சூர்யா தற்போது நடித்துவரும் படப்பிடிப்பில் அனுமதியின்றி ரஷ்யா மற்றும் ஆப்கன் நாட்டவர்களை பங்கேற்க செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ஊட்டியில் உள்ள ஆரம்பிரிட்ஜில் உள்ள நவாநகர் பேலஸில் 20 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பை முழுமையாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது புது சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது, சூர்யா 44 படப்பிடிப்பில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த 100க்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை அனுமதியின்றி பங்கேற்க வைத்ததாக புகார் எழுந்தது.
குடியேற்ற விதிகளின்படி, வணிக அல்லது வேலை விசாவில் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மட்டுமே ஊதிய வேலைகளில் ஈடுபடலாம். சுற்றுலா விசாவில் வந்தால் ஊதியம் பெற அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில் அனுமதியின்றி சூர்யா பட படப்பிடிப்பில் பங்கேற்ற வெளிநாட்டவரிடம் நீலகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விசாரணைக்கு ஆஜராகுமாறு படக்குழுவினருக்கு போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதன்பேரில் நேற்று படப்பிடிப்பு குழுவினர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் 65-வது காவல் கண்காணிப்பாளராக என்.எஸ். நிஷா நேற்று உதகையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘தான் இப்போதுதான் வந்திருப்பதால் நடந்துகொண்டிருக்கும் விசாரணையைப் பற்றி தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் வெளிநாட்டினரை ஏற்பாடு செய்த ஏஜெண்டும், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் உள்ளூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இதுகுறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில், வேறு படங்களுக்கு வெளிநாட்டினரை ஏற்பாடு செய்த அனுபவம் வாய்ந்த ஏஜெண்ட் மூலம் தான் வெளிநாட்டினரை பணியமர்த்தினோம்.
வெளிநாட்டினரில் பெரும்பாலானோர் தமிழகம் மற்றும் கேரளாவில் தங்கியிருப்பதால், அவர்கள் இதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.
ஆனால் இந்திய குடியேற்ற விதிகள் குறித்து ஏஜெண்டுக்கும் தெரியாது என்பதால் இந்த தவறு நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மிக கனமழைக்கு வாய்ப்பு….மக்களே உஷார்!
மகளிர் டி20 உலகக் கோப்பை : இந்தியாவில் நடத்த பிசிசிஐ மறுப்பு! – ஏன்?