‘தங்கலான்’ என்றால் என்ன?
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தங்கலான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க, ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
தங்கலான் என்றால் என்ன அர்த்தம் என்பதை திரைப்பட ஆர்வலர்கள், விமர்சகர்கள் கூகுளில் தேட தொடங்கியுள்ளனர்.
1881ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, ‘சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா’ (“CENSUS OF BRITISH INDIA) என்ற நூலில் 84 பறையர் இன உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் பேசும் பறையர் இன குழுக்களில் 59ஆவது பிரிவாக, ‘தங்கலால பறையன்’ என இடம்பெற்றுள்ள விவரம் கிடைத்துள்ளது.
தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இரவு நேரங்களில் ஊரை சுற்றிவருவதும், அந்த ஊரை சாராதவர்கள் எவரும் ஊருக்குள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவது, தேவைப்பட்டால் கிராமத்து தலைவருக்கு தகவல் தெரிவிப்பதும் இவர்களது பொறுப்பாகும்.
இந்தப் பொறுப்பில் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தென்மாவட்டங்களில் இருந்ததாக வரலாற்று தரவுகள் கூறுகின்றன.
இன்றளவும் கிராமங்களின் பொதுக்கோவில் திருவிழாக்களில் வழங்கப்படும் மரியாதைகளில் ‘காவக்காரன்’, ‘காவற்காரர்’ என அழைக்கப்பட்டு விபூதி வழங்கப்படும் நடைமுறை இருக்கிறது.
தலித் சமூகத்தவர் அதிகமிருந்த பகுதிகளில் காவல் காக்கும் பொறுப்பு அவர்கள் வசம் இருந்திருக்கலாம். தென் மாவட்டங்களில் காவற்காரர் என வழங்கப்படும் கௌரவம் தலித்துகளுக்கு வழங்கப்படுவதற்கான தரவுகள் இல்லை.
தங்கலான் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை பார்க்கும்போது குடியிருப்புகள் நடுவே பெரியதொரு கட்டடம் இருக்கிறது.. அது ஊர்த்தலைவர் (தங்கலான்) வீடாக இருக்கலாம்.
அதே போல போர்க்காட்சிகளும் உள்ளன. கத்தியுடன் விக்ரம் உள்ளிட்டோர் சண்டை இடும் காட்சிகளும் உள்ளன. ஏற்கெனவே, இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தின் கதை “ 19ஆம் நூற்றாண்டில், கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது” எனக் கூறியிருந்தார்.
ஆகவே, தங்கத்தை தோண்டி எடுப்பது, அதற்கான நிலப்பகுதி யாருக்கு சொந்தம் என்கிற அடிப்படையில் பூர்வகுடிகள் தலித் சமூகம்தான் என்பது திரைக்கதையில் முன் நிறுத்தப்படுமா,
அல்லது ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு எதிராக போராடியவர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தலித் சமூகத்தவரே என முன்மொழியும் திரைக்கதையாக இருக்குமா என்கிற விவாதங்கள் தொடங்கியிருக்கிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இராமானுஜம்
திரைப்படத் தயாரிப்பில் தோனி என்டர்டெய்ன்மென்ட்
தீபாவளி பண்டிகை : சென்னையில் பட்டாசு கழிவு, காற்று மாசுபாடு அதிகரிப்பு!