தம்பிக்கு எந்த ஊரு – 39 ஆண்டுகள்!

சினிமா

இளையராஜாவின் பாடல்கள் பிடிக்குமா என்று கேட்டால், நம்மில் பலர் உடனடியாக ‘ஆம்’ என்போம்.

ஆனால், எந்த பாடல் பிடிக்குமென்று கேட்டால் பலமாக யோசிப்போம். ’இதுதான் பெஸ்ட்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு எத்தனையோ பாடல்களை நம் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றிய பெருமைக்குரியது அவரது இசை.

வாழ்க்கை, வளர்ந்த சூழல், தனிப்பட்ட அனுபவங்களுக்கேற்ப, ஒவ்வொருவரிடமும் பெரும் பாடல் பட்டியலே இருக்கும்.

அவற்றில் பொதுவானவற்றைத் தேர்ந்தெடுத்தால், சில பாடல்கள் முதன்மையாக இடம்பெறும். அவற்றில் ஒன்று, ’தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று’.

ஆன்மாவை எளிதாகத் தொடும் பாடலொன்றைக் கேட்க விரும்பினால், அதனை எளிதாகப் பூர்த்தி செய்யும் இந்த பாடல்; 2கே கிட்ஸுக்கும் கூட இதில் மாற்றுக்கருத்து இருக்காது.

’தம்பிக்கு எந்த ஊரு’ உருவான காலகட்டத்தில், ஒரு அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இளையராஜா.

அவரால் பாடல் கம்போஸிங் செய்ய முடியாத நிலைமை. ஆனாலும், விசிலடித்து பாடல் மெட்டை பதிவு செய்து தந்தாராம். அதற்காக, இளையராஜா செலவிட்டது மிகச்சில நிமிடங்கள் தான். அப்படிப் பதிவான பாடல்கள் கங்கை அமரன் உதவியுடன், ராஜா குழுவினரால் முழுமையான கீதங்களாக மாறியிருக்கின்றன.

அந்த நான்கு பாடல்களில் ‘என் வாழ்விலே வரும்’ பாடல் மட்டும் ஏற்கனவே வெளியான ‘மூன்றாம் பிறை’ இந்தி பதிப்பில் இடம்பெற்றிருந்தது.

‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டு, திரையில் ஒன்று சேர்த்துப் பயன்படுத்தப்பட்டன.

அப்படியொரு பாடலைத் தந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படம், ரஜினியின் திரை வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படைப்பு.

இன்றோடு (ஏப்ரல் 19) அப்படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகிறது.

Thambikku Entha Ooru Movie

தம்பிக்கு எந்த ஊரு!

இன்றளவும் கிராமங்களில் புதிதாக வரும் நபரை விசாரிக்க, ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்ற கேள்வி கேட்கப்படுகிறது. வட்டாரம், உச்சரிப்பு மாறினாலும், அந்த கேள்வி மாறாது. காரணம், வருபவரின் பின்புலத்தை அறியப் பயன்படுத்தும் வார்த்தைகள் அது.

அதன் பின்னணியில் கரிசனமும் இருக்கும்; கயமைத்தனமும் இருக்கும். கேட்பவரின் மனதிற்கேற்ப அது மாறும். அப்படியொரு டைட்டில் சூட்டுவதற்கு ஏற்ப, படத்தின் கதையும் இருக்கும்.

ஒரு பெரிய செல்வந்தரின் மகன் ஊதாரியாகத் திரிகிறார். சொத்துக்களை நிர்வகிக்கச் சொன்னால், அதனை ஏற்க மறுக்கிறார். அப்படியொருவருக்கு இந்த உலக வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையும், பணம் சம்பாதிப்பது எளிதல்ல என்று புரியவைக்கவும், ஒரு சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறார் அந்த பணக்காரர்.

மிகவும் கண்டிப்பான, நேர்மையான, நல்லவராக வாழும் தன் நண்பரிடம் வேலை செய்யுமாறு அனுப்புகிறார்.

அதனால், பெருநகரத்தில் உல்லாசமாக வாழ்ந்த அந்த இளைஞர், ஒரு கிராமத்திற்குச் சென்று ஓராண்டு வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். எந்தச் சூழலிலும், தான் யார் என்ற உண்மையைச் சொல்லக்கூடாது என்பது அந்த மகனுக்குத் தந்தை விதிக்கும் நிபந்தனை.

அதனை அந்த இளைஞர் பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதுதான் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் கதை. அக்கிராமத்திலுள்ள ஒரு செல்வந்தரின் மகளோடு அவருக்குக் காதல் மலர்வதும், அதன் தொடர்ச்சியாக மோதல்களைச் சந்திப்பதும் திரைக்கதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

ரொம்பவே இலகுவான கதை என்றபோதும், மனதைத் தைக்கும் அளவுக்குக் காட்சியமைப்பும் கதாபாத்திர வடிவமைப்பும் இருப்பதுவே இன்றளவும் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தைச் சிலாகிக்கக் காரணமாகின்றன.

Thambikku Entha Ooru Movie

இன்னொரு ‘அன்பே வா’!

எம்ஜிஆரின் திரை வாழ்வில் ஏவிஎம்மின் தயாரிப்பில், திருலோகசந்தரின் இயக்கத்தில் நடித்த ‘அன்பே வா’ ஒரு முக்கியமான திரைப்படம்.

ஏனென்றால், அது முழுக்க முழுக்க ரொமான்ஸையும் காமெடியையும் சார்ந்து எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வெளியான எம்ஜிஆர் படங்களில் இருந்து வேறுபட்டிருந்தது.

அதேபோல, முழுக்க ஸ்டைல் கலந்த ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வந்த ரஜினியைக் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் ரசிக்கும்படி செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது ‘தம்பிக்கு எந்த ஊரு’.

என்னதான் ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும், எல்லா தரப்பு மக்களையும் சென்றடைவதே திரையுலக நட்சத்திரங்களின் ஆசையாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில், வெறுமனே ‘பழிக்குப் பழி’ கதைகளில் நடித்து இளையோரையும் ஆண்களையும் மட்டுமே ரசிகர்களாகப் பெற்றிருந்தார் ரஜினி.

ஆதலால், எம்ஜிஆருக்கு ‘அன்பே வா’ போன்று அவரது திரை வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்த படமென்றும் இதனைச் சொல்லலாம்.

அறைக்குள் நுழைந்த பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு அலறுவது, ஓடையில் மாட்டைக் குளிப்பாட்டுவது உட்பட சில காட்சிகளில் ரஜினியின் நகைச்சுவை நடிப்பு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

செந்தாமரையிடம் ரஜினி நக்கலாக பேசிவிட்டுச் சமாளிக்கும்போது, நம்மையும் அறியாமல் சிரிப்பு தொற்றும்.

கிராமம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் அறியாமையுடன் அங்கிருக்கும் பழக்க வழக்கங்களை அணுகுவதாக ரஜினியின் பாத்திரம் அமைந்திருக்கும்.

அந்த காட்சிகளில் மட்டும் எதுவும் தெரியாத அப்பாவியாக மட்டுமே அவரது பாத்திரம் நடந்து கொள்ளும். பின்னாளில், இதையே தான் ஏற்கும் பாத்திரங்களின் ‘டெம்ப்ளேட்’ ஆகவும் மாற்றிக்கொண்டார் ரஜினி.

‘ஊர்க்காவலன்’, ‘குரு சிஷ்யன்’, ’படிக்காதவன்’, ’ராஜாதி ராஜா’, ‘மன்னன்’, ‘வீரா’, ‘முத்து’, ’படையப்பா’ உள்ளிட்ட பல படங்களின் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்தால் அதனை உணர முடியும்.

’தம்பிக்கு எந்த ஊரு’வில் பாம்பு வரும் காட்சி, மீண்டும் ‘அண்ணாமலை’யில் பயன்படுத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் பார்த்திபன் அளித்த பேட்டியொன்றில், ‘தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மட்டும் நடிக்கவில்லை என்றால் ரஜினியின் திரை வாழ்க்கையே மாறியிருக்கும். அதில்தான், அவர் நகைச்சுவைக் காட்சிகளில் அதிகம் நடித்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

கே.பாலச்சந்தரின் ‘தில்லுமுல்லு’ நகைச்சுவை திரைப்படம் என்றபோதும், அது ரஜினியின் கமர்ஷியல் படங்களுக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்காது என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

Thambikku Entha Ooru Movie

ராஜசேகர் எனும் அற்புதம்!

தமிழ் திரையுலகில் கமர்ஷியல் படங்கள் தந்து வெற்றிகளைக் குவித்த இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் தந்தவர் இயக்குனர் ராஜசேகர்.

தன் பெயருக்குப் பின்னால் பிஎஸ்சி என்ற பட்டத்தைச் சேர்த்து இடுவது அவரது வழக்கம்.

எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க இயக்குனராகத் திகழ்ந்தவர். தொண்ணூறுகளில் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றவர்களுக்கு இருவரும் முன்னோடிகள் என்றால் அது மிகையாகாது.

இயக்குனர்கள் ராம.நாராயணன் மற்றும் எம்.ஏ.காஜாவிடம் உதவியாளராக, கதை வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் ராஜசேகர்.

அதன் காரணமாக, அவர்களது கதையைக் கொண்டு ‘ஹுன்னிமாய ராத்திரியெல்லி’ எனும் கன்னடப்படத்தை இயக்கினார். அந்த அறிமுகமே, தெலுங்கிலும் இந்தியிலும் அப்படத்தை ரீமேக் செய்ய வைத்தது.

தமிழில் ‘கண்ணீர் பூக்கள்’, ‘அம்மா’ ஆகிய படங்களை இயக்கினாலும், தியாகராஜனை நாயகனாகக் கொண்டு உருவான ‘மலையூர் மம்பட்டியான்’ படமே ராஜசேகரை நட்சத்திர இயக்குனராக மாற்றியது. இந்தியில் அந்தப் படம் ‘கங்குவா’ என்ற பெயரில் உருவானது; அதில் நாயகனாக நடித்தவர் ரஜினி. அந்த தொடர்பே, பஞ்சு அருணாசலம் எழுதி, தயாரித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தை ராஜசேகர் இயக்கக் காரணமானது.

அதன்பிறகு ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ’மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ என்று ரஜினியின் படங்களை தொடர்ச்சியாக இயக்கினார்.

கமல் நடித்த மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றாக ‘காக்கிச்சட்டை’, ‘விக்ரம்’ படங்களை இயக்கியவரும் இவரே.

தியாகராஜன், விஜயகாந்த், சிவாஜி கணேசன், சரண்ராஜ், பாண்டியராஜன் ஆகியோரை அடுத்தடுத்து இயக்கிய ராஜசேகர், ‘தர்மதுரை’ படத்தின் நூறாவது நாளன்று ஒரு விபத்தில் மரணமடைந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் அது பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

இளமையான ரஜினி!

எண்பதுகளுக்கு முன்னர் வில்லனாக நடித்தபோதே ரஜினியின் ஸ்டைலான நடிப்பு இளைஞர்களைக் கவர்ந்தது. போலவே, அடர்த்தியான, நீண்ட அவரது ஹேர்ஸ்டைலும் ரொம்பவே பிரபலம்.

பக்கவாட்டில் தலைவாரும் ஸ்டைலை ‘ஊர்க்காவலன்’ படத்தில் இருந்து மாற்றிக்கொண்டார் ரஜினி. அந்த வகையில், முந்தைய ஹேர்ஸ்டைலில் அவரை மிக அழகாகக் காட்டிய படமாக அமைந்தது ‘தம்பிக்கு எந்த ஊரு’.

குறிப்பாக, ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் காட்சியில் ரஜினியின் தோற்றம் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

உண்மையிலேயே, அதில் காதலில் விழுந்த ஒரு இளைஞர் போன்றிருப்பார்.

அன்று முதல் இன்று வரை ரஜினியின் ரசிகர்களாக இருப்பவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தோற்றம் அது.

காலம் மாறினாலும், நம் மனதில் இருக்கும் பிம்பம் மாறாது என்பது தானே திரைப்படக் கலையின் சிறப்பு. அப்படியொரு அழியா பிம்பத்தைத் தந்து 39 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது ‘தம்பிக்கு எந்த ஊரு’.

உதய் பாடகலிங்கம்

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: பினராயி விஜயன் ஆதரவு!

ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா?: வைத்திலிங்கம் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0