வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ரசிகர்களால் கருதப்படும் குக் வித் கோமாளி 5வது சீசனில் இருந்து விலகுவதாக அதில் நடுவராக செயல்பட்டு வரும் பிரபல செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் நிலையில், தமிழ் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இருந்து வருகிறது.
சமையல் கலை நிபுணர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் தொகுப்பாளராகவும் இதில் பங்கேற்கின்றனர். அவர்களுடன் புகழ், மணிமேகலை, பாலா, ரவீனா, சுனிதா போன்ற எண்ணற்ற கோமாளிகளுடன் போட்டியில் பங்கேற்கும் திரையுலக பிரபலங்கள் எப்படி பிரமாதமான உணவை சமைக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சமாக இருக்கிறது.
இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 சீசன் முடிந்துள்ள நிலையில் 5வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி 5வது சீசனில் இருந்து விலகுவதாக அதில் நடுவராக செயல்பட்டு வரும் பிரபல செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில் குக் வித் கோமாளி சீசன் 5வது சீசன் நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து நடுவராக செயல்படுவேன் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் அந்த ஊகங்களுக்கு முடிவு கட்டும் விதமாக 5வது சீசனின் ஒரு பகுதியாக நான் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்தி கொள்கிறேன்.
என்னுடன் சேர்ந்து மில்லியன் கணக்கான மக்களை மகிழ்வித்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் ஓய்வு எடுக்கிறேன்.
குக் வித் கோமாளி எனது உண்மையான ஜாலியான பக்கத்தைக் காட்டியது மற்றும் நான் நானாக செயல்பட வசதியாக இருந்தது.
கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளேன்.
பலரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்த இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி, செயல்படுத்திய எனது அன்புக்குரிய இயக்குனர் பார்த்திவ் மணி மற்றும் மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இது ஒரு கடினமான முடிவு. எனினும் விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான கருத்தாக்கத்தில் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெற உள்ள புதிய அணிக்கு எனது வாழ்த்துகள்” என்று வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரயில்கள் ரத்து : சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிய தெற்கு ரயில்வே!
முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
அவரோட தொழில்ல பெரிய ஆளா இருந்தாலும், இந்த நிகழ்ச்சிதான் மக்களிடையே அவரை பிரபலப்படுத்தியது உண்மை. அடுத்து சினிமாவுக்கு போறாரோ?