அகாலி: விமர்சனம்!

Published On:

| By Selvam

உதயசங்கரன் பாடகலிங்கம்

இப்படம் எல்லோருக்குமானதல்ல..!

’ஒரு படம் பார்க்கணும். ஆனா, அது வழக்கமான படமா இருக்கக் கூடாது’ என்று நினைப்பவர்களுக்காகவே அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளியாகும். கதை சொல்லல் முதல் கதாபாத்திரங்களின் தோற்றம் வரை அனைத்தும் வித்தியாசமானதாக இருக்கும். அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று ‘இஞ்ச் பை இஞ்ச்’ பார்த்தாலும், சில ‘டீட்டெய்ல்’ நம் பார்வைக்கு வராமல் மறைந்து நிற்கும். அதை யாரோ சிலர் சுட்டிக்காட்டுகையில் ‘அட ஆமால்ல’ என்று தோன்றும். அப்படியொரு படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், ‘தி அகாலி’யை ஒரு முறை பார்க்கலாம்.

இவ்வளவு ‘பில்டப்’ கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது?

யார் இந்த அகாலி?

‘தி அகாலி’ என்ற டைட்டில் கீழே இருக்கும் ‘The Deathless Legend’ என்ற வார்த்தையே அதற்கான அர்த்தத்தைச் சொல்லிவிடும். சாகா வரம் பெற்ற சாதனையாளன் என்று சொல்லலாம் என்றால் இப்படத்தின் கதை அனுமதிக்காது.
தெய்வ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டு வாழ்பவர்கள் மத்தியில், அனைத்து காலத்திலும் சாத்தானை வணங்குபவர்களும் இருந்து வந்திருக்கின்றனர். அப்படியொரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது ‘தி அகாலி’. சூனியம், மாந்த்ரீகம் போன்றவை குறித்த நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு, ‘இருட்டுலகம்’ பற்றிய சித்திரத்தைத் திரையில் வரைந்திருக்கிறது.

இந்தக் கதையை விவரிப்பது கொஞ்சம் கடினமான விஷயம். ஏனென்றால், இதில் வரும் பாத்திரங்கள் நிறைய.
2016இல் நடந்த தொடர் கொலைகள் மற்றும் அதன் பின்னிருந்த அமானுஷ்ய நம்பிக்கைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஹம்ஸா ரஹ்மானிடம் (ஜெயக்குமார்), வேறொரு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரி சௌம்யா (ஸ்வயம்சிதா) சில தகவல்களைக் கேட்கிறார். அதன் தொடர்ச்சியாக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை அவரும் விவரிக்கிறார்.

அனிதா என்ற இளம்பெண், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்கிறார். அவருக்குப் பேய் பிடித்திருப்பதாக, அவரது பெற்றோர் நம்புகின்றனர். அதேநேரத்தில், அனிதாவின் தோழியான ஜானிஸ் எனும் பெண் ஆறு பேரைக் கொன்றுவிட்டு தலைமறைவானதாகச் செய்திகள் வெளியாகின்றன.

ஹம்ஸாவும் அவரது சகாக்களும் கல்லறைகளில் இருந்து சிலர் பிணங்களைத் திருடுவது குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர். ஒருநாள் நள்ளிரவு அக்கும்பலைக் கல்லறையொன்றில் காண, அவர்களைப் பிடிக்க முயற்சிக்கின்றனர்.

அப்போது நடைபெறும் களேபரத்தில், அனிதாவைக் கடத்த முயலும் சிலரைத் தடுத்து நிற்கின்றனர். அவர்களில் எவரையும் உயிருடன் பிடிக்க முடியவில்லை. அனிதா, ஜானிஸ் குறித்து விசாரணை தொடரும்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வரும் இருட்டுலகவாசிகள் குறித்து தெரிய வருகிறது.

அவர்கள் சாத்தான் வழிபாட்டாளர்கள். அனிதாவுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், ‘ஹீலிங்’ முறையை மேற்கொள்ளும் டொனால்டு மெக்கவேயை (நாசர்) தாங்கள் சந்தித்ததாகக் கூறுகிறார் அவரது தாய். அவரைச் சென்று பார்க்கிறார் ஹம்ஸா.

அப்போது, அதிகாரத்தை அடையும் பேராசையில் பலரும் இந்த சாத்தான் வழிபாட்டாளர்களைத் தேடிச் செல்வதாகக் கூறுகிறார் டொனால்டு. அதன்பிறகும், விடாமல் அந்த வழக்கை விசாரிக்கிறார் ஹம்ஸா. ஒருகட்டத்தில் அந்த விசாரணை டொனால்டு பக்கமே திரும்புகிறது. அவரைச் சந்திக்கிறார் ஜெயக்குமார். இந்த முறை அவரைக் குற்றவாளியாகக் காண்கிறார். அது எப்படி, ஏன் என்று சொல்கிறது ‘தி அகாலி’ படத்தின் மீதி.

தலைவலி வரலாம்!

பில்லி சூனியம், அமானுஷ்யம், சாத்தான் வழிபாடு குறித்த சிறு விஷயங்கள் கூட ரொம்பவும் ஒவ்வாமை தரும் என்பவர்கள் இப்படத்தை நிச்சயமாகப் பார்க்கக் கூடாது. அதேநேரத்தில் அந்தகாரம் போன்ற வித்தியாசமான ‘ஹாரர்’ படங்களை ரசித்தவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

ஜெயக்குமாரும் அவருடன் வரும் நபரும் இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தவிர்த்து ஸ்வயம்சிதா, அர்ஜெய், நாசர், தலைவாசல் விஜய் உட்படப் பலர் இதிலுண்டு. அனிஷ் மோகனின் பின்னணி இசையும் பாடல்களும் நம்மை மிரட்டுகின்றன. கோரமான உருவங்களையும் ஒலி வடிவமைப்பையும் வைத்துக்கொண்டு பயமுறுத்தாமல், அதனை நம் மனதில் உணரும் வகையிலான இசையைத் தந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கிரி மர்பியின் காட்சிக்கோணங்கள் நம்மை பல இடங்களில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. சில இடங்களில் விஎஃப்எக்ஸுக்கு இடம் விட்டு அவர் ஒதுங்கி நிற்கிறார். இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு, சில இடங்களில் ஏதேனும் தகவல்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பு, தோட்டா தரணியின் கலை இயக்கம் என்று இதில் சிலாகிக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் பல உண்டு.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் முகம்மது ஆசிப் ஹனீப். அவரது விரிவான கதை சொல்லல், இது குறித்து அவர் பல விஷயங்களை ஆய்வு செய்திருப்பதைக் காட்டுகிறது. படத்தில் காட்டியிருப்பதில் உண்மையின் சதவிகிதம் மிகக்குறைவாகத்தான் இருக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்தும் அளவுக்கு, படம் நம்மை உளவியல்ரீதியாகப் பயமுறுத்துகிறது. மிக முக்கியமாக, அதிகாரத்தில் இருப்பவர்களில் பலர் சாத்தான்களின் அடிமைகளாக இருப்பதாக உருவகப்படுத்துகிறது.

எல்லாருக்குமானதல்ல..!

நிச்சயமாக ‘தி அகாலி’ எல்லோருக்குமான திரைப்படம் அல்ல. இந்த படத்தின் முடிவு நம்மைக் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தலாம். இதில் லாஜிக் குறைகளைத் தேடினால் வண்டி வண்டியாக அள்ளலாம். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் தான் சொல்ல வந்ததைத் திரையில் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர் முகம்மது ஹனீப்.

’நல்லது செய்தாலும் கெட்டதுதான் நமக்கு நடக்கும்’ என்று நம்பும் நமது நம்பிக்கைதான் சாத்தானை நம் அருகில் நெருங்க வைக்கும் என்கிறார் இயக்குனர். அதேநேரத்தில் ‘எது நல்லது எது கெட்டதுன்னு அவங்கவங்க பார்வை தான் தீர்மானிக்கும்’ என்கிறார்.

’இந்த படத்தில் இருந்து ஏதாவது ‘மெசேஜ்’ கிடைக்கும் என்று எதிர்பார்க்கவிலை. ஒரு புதிய உலகைக் காட்டினால் போதும்’ என்பவர்கள் தாராளமாக ‘தி அகாலி’ படம் பார்க்கலாம். இப்படியொரு படத்தைத் தயாரிக்க நிச்சயமாக ‘தில்’ வேண்டும். தயாரிப்பாளர் யுகேஸ்வரனுக்கு அது நிறையவே இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்: கலைஞர் 100 நிறைவை ஒட்டி கி.வீரமணி!

எக்ஸிட் போல் அல்ல மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்: ராகுல் சுளீர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel