லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சூப்பர் என குறிப்பிட்டு இன்று (அக்டோபர் 18) அதிகாலை 2.25 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவு லியோ படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்படம் சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் இடம்பெறும் வகையில் தனது சமூகவலைதள குழு மூலம் செயலாற்றி வந்தது.
படத்தின் வியாபாரம் ரஜினிகாந்த் படங்களின் முந்தையை சாதனைகளை முறியடித்ததாகவும் பிம்பத்தை கட்டமைத்தனர். அனைத்து உரிமைகளும் அவுட்ரேட் முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என சினிமா ட்ராக்கர்கள் மூலம் செய்தி பரப்பப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்கிற வேலையை தொடங்கியபோது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மேற்கொண்ட வியாபார அணுகுமுறையை மேற்கொண்டனர் லியோ திரைப்படத்தின் ஏரியா விநியோகஸ்தர்கள்.
மொத்த வசூலில் 80% விநியோகஸ்தர்களுக்கு என்பதை ஏற்க மறுத்த திரையரங்கு உரிமையாளர்கள் லியோ படத்தை திரையிட மறுத்துவருவதாக தற்போது வரை செய்திகள் வெளியாகி வருகிறது. லியோ பட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை விமர்சித்திருந்தார். ரெட் ஜெயன்ட் மூவீஸையும் குற்றம்சாட்டி இருந்தார்.
லியோ படத்தின் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்திக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு லியோ படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னையில் பிரத்யோகமாக திரையிடப்பட்டுள்ளது.
உதயநிதி ட்விட் – படக்குழு உற்சாகம்!
படத்தைப் பார்த்துவிட்டு அதிகாலை அப்படத்தைப் பற்றிய தன் கருத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
அந்த பதிவில், “தளபதி விஜய் அண்ணாவின் லியோ சிறப்பு. லோகேஷ் கனகராஜின் இயக்கம் மிகச்சிறப்பு. அனிருத்தின் இசை அன்பறிவின் சண்டைப்பயிற்சி ஆகியன அருமை. லோகேஷ்கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இனிமை. படத்தைத் தயாரித்திருக்கும் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனால் லியோ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரைக்கு வரும் முன்பே தான் பார்க்கும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் படம் பற்றிய தனது கருத்தை பதிவிடுவார். நன்றாக இல்லையென்றால் மெளனமாகிவிடுவார்.
எதிர்காலத்தில் தனக்கு அரசியல் போட்டியாளராக வருவார் என கருதப்படும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை அவர் பாராட்டியிருப்பது படத்துக்குப் பெரும்பலம் என்று படக்குழுவினர் சொல்கின்றனர்.
அரசியல்ரீதியாகவும் உதயநிதியின் பதிவு பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
லியோ படத்தின் அதிகாலைக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,லியோ படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பெரிதும் பாராட்டிப் பதிவிட்டதன் மூலம் அதிமுகவினரின் கருத்துகளைப் பொய்யாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் லியோ பட வெளியீட்டிற்கு எதிராக ஆளும் திமுக அரசு, தனது பழைய விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் எந்தவித இடையூறும் செய்யவில்லை என்பதை திரையரங்கு உரிமையாளர்களுக்கு உணர்த்தியுள்ளார் என்றே பார்க்க வேண்டியுள்ளது.
படத்தை பாராட்டி மாநில அமைச்சர் அதிகாலையில் சமூக வலைதள பக்கத்தில் பாராட்டு வாசித்ததன் மூலம் விஜய் ரசிகர்களை தன்வயப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் விஜயை ’தளபதி’ என்று குறிப்பிட்டதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
லியோ அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுத்த மாநில அரசின் அமைச்சர் அந்தப் படத்தை பாராட்டி கருத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும்.
திரையரங்குகளில் படம் வெளியான பின்பு அமைச்சர் உதயநிதி பாராட்டு ஏற்கப்படுமா இல்லை விமர்சிக்கப்படுமா என்பது தெரிந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!
ODI Worldcup 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!
காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: இஸ்ரேலின் வெறித்தனம்!