தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அவரது ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டத்திற்கு இடையே இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பொதுவாக விஜய் படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகும் தியேட்டர்கள் மூலம் அதிக வசூல் கிடைக்கும்.
தமிழக வெற்றி கழகம் கட்சி அறிவிப்புக்கு பின் வெளியாகும் படம் என்பதால் தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தனிப்பட்ட முறையில் விஜய்யும் கவனித்து வருகிறார்.
அதற்கு வழி செய்யும் வகையில் உலகம் முழுவதும் கோட் திரைப்படம் வழக்கத்தை காட்டிலும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுவே விஜய் படத்தின் முதல் நாள் அதிகபட்ச வசூல் சாதனையாக பார்க்கப்படும் நிலையில், அதிக தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள கோட் அந்த சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதே உண்மை என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனை படைக்க படத்தின் இந்தி ரிலீஸும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் தி கோட் படத்தின் இந்தி வெர்சன் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை.
இந்தியில் ஒரு படத்தை வெளியிட வேண்டுமென்றால், 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற நிபந்தனைக்கு தயாரிப்பு நிறுவனம் கட்டுப்பட வேண்டும். அதற்கு உடன்படாவிட்டால், எந்தவொரு படத்தையும் வெளியிட முடியாது.
ஏற்கெனவே கோட் படத்தின் ஓடிடி விற்பனையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் முடித்துவிட்டதால், 8 வாரங்கள் காத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்புடன் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தியில் ‘கோட்’ வெளியாகவில்லை.
அதே வேளையில் மல்டிபிளக்ஸ் தவிர்த்து தனி திரையரங்குகளில் தி கோட் படத்தின் இந்தி வெர்சன் வெளியாகியுள்ளது. ஆனால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முன்பு அவற்றின் வசூல் குறைவு தான் என்கின்றனர்.
தென்னிந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட இந்தி பதிப்பு அல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பதிப்புகளில் மட்டுமே ‘தி கோட்’ வெளியாகி உள்ளது.
மேலும் கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கோட் படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விஜயின் கோட் படத்தின் முதல் நாள் வசூல், அவரது முந்தைய படமான லியோவை விட தாண்டுமா என்பது சந்தேகம் தான் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது? : சென்னை கமிஷனர் பதில்!
ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?