அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தை ‘சர்தார்’, ‘ரன் பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 7) மாலை வெளியானது. பேண்டசி படங்கள், தனி மனித கதாநாயக பிம்பத்தை முன்னிறுத்தும் படங்கள், ஜாதிய அரசியல் பேசும் ரத்த வாடை பொங்கி வழியும் படங்களுக்கு மத்தியில் இதமான தென்றலாக வழக்கொழிந்துபோன கிராமிய மக்கள் வாழ்வியலைப் பேசக்கூடிய படமாக தண்டட்டி இருக்கும் என்பதை படத்தின் முன்னோட்டத்தில் உணரமுடிகிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு தண்டட்டி என்றாலே தெரியாத சூழலில் அதன் பாரம்பரியம், அதன் சமூக முக்கியத்துவம், பெண்களின் பொருளாதாரத்தில், சமூக கௌரவத்தில் தண்டட்டி என்கிற தங்க ஆபரணம் எந்தளவு முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்தது என்பதை சொந்த அனுபவத்தில் இருந்து திரைக்கதை எழுதியதாக கூறுகிறார் அறிமுக இயக்குநர் ராம்சங்கய்யா.
தண்டட்டி ட்ரெய்லர் எப்படி?
தங்கப் பொண்ணு காதுல இருந்த தண்டட்டிய காணோம்டி’ எனத் தொடங்கும் இந்த ட்ரெய்லர் படத்தின் மொத்த கதையும் இந்த ஒற்றை வசனத்தை மையப்படுத்தித்தான் நகரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் காவல் துறை அதிகாரியாக பசுபதி ஒற்றை ஆளாக மாட்டிக்கொண்டு தவிப்பதும், விவேக் பிரசன்னா குடித்துவிட்டு ரகளை செய்வதும் ரசனையாக பார்வையாளனை ஈர்க்கும்.
விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய குறைவான கதாபாத்திரங்களை கொண்டும், ஆர்ப்பாட்டமில்லாத அதே வேலையில் அதகளமான கிராமிய பின்னணியில் படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
படம் ஜூன் 23-ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவித்துள்ளனர்.
இராமானுஜம்
’சோழ மண்டலத்தில் பிள்ளையார் சுழி’: பன்னீர்
விஜய் – மாணவர்கள் சந்திப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!