கேரள மாநிலத்தில் தங்கலான் படத்திற்காக நடத்த திட்டமிட்டிருந்த விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன், நீலம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. நேற்று முதல் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை தென்னிந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் படக்குழு நடத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை மாநில பேரிடராக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலையாள திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வயநாடு பேரிடர் நிவாரண பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டதுடன் நடிகர்கள் கோடிக்கணக்கில் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்கள்.
வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரண நிதிக்கு இந்திய சினிமாவில் முதல் நபராக 20 லட்சம் ரூபாய்நிதி வழங்கினார் தமிழ் நடிகர் விக்ரம். அதன் பின்னரே தமிழ், தெலுங்கு, மலையாள திரை கலைஞர்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில்’ தங்கலான்’ திரைப்படத்திற்காக நடத்த திட்டமிட்டிருந்த விளம்பர நிகழ்வுகளை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு ஆகும் செலவான ஐந்து லட்சம் ரூபாயை கேரள முதல் அமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்குவழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62? – தமிழக அரசு மறுப்பு!
டாப் 10 நியூஸ்: மருத்துவர்கள் போராட்டம் முதல் கங்குவா டிரெய்லர் ரிலீஸ் வரை!