திருச்சி ரைபிள் கிளப்பில் உள்ள நடிகர் அஜித்தை காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 24 ம் தேதி தொடங்கி 31 ம் தேதி வரை நடைபெறவுள்ளது .
10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16,19,21, மற்றும் 21 – 45, 45-60 வயதினருக்கான பிரிவின் கீழ் தமிழகம் முழுவதும் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டார்.

இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மதியத்திலிருந்தே திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் திரண்டனர்.

கூட்டம் அதிகரித்துக் கொண்டே போன நிலையில், அனைத்து ரசிகர்களுக்கும் காட்சி தர வேண்டும் என நினைத்த நடிகர் அஜித் மாடிக்கு சென்று ரசிகர்களை பார்த்து கையசைத்தும், முத்தம் கொடுத்தும், தம்ப்ஸ் அப் செய்தார். வலிமை படத்திற்கு பின்பு தல அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து அங்குள்ள ரசிகர்களுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அஜித் இன்னும் வெளியே வராததால் குடும்பம் குடும்பாக ரசிகர்கள் அவரை காண வந்த வண்ணம் உள்ளனர்.

- க.சீனிவாசன்