சின்னக்கவுண்டர்,தெற்கத்தி வீரன், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற பெயர்களை ஆட்சேபிக்காமல் தணிக்கை சான்றிதழ் வழங்கிய சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை குழு ‘வடக்கன்’ என்கிற பெயரை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது.
மத்திய அரசின் நிர்வாகத்தில் இயங்கி வருவது திரைப்பட தணிக்கை வாரியம். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழு உறுப்பினர்களுடன், தணிக்கை வாரிய அதிகாரி படம் பார்த்து சான்றிதழ் வழங்குவது நடைமுறை.
படத்தில் இடம்பெற்றுள்ள, காட்சிகள், வசனங்கள், வன்முறை காட்சிகள் இவற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல், சமூக நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது பொதுவான அடிப்படை நோக்கம்.
ஆனால் தணிக்கை குழு மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டே செயல்படும் அமைப்பாகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
இதனால் இந்திய சினிமாவில் அதிகமாக நெருக்கடிக்கு உள்ளாவதும், பாதிக்கப்படுவதும் தமிழ் சினிமா மட்டுமே. தமிழ்நாட்டை ஆளும்கட்சியை விமர்சனம் செய்து, அல்லது அக்கட்சி தலைவர்களை பற்றி திரைப்படங்களில் இடம்பெறுகிறது என்றால் அந்த திரைப்படம் தணிக்கை குழு சான்றிதழ் பெற கடும் முயற்சி, சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் அதையும் கடந்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டால் பட வெளியீட்டில், திரையரங்குகளில் வதம் செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் ஏற்பட்டதுண்டு.
இருவர்
1997 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றை குறிப்பாக எம்.ஜி.ராமச்சந்திரன், மு.கருணாநிதி, ஜெயலலிதா இவர்களை மையம் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படம்.
மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த இந்த படம் தணிக்கையில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வெளியானது. வணிக ரீதியாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
முதல்வன்
1999 ஆம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ராலா, வடிவேலு, மணிவண்ணன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல்வன். அன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதியை நினைவூட்டும் வகையில் படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனின் நடையுடை, பாவனை, பேச்சுகள் இருந்ததாக விமர்சனங்கள் வந்தன.
வெளியீட்டுக்கு முன், படத்தினை பார்க்க ஆளும் கட்சி தரப்பில் முயற்சித்தும் முடியாமல் போனது. அதனால் படத்தில் என்ன மாதிரியான வசனங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை, முதல்வன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறும் வேலையை செய்த சென்சார் மூர்த்தி என்பவர் மூலம் தெரிந்து கொண்டார் அப்போதைய முதல்வரான மு.கருணாநிதி என சினிமா வட்டாரங்களில் பேச்சாக இருந்தது.
படத்தை தணிக்கை, வெளியீட்டில் எந்தவகையிலும் தடுக்க முடியாத நிலையில் படம் வெளியான அன்று மாலையே மதுரையில் முதல்வன் படத்தின் சி.டியை வீடுகள் தோறும் இலவச விநியோகம் செய்தனர் திமுக தரப்பில்.
புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் கோலோச்சிய காலமது. இலவசமாக விநியோகிக்கப்பட்ட முதல்வன் சி.டி.யில் படம் பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்தனர். இதனால் மதுரையில் இலவசமாக முதல்வன் சி.டி. விநியோகம் செய்த மு.க.அழகிரி தமிழ்நாடு முழுவதும் அடுத்தடுத்த நாட்களில் இதனை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட்டார்.
கவிஞர் வைரமுத்து மூலம் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியை படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஷங்கர் நேரில் சந்தித்த பின் முதல்வன் படத்திற்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.
தலைவா
இதே போன்று விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்திற்கு அன்றைய ஆளுங்கட்சியால் நெருக்கடி ஏற்பட்டது.
துணை தலைப்பில் மாற்றம் செய்யப்பட்ட பின்னரே படம் வெளியானது. படைப்பு சுதந்திரம் பற்றி அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மடை திறந்த வெள்ளமாக மேடைகளில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசினாலும் யதார்த்த நிலைமை வேறாகவே இன்றளவும் இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் கால சட்டம்!
தங்களுக்கு எதிராக நாடகம், திரைப்படங்களில் வசனங்கள் இடம்பெற்று விடக்கூடாது என இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய தணிக்கை சட்டங்களே இன்றளவும் இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப, மாநிலங்களுக்கு ஏற்ப திரைப்பட தணிக்கைக்கான விதிகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை திரைப்பட துறையினர் அரசை நோக்கி இதுவரை மேற்கொள்ளவில்லை.
அதனால்தான் முகம் தெரியாத நடிகர்கள் நடித்த வடக்கன் படம் தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் நிராகரிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என விசாரித்த போது,
வடக்கன் படத்தில் என்ன பிரச்சினை?
வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. வடக்கன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா என பலரும் நடித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த பின் கடந்த ஏப்ரல் 25 அன்று வடக்கன் படத்தின் டிரைலர் வெளியானது. அதன் பின்னரே வடக்கன் படம் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் கவனம் பெற்றது.
மனிதவாழ்வில் பிழைப்புக்காக இடப்பெயர்வு என்பது தவிர்க்க முடியாதது. உலகம் முழுமையும் தமிழர்களும், மலையாளிகளும் தங்கள் தனித்திறமை, கடும் உழைப்பால் வேலைவாய்ப்புகளை பெற்று தவிர்க்க முடியாத சக்தியாக பெரும்பான்மையான நாடுகளில் உயர்பதவிகளில் இருந்து வருகின்றனர்.
அதேபோன்றுதான் சொந்த நாட்டிற்குள் வட இந்திய மாநிலங்களில் இருந்து உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பிற்கான மனித உழைப்பில் பெரும்பங்களிப்பு வடமாநில தொழிலாளர்களுடையது என்பது மறுக்க முடியாதது. வட இந்தியர்கள் பங்கேற்பு இல்லாத தொழில் தமிழகத்தில் எதுவும் இல்லை. தற்போது விவசாய வேலைகளுக்கும் இவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் அங்கிருந்து தொழிலாளர்கள் வந்த பின்னரே தஞ்சை மாவட்டத்தில் தீவிர நெல் நடவு விவசாய வேலைகளை தொடங்க முடியும் என்கிற அளவில் அவர்களது பங்களிப்பு தமிழ்நாட்டில் உள்ளது.
அவர்களை பற்றிய, அவர்களின் கடின உழைப்பு, ஒற்றுமை, மனித நேயம் பற்றிய திரைப்படம்தான் வடக்கன் என்கின்றனர் திரைப்படகுழுவினர்.
இருந்த போதிலும் வட இந்திய தொழிலாளர்கள் பற்றிய விமர்சனங்களும், அவர்கள் வருகையால் இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு பற்றியும் படம் பேசுகிறது. அது மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை ஊடுருவியுள்ள வடமாநில தொழிலாளர்களால் ஏற்பட்டுள்ள உணவு பழக்கங்களில் மாற்றம் பற்றியும் படத்தில் காட்சிகள் இருப்பதை படத்தின் டிரைலர் உறுதிப்படுத்தியுள்ளது.
டீசரில் கதாநாயகன் வடமாநில தொழிலாளியிடம் அடிவாங்கி வந்தது போலவும், அவரால் தன்னுடைய வேலை பாதிக்கப்படுவதை உணர்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது.
மேலும்,எங்கு பார்த்தாலும் வடக்கன்கள் வேலைக்கு வந்துடுறாங்க.. எல்லா வடக்கன்களையும் அடிச்சி துரத்தணும்.. ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்கக்கூடாது, வெளியூர்ல இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பானிபூரி, பேல்பூரின்னு போட்டுட்டு இருப்பியா” என வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர் .
அதற்கு ‘வடக்கு’ என்ற தலைப்புக்கு படக்குழு அனுமதி கேட்டதாகவும், ஆனால் அதற்கும் தணிக்கை குழு அனுமதி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு, புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் வேடியப்பன் அறிவித்துள்ளார்.
படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கியுள்ள இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மே 24 படத்தை வெளியிட போவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-அம்பலவாணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குற்றால வெள்ளம்: “வீடியோ எடுக்காம காப்பாத்துங்க” பாடம் எடுத்த சிறுமி!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய VJ விஷால்!