பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஆகஸ்ட் 15 வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்து, விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான படம் ‘தங்கலான்’. அந்த அளவிற்கு இந்தப் படத்தின் டீசர், டிரெய்லரின் மேக்கிங், விக்ரமின் அபாரமான நடிப்பு, பா.ரஞ்சித்தின் காட்சியமைப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
ஆனால், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு வந்த கலவையான விமர்சனம் ஆகியவை படத்தின் வசூலை வெகுவாக பாதித்தது.
காரணம், இந்தப் படத்தின் திரைமொழி எவரும் எதிர்பார்த்தபடி இல்லாதது, ’மாய எதார்த்தவாதம்’ என தமிழ் சினிமாவில் பரிட்சயம் இல்லாத ஒரு மொழியில் அமைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தப் படம் பேசும் அரசியல், வரலாறு, விக்ரம், பார்வதி, பசுபதி உட்பட அனைத்து நடிகர்களின் நடிப்பு, மேக்கிங் எனப் படத்தின் பல கூறுகளை விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்தப் படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனுக்கும் வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தங்கலான் ஓடிடி வெளியீடு வெகு நாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது. புகழ்பெற்ற ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளமே இந்தப் படத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், படத்திற்கு கிடைத்த குறைவான வரவேற்பினால் ஓடிடி விற்பனைத் தொகையில் இழுபறி நீடித்து வந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்கலான் திரைப்படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
நெட்ஃபிளிக்ஸ் உடனான பேச்சுவார்த்தையில் 12 கோடி ரூபாய் வரை குறைத்து சுமார் ரூ.36 கோடிக்கு ஓடிடி வியாபாரத்தை முடித்துள்ளார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ‘தங்கலான்’ படத்தின் சாட்டிலைட் வியாபாரம் முடியாமல் இருந்து வரும் நிலையில், ஓடிடியையும் இழுபறியில் விடுவது சரியாக இருக்காது என்ற அடிப்படையில் இத்தகைய முடிவை ‘தங்கலான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
‘தங்கலான்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
குடியுரிமை சட்டப்பிரிவு 6A செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
’புஷ்பா – 2’: ரிலீஸுக்கு முன்னரே ரூ.900 கோடியா?
ஏஐ-யிலும் தெற்கு, வடக்கு பிரிவினையா? – பாய்ந்த ஷோஹோ ஸ்ரீதர் வேம்பு