நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் தலைவர் 170 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக அப்டேட்களை அள்ளி வீசுகிறது.
ஜெய் பீம் படம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் விவரங்களை லைக்கா நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இதுவரை மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள்,
தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தது.
ராணா, பகத் பெயர்கள் அறிவிக்கப்பட்ட உடனே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தலைவர் 170 படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
கோலிவுட், டோலிவுட், மோலிவுட் ஸ்டார்கள் ரஜினி படத்தில் இணைந்ததை தொடர்ந்து,
பாலிவுட்டின் சீனியர் ஸ்டார் ஆன அமிதாப் பச்சன் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
“Shahenshah of Indian Cinema Mr. Amitabh Bachchan On board for Thalaivar 170” என்று லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
ரஜினிகாந்த் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அமிதாப் பச்சன் நடித்த பல ஹிந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து எக்கச்சக்க ஹிட் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி அமிதாப் பச்சன் உடன் இணைந்து சில ஹிந்தி படங்களிலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
அமிதாப் பச்சனும் ரஜினியும் கடைசியாக இணைந்து நடித்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியான “Hum”. இந்த Hum படம் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியின் “பாட்ஷா” படத்திற்கான இன்ஸ்பிரேஷன்.
தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சனும் ரஜினியும் தலைவர் 170 படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோரை களமிறக்கி வெற்றி கண்ட ரஜினிகாந்த் அதே ஃபார்முலாவை தலைவர் 170 படத்திற்கும் அப்ளை செய்கிறார் என்று கூறப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி பெட்டிகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!