஆம் ஆண்டு வெளியான வாரிசு, லியோ என இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் பெரும் வெற்றியை பெறவில்லை.

அதே நேரம் விஜய் தனது சம்பளத்தை அதிகரித்து கொண்டே வந்தார். புதிய படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளம் அவர் படத்தின் வியாபாரத்திற்கு ஏற்புடையதாக இல்லாததுடன், லாபம் கிடைக்கும் என்பதற்கான உத்திரவாதம் இல்லாததால் அவர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டு படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர்.

இந்த நிலையில் விஜய் நடிக்கும்  படத்தை தயாரிப்பதை கௌரவமாக கருதும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’பட அறிவிப்பை வெளியிட்டது.

2024 செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தின் தொலைக்காட்சி உரிமம் 90 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்தது.

ஆனால் கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமம் 50 கோடி ரூபாய்க்கு தான் சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது.

இந்நிலையில் ஏஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை முதலில் சன் தொலைக்காட்சி வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.

சன் குழுமம் தருவதாகச் சொன்ன விலை சுமார் ஐம்பது கோடி. அத்துடன் படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா ஆகியவற்றை ஒளிபரப்பும் உரிமையை தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

அதனால், பாடல் உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனத்திடமிருந்து அதை வாங்கி சன் தொலைக்காட்சிக்குக் கொடுப்பதற்கான முயற்சியை ஏஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் மேற்கொண்டுள்ளனர்.

அப்படி அந்த உரிமையைக் கொடுப்பதாக இருந்தால் ஆடியோ உரிமைக்காக கொடுக்கப்பட்ட விலையில்  ஒன்பது கோடி ரூபாயை குறைத்துக் கொள்வோம் என்று ஆடியோ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடில்லை. எனவே தான் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி உரிமம் வழங்கப்பட்டது.

சன் தொலைக்காட்சி போன்று எந்தவொரு நிபந்தனையும் இன்றி தொலைக்காட்சி உரிமைக்கு அந்நிறுவனம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் தொகை சுமார் எழுபது கோடி ரூபாய்.

தொலைக்காட்சி உரிமத்திற்கான தொகையை இரண்டு தவணைகளில் பட வெளியீட்டுக்கு முன்பாக கொடுக்கும் வழக்கத்தை கடைப்பிடித்த ஜீ நிறுவனம், கோட் படத்திற்கான தொகையை பல தவணைகளில் கொடுப்பதாக கூறியிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வேறு வழியின்றி இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: மதுவிலக்கு எப்போது? தமிழக அரசுக்கு சூர்யா கண்டனம்!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *