மலையாளத் திரையுலகை சேர்ந்த மூத்த நடிகர்களில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்த நிலையை வகித்தவர் நடிகர் திலீப். இளம் தலைமுறையினரின் வரவால் கொஞ்சம் திண்டாடினாலும், மற்ற இருவரும் உடனடியாகச் சுதாரித்து தங்களது பாதையை மாற்றியமைத்துக் கொண்டனர்.
ஆனால், தனது பாணியில் இருந்து முழுமையாக மாறவும் முடியாமல், புதிய மாற்றங்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் முடியாமல் திலீப் திணறி வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவமொன்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தங்கமணி’ திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
ரதீஷ் ரகுநந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நீதா பிள்ளை, மாளவிகா, சித்திக், பிரனிதா சுபாஷ், அஜ்மல் அ.ஓர். அசீஸ் நெடுமங்காடு, சுதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ சார்பில் இத்தயாரிப்பில் ஒருவராகப் பங்களிப்பைத் தந்துள்ளார் ஆர்.பி.சௌத்ரி.
மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை ‘தங்கமணி’ திலீப்புக்குத் தந்திருக்கிறதா?
’தங்கமணி’ சம்பவம்
கேரளாவில் புரட்சிகர மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்படுவதில் இருந்து, ‘தங்கமணி’ திரைக்கதை தொடங்குகிறது. திருமண நாளன்று அந்த பிரபலம் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது.
காவல்துறையில் சிறப்புப் படைகள் அமைக்கப்படுகின்றன. ஐபிஎஸ் அதிகாரி அர்பிதா (பிரணிதா) அதற்குத் தலைமை தாங்குகிறார். சடலத்தின் வாய் பகுதியில் ஒரு காலண்டர் தாள் உள்ளதைக் கண்டெடுக்கின்றனர் காவல் துறையினர். அதில் 1986, அக்டோபர் 24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் ‘ராய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் காவல் துறை அதிகாரி ஈப்பன் (சம்பத் ராம்) கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இதற்குமான ஒற்றுமை உறுதி செய்யப்படுகிறது. அந்த வழக்கிலும், இதே போன்ற காலண்டர் தாள் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால், கொலையாளி யார் என்று கண்டறியப்படவில்லை.
அந்த காலண்டரின் பின்பகுதியில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் ‘தங்கமணி’ எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், வக்கன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் என்பதையும் காவல்துறையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரி உறுதிப்படுத்துகிறார்.
அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கடைசி பெயராக ஆபேல் ஜோஷ்வா மாதன் என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த ஆபேல் (திலீப்) தான் முன்னாள் அமைச்சரைக் கொடூரமான முறையில் கொலை செய்தவர்.
இந்த நிலையில், 1986-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கமணி எனும் ஊரைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் தாக்கியதும், வீடு புகுந்து சோதனை நடத்தியதும் அர்பிதாவுக்குத் தெரிய வருகிறது. அதில் தொடர்புடைய மைக்கேல் (ஜான்விஜய்) என்பவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதையும் அவர் அறிகிறார். ஏதோ ஒரு வகையில் மைக்கேலைத் தேடி கொலையாளி வருவார் என்று நம்புகிறார்.
அதேபோல, திருமண விழா நடைபெறும் இடத்திற்கு ஆபேல் வருகிறார். மைக்கேலைக் கொலை செய்கிறார். அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கையில் அர்பிதா குழுவிடம் சிக்குகிறார். அப்போது, தங்கமணியில் மனைவி அனிதா (நீதா பிள்ளை), தங்கை ராஃபேல் (மாளவிகா), தாய் உடன் தான் மகிழ்ச்சியாக வசித்து வந்ததைச் சொல்கிறார்.
சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு விடுமுறைக்கு ஊர் திரும்புகிறார் ஆபேல். மூன்றாண்டு காலப் பிரிவுக்குப் பிறகு காதல் மனைவி அனிதாவைச் சந்திக்கும் உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால், அவர் வரும் தனியார் பேருந்து தங்கமணிக்கு முன்னதாகவே நிறுத்தப்படுகிறது.
ஊருக்குச் செல்லும் சாலை சரியில்லாத காரணத்தால் பேருந்து அங்கு செல்லாது என்கிறார் நடத்துனர். ஆனால், ஊர் வரை செல்வதற்கான கட்டணம் வசூலித்தது ஏன் என்று தங்கமணியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் சண்டையிடுகின்றனர். ‘அதையெல்லாம் உரிமையாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று அவர் தெனாவெட்டாகச் சொல்கிறார்.
ஊரில் இருக்கையில் நண்பன் ராயின் (சுதேவ்) தந்தை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி பீட்டர் மணியின் (மனோஜ் கே.ஜெயன்) கையாள் வக்கனால் கொலை செய்யப்பட்டதை அறிகிறார் ஆபேல். கூடவே, ராய் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதையும் தெரிந்து அதிர்கிறார். இந்த நிலையில், அனிதா மூலமாக ராயும், ராஃபேலும் காதலிக்கும் விவகாரம் அவருக்குத் தெரிகிறது. அவரால், அதனை ஏற்க முடியவில்லை
தங்கையின் நலனைக் கருத்தில்கொண்டு, ராயை மனம் திருந்தச் செய்யும் உத்தேசத்தில் அவரைச் சந்திக்கச் செல்கிறார் ஆபேல். வழியில், வக்கனை ராயும் அவருடைய நண்பர்கள் சிலரும் தாக்குவதைக் காண்கிறார். அந்தச் சம்பவத்தில் நண்பர் ஒருவரும் வக்கனால் கொல்லப்படுகிறார். வக்கனும் உயிரிழக்கிறார். அந்தச் சம்பவத்தைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார் ஆபேல்.
அடுத்த நாள், அந்த தனியார் பேருந்தைத் தங்கமணி வரை இயக்கச் செய்து, அதனைச் சிறை பிடிக்கின்றனர் ஊர் மக்கள். இதுவரை தமது ஊர் மக்களைப் பேருந்து நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதற்கும், தரக்குறைவாக நடத்தியதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கூறுகின்றனர். காவல் துறையினர் வந்தபோதும் அவர்களது முடிவில் மாற்றமில்லை.
உண்மையில், அந்த பேருந்து உரிமையாளருக்குக் கொடுத்த வட்டிக்காசுக்காக அதன் நிர்வாகத்தைக் கவனித்து வருவது பீட்டர் மணி தான். அவருக்கு இந்தச் செயல்பாடு எரிச்சலூட்டுகிறது. அவர் அதற்கு எதிர்வினை ஆற்ற, அந்த பேருந்தினை தீ வைத்து எரிக்கின்றனர் ஊர் மக்கள்.
அதனால் கொதிப்படையும் பீட்டர் மணி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, காவல் துறையில் ‘ஒழுங்கீனமாக’ செயல்பட்ட அதிகாரிகளான மைக்கேல், ஈப்பன் போன்றவர்களை பெரும் போலீஸ் படையோடு அன்றிரவே தங்கமணிக்கு அனுப்புகிறார். அவ்வூரைச் சேர்ந்த அனைவரையும் போலவே, ஆபேலும் அன்றிரவு கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்.
அதன்பிறகு என்னவானது? எந்தச் சம்பந்தமும் இல்லாத அவரது பெயர் எப்படி வக்கன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டது? தங்கமணியில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஆபேல் தேடித் தேடிக் கொல்வது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு ரொம்பவும் நிதானமாகப் பதிலளிக்கிறது ‘தங்கமணி’யின் மீதிப்பாதி.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தங்கமணியில் 1986-ம் ஆண்டு காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அச்சம்பவத்தில் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் பாதிப்பையும் முன்னிலைப்படுத்தாமல் நாயகனின் பார்வையில் மொத்தக் கதையையும் அமைத்திருப்பது படத்துக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
கர்ணணும் இந்தியனும்
ஐம்பதுகளை தாண்டிய பிறகும், வயதில் பாதியுடைய நாயகிகளோடு நாயகர்கள் டூயட் பாடுவது ரசிகர்களான நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், திலீப்பின் முகத்தில் தெரியும் முதிர்ச்சி அவ்விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதனால் நீதா உடனான அவரது காதல் காட்சிகள் துருத்தலாகத் தெரிகின்றன. போலவே, அவரது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் நடிப்பு இப்படத்தின் திரைக்கதைக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.
நீதா, மாளவிகா, பிரணிதா சுபாஷ் என்று ஓரளவு அறிமுகமுள்ள நடிகைகளே இதில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், ‘தங்கமணி’யின் கதைக்களத்திற்கு அவர்களது இருப்பு கொஞ்சம் கூடப் பொருத்தமாக இல்லை.
இவர்கள் தவிர்த்து சித்திக், மனோஜ் கே ஜெயன், மேஜர் ரவி, சுதேவ், அசீஸ் நெடுமங்காடு, ராஜேஷ் சர்மா போன்றவர்களோடு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஜான் விஜய், சம்பத் ராம், அஜ்மல் அமீர் போன்ற கலைஞர்களும் இதிலுண்டு. அஜ்மலுக்கு இதில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு, ஷ்யாம் சசிதரனின் படத்தொகுப்பு, வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை மற்றும் பாடல்களைக் கொண்டு தனது கதைக்கு உயிர் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன்.
மனு ஜெகத்தின் கலை வடிவமைப்பில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தங்கமணி’ திரையில் ஜொலிப்பது மட்டுமே இப்படத்திலுள்ள முக்கிய அம்சம். வழக்கமான ஆக்ஷன் பாணி திரைக்கதை, ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம், உண்மையான நிகழ்வுகளின் பின்னணியை சரிவரக் காட்சிப்படுத்தாமை, பல கோணங்களில் இருந்து அச்சம்பவத்தைக் காணும் பக்குவமின்மை போன்றவை இத்திரைக்கதையைப் பழமையானதாக ஆக்குகின்றன.
ஊருக்குள் பேருந்து வராமலிருப்பதும், அதனை மக்கள் சிறை பிடிப்பதும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தை நினைவூட்டுகின்றன. ஆனால், அந்தப் படத்தில் அக்காட்சிகள் சீரிய முறையில் படமாக்கப்பட்டிருக்கும். பார்க்கும் ரசிகர்களை உலுக்கும்விதமாக அவை அமைந்திருக்கும்.
போலவே, ஷங்கரின் ‘இந்தியன்’ படத்தில் வரிசையாக ஊழல் அதிகாரிகள் கொலை செய்யப்படுவதாக முன்பாதி அமைக்கப்பட்டிருக்கும். கதையின் நாயகனான சேனாபதி (கமல்ஹாசன்) தான் அக்கொலைகளைச் செய்கிறார் என்பது முன்பாதியின் நடுப்பகுதியில்தான் தெரிய வரும். அதற்குள், ஊழல் முறைகேடுகளால் மக்கள் படும் அவதிகளும் அதிலொருவராக சேனாபதி இருப்பதும் நமக்குச் சொல்லப்படும்.
அந்த பாணியைக் கைக்கொள்ளாமல், ‘தங்கமணி’யில் தொடக்கத்திலேயே நாயகன் தான் கொலைகளைச் செய்கிறார் என்பதைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர். ’அந்த விஷயத்தில் ‘சர்ப்ரைஸ்’ வேண்டாம்; சஸ்பென்ஸ் போதும்’ என்று அவர் முடிவு செய்ததில் தவறில்லை. திரைக்கதையில் அதனைச் சொன்ன இடம் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை.
அது போதாதென்று, திலீப் இதுவரை நடித்த பல படங்களின் சாயலிலேயே இதன் காட்சிகள் உள்ளன. அதிலிருந்து வேறுபட்டு, புதியதொரு பரிமாணத்தை அவரது நடிப்பில் வெளிப்படுத்த வைத்திருந்தால் கொஞ்சமாவது கவனிப்பைப் பெற்றிருக்கும் இந்த ‘தங்கமணி’. இதனால் திலீப் உள்ளிட்ட நடிப்புக்கலைஞர்கள் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸின் திரைப்படக் கணக்கில் மேலுமொன்றாகச் சேர்ந்துள்ளது இந்த ‘தங்கமணி’.
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு!
Manjummel Boys: ஒரேயடியாக ‘உயர்ந்த’ விலை… ஓடிடி ரிலீஸ் எப்போது?
பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம்: ஆளுநர் ரவி
உச்சம் தொட்ட தங்கம்… இதுக்கு ஒரு எண்டு கெடையாதா?