பேயாட்டம் போடும் 2கே கிட்ஸுக்கு மிஷ்கின் பேச்சு ஊக்கம் தராதா? – தாமரை கடும் தாக்கு!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின், நான் ஒரு குடிகாரன். மற்ற அனைவரையும் விட அதிகமாக குடிப்பேன். இனியும் குடிப்பேன். சாராயம் காய்ச்சும் அளவுக்கு எனக்கு தொழில்நுட்பம் தெரியும் என்று பேசியிருந்தார். மிஷ்கினின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மிஷ்கினின் பேச்சு, குறித்து பாடலாசிரியை தாமரை தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “நன்றாகக் கேளுங்கள். உங்களைப்போன்ற பொதுமக்கள் காறித்துப்பினாலாவது புத்தி வருமா என்று பார்க்கலாம்.

ஒரு பொதுமேடையில் இவ்வாறு இழிமொழியில் பேசும் அதிகாரத்தை இயக்குநர்களுக்கு யார் தந்தது? வெற்றிபெற்றவர்களென்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அதை ரசித்துக் கைத்தட்டிச் சிரிக்கிற, மேடையிலுள்ள மற்றவர்களும் பார்வையாளர்களும் இதற்கு உடந்தைதான்.

இப்படிதான் சமூகச்சீரழிவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறார்கள். இதுபோன்ற அநாகரிகங்களைப் பலத்தகுரலில் பொதுமக்கள் கண்டனம் செய்யவில்லையெனில், நம் அடுத்த தலைமுறையை ஒரு கேவலமான சமுதாயத்தில் விட்டுச்செல்கிறோம் என்று பொருள்.

சில ஆண்டுகளுக்குமுன், இந்த மிஷ்கின், எம்ஐடி எனும் அண்ணாப்பல்கலைக்கழகப் பொறியியல்கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களிடையே இதேபோல் மிகக்கொச்சையான ஓர் உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

பேராசிரியர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். என் மகன் உட்பட சில மாணவர்கள் என்னிடம் புகாருரைத்தார்கள். ‘படிக்காதீர்கள், படிப்பதெல்லாம் வீண், பெற்றோரை எதிர்த்துப் புரட்சி செய்யுங்கள்’ என்கிற ரீதியில் போயிருக்கிறது பேச்சு. ஏற்கனவே பேயாட்டம் போடுகிற ஈர்க்கிகளுக்குக் (2கே குழந்தைகள்) காலில் சலங்கையையும் கட்டிவிட்டது போலாகாதா ? மாணவர்களுக்கு அறிவுரை, அறவுரை சொல்லாவிட்டாலும் சரி ஆனால் தவறான வழிகாட்டல் தர இவர் போன்றவர்களுக்கு எது துணிவைத்தந்தது? ‘புகழ்பெற்ற’ இயக்குநர் என்பதுதானே ?

தவறுசெய்கிறவர்கள் யாராக இருந்தாலும் – குறிப்பாகத் திரைத்துறையைச் சார்ந்தவர் என்றால் – கண்டிப்பாகத் தட்டிக்கேட்க வேண்டும். அவர்கள், தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்திருக்கிறோம் என்கிற மிதப்பில் இருக்கிறார்கள். கொஞ்சம் இந்தப்பூமியில் வாழ்வது என்றால் என்ன என்று காட்டிக் கொடுங்கள்” என்று தாமரை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share