தமிழில் ‘டப்’ செய்திருக்கலாம்..!
’ஜுராசிக் பார்க்’ காலம் தொட்டு ஆங்கிலப் படங்களைத் தமிழில் ‘டப்’ செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. அதன் வழியாக, கிராபிக்ஸ் முக்கியத்துவம் கொண்ட படங்கள் மட்டுமல்லாமல் ஆக்ஷன், ஃபேண்டஸி, ட்ராமா வகைமைப் படங்களும் கூடத் தமிழாக்கம் செய்யப்பட்டன.
ஜாக்கிசான், ஆர்னால்டு ஸ்வாசநேகர், பியர்ஸ் பிராஸ்னன், நிக்க்கோலஸ் கேஜ் உட்படப் பல திரையாளுமைகள் தமிழ் மட்டுமே தெரிந்த சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானது அந்த வகையில்தான். அவ்வாறு ஆராதிக்கப்படும் இன்னொரு நடிகர் ஜேசன் ஸ்டேதம்.
நூறாவது நாள், ஜல்லிக்கட்டு படங்களில் சத்யராஜ் எப்படி மொட்டைத்தலையுடன் ஹீரோயிசம் செய்வாரோ, அதே போன்று ஒரு ஹாலிவுட் நடிகர் ‘விக்’ வைக்காமல் படம் முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தால் எப்படியிருக்கும்? ஜேசன் படங்கள் அப்படிப்பட்ட அனுபவங்களைத் தரவல்லவை.
தி ட்ரான்ஸ்போர்ட்டர், டெத் ரேஸ், கிராங்க், தி எக்ஸ்பேண்டபிள்ஸ், இத்தாலியன் ஜாப் உட்பட அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷன் ரசிகர்களுக்குப் பிடித்தமானவை. அவை தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டியது ‘தி பீகீப்பர்’. இது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டிருக்க படமும் கூட. ஆனால், அது நிகழவில்லை என்பதுதான் சோகம்.
சரி, அப்படியென்ன அம்சம் ‘தி பீகீப்பர்’ படத்தில் இருக்கிறது?
அடித்து துவைக்கப்பட்ட கதை!
‘பாட்ஷா’ டைப் கதைகள் எப்படி தென்னிந்திய சினிமாவை ஆட்டிப் படைக்கிறதோ, அதேபோல ஹாலிவுட்டிலும் சில ஒற்றைவரிக் கதைகள் உண்டு.
சாகசங்களுக்கும் கொடூரங்களுக்கும் புகழ் பெற்ற ஒரு வீரன் தனது கடந்த காலத்தைத் துறந்து, புதிய அடையாளத்துடன் அமைதியாக வாழ்ந்து வருவார். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் சில செயல்களில் அவர் இறங்க, மெல்ல அவரது கடந்த காலம் சிலரால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும். அதன்பிறகு, தான் எதிர்கொள்ளும் பிரச்சனையைச் சரி செய்துவிட்டு மீண்டும் ‘அண்டர்கிரவுண்ட்’டுக்குள் அந்த வீரன் புகுந்துகொள்வதோடு படம் முடிவடையும்.
இந்தக் கதைகளில், அந்த நாயகன் ஒரு போலீஸ்காரராகவோ, ராணுவ வீரராகவோ, உளவாளியாகவோ, சிறப்புப் படையைச் சேர்ந்தவராகவோ இருப்பார். சிலவற்றில் அவரைக் கூலிப்படை கொலையாளியாகச் சித்தரிப்பார்கள்.
கிட்டத்தட்ட அப்படியொரு கதைதான் ‘தி பீகீப்பர்’. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த ‘ட்ரான்ஸ்போர்ட்டர்’ படங்களின் அடிப்படையும் கூட இதுவே.
அமெரிக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் அரசுப் பணி செய்து ஓய்வுபெற்ற எலோயிஸ் பார்க்கர் (பிலிசியா ரஷாத்) எனும் பெண்மணி வாழ்ந்து வருகிறார். அவரது நிலத்தில் ஆடம் க்ளே (ஜேசன் ஸ்டேதம்) எனும் நபர் தங்கியிருக்கிறார். தேனீக்களை வளர்ப்பதுதான் க்ளேவின் பணி, பொழுதுபோக்கு எல்லாம்.
எலோயிஸின் வீட்டிலுள்ள பரணில் இருந்து ஒரு தேன்கூட்டை க்ளே எடுப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அன்றைய தினம், எலோயிஸின் கம்ப்யூட்டர் திடீரென்று ‘மக்கர்’ செய்கிறது. அதனைச் சரி செய்வதற்காக, ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொள்கிறார். அது சார்ந்த கால் சென்டரில் இருந்து ஒருவர் பேசுகிறார். அவர் சொல்வதைச் செய்து முடித்ததும், எலோயிஸின் வங்கிக் கணக்கு, காப்பீட்டுப் பணம் என்று அத்தனையும் ‘ஜீரோ’ ஆகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் செய்வதறியாது திகைக்கிறார் எலோயிஸ். காரணம், அவர் பங்காற்றிவரும் அறக்கட்டளையொன்றின் பணமும் பறிபோனதுதான்.
அடுத்தநாள், எலோயிஸ் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிய வருகிறது. அவரது மகள் வெரோனிகா (எம்மா ரேவர் -லேம்ப்மேன்) எஃப்பிஐயில் பணியாற்றுகிறார். தாயின் மரணத்தில் க்ளேவுக்குத் தொடர்பு இருக்கும் என்று தொடக்கத்தில் அவர் சந்தேகப்படுகிறார். அவ்வாறில்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.
அதன்பிறகு, எலோயிஸின் கணக்கில் இருந்த பணத்தை ஒரு ‘இண்டர்நெட் பிராடு’ கும்பல் ஏமாற்றிய தகவலைச் சொல்கிறார் வெரோனிகா. எஃப்பிஐ நினைத்தால் கூட அவர்களைப் பிடிக்க முடியாது என்கிறார்.
’அப்படியா’ என்று கேட்டுக்கொண்டாலும், க்ளே அந்த விஷயத்தை விடுவதாக இல்லை. ‘பீகீப்பர்’ எனும் அரசு சார்ந்த ரகசியக் காவல் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய சகாக்களிடம் சொல்லி அந்த நிறுவனத்தின் முகவரியைக் கேட்டுப் பெறுகிறார்.
அதன்பிறகு என்ன? அந்த கால் செண்டர் நிறுவனத்திற்கு நேரில் செல்கிறார்; அங்கு வேலை செய்பவர்களை விரட்டுவிட்டு, அதனைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்.
அந்த நிறுவனத்தை நடத்திவரும் நபர், பதிலுக்கு க்ளேவின் கூடாரத்தைத் தாக்குகிறார். அவரும் அவர்களை அடித்து துவைத்தெடுக்கிறார். அப்போதுதான், அந்த நிறுவனத்தின் பின்னால் இருப்பவர் யார் என்று தெரிய வருகிறது. அவர் ஒரு பிரபலத்தின் மகன்.
யார் அந்த பிரபலம்? அவரது மகனைப் பிடிக்க க்ளே என்ன செய்தார் என்று சொல்கிறது மீதமுள்ள படம். உண்மையைச் சொன்னால், ஹாலிவுட்டில் அடித்து துவைத்து நைந்துபோன கதை இது.
நல்லதொரு ’ஆக்ஷன்’ படம்!
ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் வரிசை மற்றும் தி எக்ஸ்பேண்டபிள்ஸ் வரிசை தவிர்த்து மெக் உட்படச் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜேசன் ஸ்டேதம். உளவாளி வகையறா பாத்திரங்களை அவர் தவிர்க்கும் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டுவதில்லை. இந்தச் சூழலில்தான், தற்போது ‘தி பீகீப்பர்’ வெளியாகியிருக்கிறது. அடுத்த பாகங்கள் வரும் என்கிற நம்பிக்கையை அவரது ரசிகர்களுக்கு ஊட்டும் அளவுக்குப் படம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.
ஐம்பதைக் கடந்தாலும், திரையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் இடங்களில் அசத்தியிருக்கிறார் ஜேசன் ஸ்டேதம். எம்மி ரேவர், அவருடன் வரும் பாபி நடேரியைத் தாண்டி வில்லனாக வரும் ஜோஷ் ஹட்சர்சன் நம்மை ஈர்க்கிறார். ஆனால், அவருக்கு அதிக காட்சிகள் இல்லை.
கேஜிஎஃப் போன்ற படங்களில் ‘இப்போ ஹீரோ கையை முறுக்குவான் பாரேன்’ என்று வில்லன் தரப்பில் சிலர் சொல்வார்களே, அது போன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ஜோஷின் தந்தையாக வரும் ஜெரிமி அயர்ன்ஸ். ஜோஷின் தாயாக நடித்துள்ள ஜெம்மா ரெட்க்ரேவ் கிளைமேக்ஸ் காட்சியில் வந்து நம் கவனம் கவர்கிறார்.
இந்த படத்தில் மொத்த பாத்திரங்களே ஒரு டஜனுக்குள் தான் இருக்கும். அவ்வளவு ஏன், ஜேசனிடம் அடி வாங்கும் ஸ்டண்ட் நடிகர்களின் எண்ணிக்கை கூட மிகக்குறைவு தான். அதுவே, இப்படத்தை ஒரு ‘பி’ கிரேடு ஆக்ஷன் படமாகத் தோற்றமளிக்கச் செய்கிறது.
வில்லன் பாத்திரத்தின் தந்தை எப்படிப்பட்டவர்? தாய் என்ன பதவி வகிக்கிறார் என்பதைக் காட்டுமிடங்களில் பட்ஜெட் பல்லிளிக்கிறது. அதையும் தாண்டி ‘இது நல்லதொரு ஆக்ஷன் படம்’ என்று சொல்ல வைக்கிறது ஜேசன் ஸ்டேதமின் இருப்பு.
கூடவே கேப்ரியேல் பெரிஸ்டெய்னின் ஒளிப்பதிவும், டேவ் சார்டி – ஜாரெட் மைக்கேல் ப்ரையின் பின்னணி இசையும் திரையில் விறுவிறுப்பைப் பெருக்குகின்றன.
’பீகீப்பர்’ எனும் புதிய பதத்தை ஆக்ஷன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் இக்கதையை எழுதியிருக்கும் கர்ட் விம்மர். தொடக்கத்தில் நீரில் நனைந்த தீப்பெட்டியை உரசிப் பற்ற வைப்பது போல திரைக்கதை நகர்ந்தாலும், பிற்பாதியில் அது கொளுந்துவிட்டு எரிகிறது.
டேவி அயரின் இயக்கத்தில் ‘சராசரி ஹாலிவுட் படம்’ என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது ‘தி பீகீப்பர்’.
ஓய்வு பெற்று அமைதியாக வாழும் முதியோர்களைக் குறிவைத்து, அவர்களது சேமிப்பைச் சூறையாடும் கும்பலை நாயகன் களையெடுப்பதுதான் ‘தி பீகீப்பர்’ கதையின் யுஎஸ்பி. நம்மூர் சினிமா பண்டிதர்களால் இது பிரதியெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து தப்பிக்கவாவது இந்த படத்தைத் தமிழில் ‘டப்’ செய்திருக்கலாம்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடாமுயற்சி: அஜித் கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?
தனுஷுடன் நடிக்க ஆசை: D51 குறித்து ராஷ்மிகா