உதய் பாடகலிங்கம்
வயதையும் அனுபவத்தையும் வெளிக்காட்டும் தம்பி ராமையாவின் நடிப்பு!
தம்பி ராமையா. நடிகர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என்பது போன்ற சிறப்புகளைத் தாண்டி, பலருக்குத் தன்னம்பிக்கை பாடம் சொல்லித்தரும் அளவுக்குச் செழுமையான வாழ்வனுபவங்களைக் கண்டவர்.
அதுவே அவர் பங்கேற்கும் படப்பிடிப்பு முதல் மேடை நிகழ்ச்சிகள், ஊடகப் பேட்டிகள், தனிப்பட்ட சந்திப்புகள் என்று அனைத்திலும் அவரைக் கலகலப்பு மனிதராக வெளிக்காட்டி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராராபுரம் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தம்பி ராமையா. தந்தை கவிஞர், எழுத்தாளர் என்பதால் சிறு வயதில் இருந்தே, இவருக்கும் நாடகம், சினிமா மீது காதல் பெருகியது. அது மட்டுமல்லாமல் இசையிலும் ஆர்வத்தைக் காட்டச் செய்தது.
பள்ளிப் பருவத்தில் நாடகங்களில் நடிப்பதில் காதல் கொண்டிருந்தவர், வாலிபன் ஆனபின்னர் சினிமாவில் சேர வேண்டுமென்று மோகம் கொண்டார். சினிமாவில் நுழைவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், குடும்பச்சூழல் காரணமாக ஒரு பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவரைச் சூழ்ந்தது. அதற்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடிக் கொண்டார்.
மனைவி, மகன், மகள் என்றான பிறகு அவர்களைச் சௌகர்யமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், அவர் முன்னே விஸ்வரூபமெடுத்தது. அந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வசனம் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. வருமானமா, நீண்டநாள் கனவா என்ற கேள்வி எழுந்தபோது, இரண்டையும் ஒன்றாகப் பற்ற விரும்பினார். அதன் தொடர்ச்சியாக டி.ராஜேந்தர், பி.வாசு போன்ற வெற்றிப்பட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
வயதும் வாழ்வும் தந்த அனுபவமும் அவரது பேச்சில் தானாக வந்து சேர்ந்தன. அதுவே அவரது அடையாளமாக மாறியது. அவர் பணியாற்றிய ‘மலபார் போலீஸ்’ படத்தில் முகம் காட்டும் வாய்ப்பினைத் தந்தது.
பிறகு, இயக்குனர் நாற்காலியில் அவரை அமர வைத்தது முரளி, நெப்போலியன் நடித்த ‘மனுநீதி’. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாவிடினும், வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அந்த வரவேற்பே, அவரோடு தம்பி ராமையா தொடர்ந்து பல படங்களில் இணைந்து பயணிக்கச் செய்தது.
ஜோர், வெற்றிவேல் சக்திவேல், ஆறு, கோவை பிரதர்ஸ், சில்லுனு ஒரு காதல், வாத்தியார், மா மதுரை, தொட்டால் பூ மலரும் என்று வடிவேலு நடித்த பல படங்களில் தம்பி ராமையா அளித்த பங்களிப்பு, அந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசிகர்கள் வரவேற்கிற விதத்தில் அமைந்தது. அது இருவருக்குமான பிணைப்பை அதிகமாக்க, ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தை அவர் எழுதி இயக்கினார். ஆனால், அதன் தோல்வி அவரை முடக்கியது.
எந்த திசையில் செல்வதென்று தம்பி ராமையா தவித்த காலகட்டம் அது. அப்போது, அவரது நகைச்சுவையைப் புறந்தள்ளிவிட்டுச் சிடுசிடுவென்ற முகத்தோடு ‘மைனா’வில் நடிக்க வைத்தார் இயக்குனர் பிரபு சாலமன். அந்த பாத்திரம், அதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.
அந்த ஒரு விஷயமே, அப்படத்தின் மீது அவரை நம்பிக்கை கொள்ளச் செய்தது. அந்த ஈடுபாடு படப்பிடிப்பு முழுவதும் எதிரொலித்தது. அதன் விளைவு, படம் வெளியானபிறகு ரசிகர்களிடத்தில் தெரிந்தது. தேசிய விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.
’மைனா’வின் வெற்றிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கிய கும்கி, தொடரி, செம்பி மட்டுமல்லாமல், அவர் தயாரித்த ‘சாட்டை’யிலும் நடித்து பெரும் புகழ் பெற்றார் தம்பி ராமையா.
பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ அவரது புகழின் உயரத்தை மேலும் கூட்டியது. தொடர்ந்து நீர்பறவை, நேரம், ஜில்லா, வீரம், நிமிர்ந்து நில், உன் சமையல் அறையில் என்று பல படங்கள் அவருக்கான தனித்துவத்தைக் காட்டும் வகையில் அமைந்தன.
அந்த வரிசையில் ‘கொம்பன்’ தனியிடம் பெற்றது. நகைச்சுவைதான் இவர் வழியோ என்று ரசிகர்கள் எண்ணியபோது, தனி ஒருவன் படத்தில் வில்லனாக வந்த அரவிந்த் சுவாமியின் அப்பாவி அப்பாவாக நடித்தார் தம்பி ராமையா. வேதாளம் படத்தில் அழுகையை வரவழைத்தார்.
பலவேறுபட்ட பாத்திரங்களில் நடிக்கிற பாங்கும், அதன் வழியே கிடைத்த வாய்ப்புகளும் இடைவிடாமல் அவரை இயங்கச் செய்தது. அந்த பரபரப்புக்கு நடுவே, தன் மகன் உமாபதியை நாயகனாக்கி ‘மணியார் குடும்பம்’ படத்தைத் தந்தார்.
இடையிடையே விஸ்வாசம், அடுத்த சாட்டை, தலைவி என்று தலைகாட்டிய தம்பி ராமையாவை ஒரு கதை நாயகனாக்கிக் காட்டியது சமுத்திரக்கனியின் ‘வினோதய சித்தம்’. கொரோனா காலகட்டத்தில் வெளியான அந்தப் படம், பல மொழி ரசிகர்களிடத்திலும் அவரை அறிமுகப்படுத்தியது.
அனைத்துக்கும் நடுவே தன் மனதில் பொதித்த கதைகளுக்கு உருவம் தரும் விஷயத்தில் தம்பி ராமையா சமரசம் கொள்ளவில்லை. தனது வழி தனி வழி என்று இயங்கிவரும் அவர், இதோ இப்போது ‘ராஜாகிளி’யில் மீண்டும் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மகனின் இயக்கத்தில் கேமிரா முன்னே இயங்கியிருக்கிறார்.
ஏற்கனவே பின்னணி பாடிய அனுபவமுள்ள தம்பி ராமையா, இப்படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார். வாழ்வில் பல சோகங்களையும் சுகங்களையும் கடந்தபோதும், அதுவே எல்லா மனிதருக்குமானது என்ற எண்ணத்தை எல்லோருக்கும் கடத்தி வருகிறார். அதன் வழியே தன்னம்பிக்கை பாடத்தைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
எத்தனை முறை ஏறினாலும் சறுக்கல் மட்டுமே வாய்க்கிறதே என்று பதற்றத்தைச் சுமப்பவர்கள் மத்தியில், ‘மீண்டும் ஏறு’ என்கிற உந்துதலை தருவது தம்பி ராமையா போன்ற சில பிரபலங்களின் வாழ்க்கை தான். ஐம்பதிலும் ஏற்றம் உண்டு என்று சொல்கிற அவரது சொல்லும் செயலும் தொடர்ந்து அவரை இயக்கி வருகிறது. கூடவே, நம்மையும் முன்னோக்கி இழுத்துச் செல்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…