’காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்கள் காமெடி கலந்த ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தன. அதன்பிறகு, ‘இப்படித்தான் பேய் படங்களை எடுக்க வேண்டும் போல’ என்றெண்ணிப் பல இயக்குனர்கள் காமெடி பேய்களைக் களமிறக்கினார்கள். ‘போதும்.. போதும்..’ என்று சொல்லும் அளவுக்கு நம்மை திணறடிக்கச் செய்து, தியேட்டரை விட்டு வெளியே அனுப்பினார்கள்.
அப்படியொரு சூழலில், ‘இதுதாண்டா ஹாரர் படம்’ என்று சொல்லும் அளவுக்கு 2015 மே 22 அன்று ‘டிமான்டி காலனி’ தியேட்டர்களில் வெளியானது. இதில் இயக்குனர் அஜய் ஞானமுத்து காட்டிய உலகம், ரசிகர்களுக்குப் பேயனுபவம் தருவதாக இருந்தது.
பயத்தின் உச்சத்தில் அலறும் அளவுக்குப் பேய்த்தனம் கொண்டதாக இருந்தது. சுமார் 2 கோடி ரூபாயில் தயாரானதாகச் சொல்லப்பட்ட இப்படம் எட்டு மடங்கு வசூல் ஈட்டியதாகச் சொல்லப்பட்டது. ‘டிமான்டி காலனி’ வெளியாகி தற்போது 9 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
பயமுறுத்த வேண்டாமா?
ஹாரர் படங்கள் என்றால் பயமுறுத்த வேண்டும். வியர்த்து விறுவிறுத்து இதயம் படபடத்து மூளை சில்லிட்டுப் போகும் அளவுக்குப் பேயுலகத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் உணர்வை உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியான ‘எவில் டெட்’, ‘தி ஓமன்’ என்று பல படங்கள் தொண்ணூறுகளுக்கு முன் அதற்கான உதாரணமாகச் சொல்லப்படுவதுண்டு.
‘மை டியர் லிசா’, ‘13ஆம் நம்பர் வீடு’ போன்று வேறு மொழிகளில் இருந்து தமிழில் டப்பிங் படங்கள் அதற்கு ஈடான வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றன. மனோபாலா இயக்கிய ‘பிள்ளை நிலா’, தக்காளி சீனிவாசன் இயக்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’, சக்தி – கண்ணன் இயக்கிய ‘யார்’, துரை தந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ போன்ற படங்களும் கூட அப்படியொரு வரிசையில் சேரும். ஆனால், 2கே கிட்ஸ்களை ரசிக்க வைத்த ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்கள் பயத்துடன் சிரிக்க வைக்க முயற்சித்தன.
‘ரெண்டும் வேற வேற டிபார்ட்மெண்ட் ஆச்சே’ என்று அம்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் ரசிக்கும் வகையில் வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தந்தன அப்படங்கள்.
அவற்றுக்கு எந்த படங்கள் அப்படியொரு ஊக்கத்தைத் தந்தன என்று தெரியவில்லை. ஆனால், ‘கத்தி மேல் நடப்பது போன்ற’ அம்முயற்சிகள் வெற்றி பெறத் தொடங்கியதும், பலரும் காமெடி பேய்களை திரையில் உலாவ விட்டனர்.
ஒருகட்டத்தில் அது ‘பேய்ப்படம்னா சிரிக்க வைக்கும், இல்ல பயங்கரமா மொக்க போடும்’ என்றெண்ணும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அந்த நேரத்தில், ரசிகர்களை ரட்சிக்க வந்தார் அஜய் ஞானமுத்து. யாரும் எதிர்பாராத வகையில் ‘டிமான்டி காலனி’ தந்தார். ‘பேய்ப்படம்னா பயமுறுத்த வேண்டாமா’ என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார். ரசிகர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
குறையாத விறுவிறுப்பு!
இந்த படத்தில் ஸ்ரீனிவாசன், விமல், ராகவன், சஜித் பாத்திரங்களில் முறையே அருள்நிதி, ரமேஷ்திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் நடித்திருந்தனர்.
நண்பர்களான இவர்கள் ஒருநாள் மது போதையில் ஒரு பேய் பங்களாவுக்குள் செல்வதும், அங்கிருந்து திரும்பி வந்தபிறகு அவர்களது அறைக்குள் அந்த பேய் புகுந்து அட்டகாசம் செய்வதும்தான் ‘டிமான்டி காலனி’யின் கதை. பின்பாதி முழுக்க ஒரே அறையில் நடக்கும் கதை என்றபோதும், அந்த எண்ணம் எழாத அளவுக்கு மிரட்சியை ஊட்டியது இதன் திரைக்கதை.
கெபா ஜெர்மையா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை அமைத்தார் சின்னா. புவன் ஸ்ரீனிவாசன் மிகச்செறிவான உள்ளடக்கம் இருக்குமாறு இதனைத் தொகுத்திருந்தார்.
அரவிந்த் சிங் இதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார். இவரது ஒளிப்பதிவில் வந்த படங்கள் பெரும்பாலும் த்ரில்லர் ஆகவோ அல்லது ஹாரர் ஆகவோ உள்ளன. ‘நட்பே துணை’ மட்டுமே அதில் விதிவிலக்கு.
நண்பர்களாக வரும் நால்வரும் எப்படிப்பட்டவர்கள்? அவர்களது வேலை என்ன? குணாதிசயங்கள் என்ன போன்றவற்றுக்குப் பதில் கிடைக்கும் வகையில் முதல் 20 நிமிட காட்சிகளை இதில் அமைத்திருப்பார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதே போலவே, பேய் பங்களாவுக்குள் அவர்கள் நால்வரும் நுழைந்தபிறகு அது குறித்த பிளாஷ்பேக் கதையைச் சொல்வார்.
இடைவேளைக்குப் பிறகு, தங்கியிருக்கும் அறையை விட்டு வெளியேறவிடாமல் அந்த நண்பர்களை ஒரு ஆங்கிலப் பேய் பாடாய் படுத்துவது நம்மை திகைப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். முதல் அரை மணி நேரத்திற்குப் பிறகான மூன்று அரை மணி நேரங்கள் அந்த திகைப்பைக் கொஞ்சமும் குறைய விடாது. அதுவே ‘டிமாண்டி காலனி’யின் யுஎஸ்பி.
ஒரு நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலகட்டத்தில், இதில் நான்கு இளைஞர்களில் ஒருவராக நடித்தார் அருள்நிதி. எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு, மதுமிதா போன்றவர்களும் இதில் ஒரு காட்சியில் தோன்றியிருந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகத் திரையில் ஓடிய இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது; நீண்ட நாட்கள் ஓடி வெற்றியை ஈட்டியது.
மீண்டும் ‘டிமான்டி’!
குறைந்த பட்ஜெட்டில் தயாரான ‘டிமான்டி காலனி’ வெற்றி பெற்றதையடுத்து ’இமைக்கா நொடிகள்’ எனும் ஆக்ஷன் த்ரில்லர் தந்தார் அஜய் ஞானமுத்து. தொடர்ந்து விக்ரம் நடித்த ‘கோப்ரா’வை இயக்கினார். தற்போது ‘டிமான்டி காலனி 2’ உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காமெடி உடன் கூடிய ஹாரர் படமே தற்போது ட்ரெண்டில் இருக்கிறது என்று தெரிந்தும், துணிந்து சவாலை ஏற்று இப்படியொரு படத்தைத் தர ‘தில்’ நிறைய வேண்டும். அது அஜய் ஞானமுத்துவிடம் நிறையவே இருந்தது.
‘டிமாண்டி காலனி’க்கு கிடைத்த வரவேற்பை மேலும் பன்மடங்காகப் பெறும் வகையில் இப்போது பிரமாண்டமான முறையில் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து இயக்குகிறார். விரைவில் பின்தயாரிப்புப் பணிகள் நிறைவுற்று இப்படம் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகம் பெற்ற வெற்றி அதற்குக் காரணமாக இருந்தாலும், அதைவிட ஒரு படி மேலாக இப்படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது ‘டிமான்டி காலனி 2’. நிச்சயமாக அப்படம் வெளியாவதற்கு முன், முதல் பாகம் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் காணக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் 4 கோடி விவகாரம்: கேசவ விநாயகன் திடீர் வழக்கு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6 ஆம் ஆண்டு நினைவு… ஆறாத வடுக்கள்!