உதயசங்கரன் பாடகலிங்கம்
வழக்கமான ‘தெலுங்கு பட’ அனுபவம் கிடைக்கிறதா?
தெலுங்கு டப்பிங் படங்களைப் பார்ப்பதில் ஒரு வசதி இருக்கிறது. ’யதார்த்தம் கிதார்த்தம்’ என்று புலம்பாமல் ‘பதார்த்தமாக’ திரையைப் பார்த்து ரசிக்கலாம். எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களும் திரையில் தெரியும். செட்கள் அமைப்பது, பின்னால் திரியும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களை கலர்ஃபுல் உடைகளில் வலம் வர வைப்பது என்று பின்னியெடுப்பார்கள். இது போகச் சண்டைக்காட்சி, பாடல்கள் என்றால் வெளிநாட்டு லொகேஷன்கள் அல்லது ‘கலர்ஃபுல்’ செட்களில் படமாக்குவார்கள். அனைத்துக்கும் மேலே, நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்காத சாகசங்களைத் திரையில் செய்து காட்டுவார் ஹீரோ.
உண்மையைச் சொன்னால் ஜேம்ஸ்பாண்ட், ஜேசன் பார்ன் வகையறா படங்களைப் பார்த்து வராத உத்வேகம் ஒரேயொரு தெலுங்கு படத்தைப் பார்த்தால் கிடைத்துவிடும். அதிலும் பாலகிருஷ்ணா படங்கள் இன்னும் ஒரு படி மேலே.
அப்படிப்பட்ட திரையனுபவத்தை ரொம்பவே நேர்த்தியாக உணரவைக்க மெனக்கெடுபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரோடு ஜோடி சேர்ந்து அவர் நடித்திருக்கும் படம் ‘தேவரா’.
பான் இந்தியா படமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் வெளியாகியிருக்கும் இந்த தெலுங்கு படத்தினை கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார்.
இந்த படம் ‘பான் இந்தியா’ அந்தஸ்துக்கேற்ப பிரமாண்டமான காட்சியனுபவத்தைத் தருகிறதா?
கதைக்குள் கதை!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நிகழப் போவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைக்கிறது. உடனடியாக, அந்த கும்பலைப் பிடித்து முடக்கும் பணிக்காகச் சிறப்பு படையொன்றை நியமிக்கிறார் உள்துறை அமைச்சர் (ஜாகீர் கான்).
அந்தக் குழுவைச் சேர்ந்த தயா, யதியைத் தேடிச் செல்கிறது அந்தக் குழு. யதியின் அடியாள் ஒருவரைக் கைது செய்கிறது. அந்த நபர் தரும் தகவல் மூலமாக, இறுதியாக முருகன் என்பவரைக் காண யதி சென்றது தெரிய வருகிறது. அந்த முருகன் உயிரோடு இல்லை. அதனால், அவரது நண்பரான துளசியைச் சந்திக்கிறார் அந்த குழுவின் தலைமையதிகாரி (அஜய்).
துளசி (அபிமன்யூ சிங்) ஒரு போலீஸ் அதிகாரி. முருகனோடு (முரளி சர்மா) சேர்ந்து வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்படும் ஆயுதங்களை ஊருக்குள் கொண்டுவர, அவர் உதவியிருக்கிறார். அவர்களுக்கு உதவிகரமாக இருந்தவர்கள் ரத்னபுரி எனும் கடலோரப் பகுதியைச் சார்ந்தவர்கள். அங்கு, மலை மீது நான்கு கிராமங்கள் இருக்கின்றன. கடலைக் காப்பதே அவர்கள் காலம்காலமாகச் செய்துவந்த பணி.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கிராமங்களைச் சார்ந்தவர்கள் முருகன், துளசிக்காகக் கடத்தல் வேலைகளைச் செய்திருக்கின்றனர். அக்கும்பல்களின் தலைவனான பைராவைச் சந்தித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்குமென்று அந்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவரிடம் சொல்கிறார் துளசி.
அதன்படியே அவர்கள் பைரவன் (சையீஃப் அலிகான்) எனும் பைராவைச் சந்திக்கின்றனர். அவரிடத்தில், தங்களைக் கடத்தல்காரர்களாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் பேச்சைக் கேட்கவே பைரா தயாராக இல்லை.
அந்த நிலையில், கடலின் அலைகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர அந்தக் கும்பலால் எதுவும் செய்ய முடிவதில்லை. அப்போது, அவர்களுக்கு அறிமுகமாகிறார் சிங்கப்பா (பிரகாஷ் ராஜ்) எனும் மனிதர்.
அந்த நான்கு கிராமத்தினரும் வியந்த, பயந்த, கொண்டாடிய நபரான தேவராவின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அப்போது நிகழும் சிறு களேபரத்தில், படகில் இருக்கும் அந்த போலீஸ் அதிகாரி கடலுக்குள் விழுகிறார். அதன் அடிப்பகுதியில் சில, பல பிணங்களைக் காண்கிறார். அதனைக் கண்டு மிரட்சியடைகிறார்.
அந்த போலீஸ் அதிகாரியிடம், மீண்டும் ‘தேவரா யார் தெரியுமா’ என்று கதை சொல்லத் தொடங்குகிறார் சிங்கப்பா.
அந்த தேவரா என்ன செய்தார்? அவர் இப்போது எங்கிருக்கிறார்? அவருக்கும் தாங்கள் தேடி வந்த தயா, யதிக்கும் என்ன சம்பந்தம்? இதற்கான பதில்களை அந்த சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்ததா என்று சொல்கிறது ‘தேவரா’வின் மீதி.
’கதைக்குள் கதை’ என்பது போன்று விரிகிறது ‘தேவரா’ திரைக்கதை. தொடக்கம் ஓரிடத்தில் இருக்க, மொத்தப் படமும் வேறொரு திசையில் நிகழ்கிறது.
இரண்டுக்குமான தொடர்பு இரண்டாம் பாகத்தில் நமக்குத் தெரியலாம். ஆனாலும், அது ஒரு குறையாகவே இதில் அமைந்திருக்கிறது.
பிரமாண்டமான படம்!
‘தேவரா’வில் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், ஸ்ருதி மராதே, சையீஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, கலையரசன், ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப், ஸ்ரீகாந்த், நரேன், அஜய், அபிமன்யு சிங், கெட்டப் ஸ்ரீனு, ஹரி தேஜா உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ‘ஜூனியர்’ரை துறந்து என்.டி.ஆர். என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. இதில் அவர் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டுக்குமான வித்தியாசத்தை உடல்மொழியிலும் தோற்றத்திலும் காண்பித்திருப்பது அருமை.
தந்தையின் ஜோடியாக ஸ்ருதி மராதேவும், மகன் ஜோடியாக ஜான்வி கபூரும் தோன்றியிருக்கின்றனர்.
வெகுநாட்களுக்குப் பிறகு ஸ்ருதி இதில் நடித்திருக்கிறார். நாற்பதுகளில் இருந்தாலும், படத்திற்குத் தேவையான அழகையும் நடிப்பையும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜான்விக்கு இக்கதையில் பெரிதாக வேலை இல்லை. அதனால், அவரது கவர்ச்சிகரமான தோற்றமே இப்படத்தின் முக்கிய யுஎஸ்பிகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்கேற்ப ’பத்தவைக்கும் பார்வைக்காரா’ பாடலில் நம்மைக் கிறங்கடிக்கிறது அவரது தோற்றம்.
சையீஃப் அலிகான் இதில் வில்லனாக வந்து போயிருக்கிறார். அவரது நடிப்புத்திறனில் சிறு துளி மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முரளி சர்மா, அபிமன்யூ சிங் மட்டுமல்லாமல் கலையரசன், ஷைன் டாம் சாக்கோவுக்கும் இப்படத்தில் போதிய இடம் தரப்படவில்லை.
ஸ்ரீகாந்த், ஜரீனா வஹாப், கெட்டப் ஸ்ரீனு, தலூரி ராமேஸ்வரி, நரேன், அஜய், ஹரி தேஜா என்று பலர் இதிலுண்டு. அனிருத் இசையில் பாடல்கள் துள்ளலை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் தன்மையையை மேலுயுர்த்துவதாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். ‘டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்கோம்’ என்று பதிலளிப்பதாக அமைந்துள்ளது அவர்களது பங்களிப்பு.
‘இது யதார்த்தம் இல்லை’ என்று மூளை சொன்னபிறகும், ‘ஓகே’ ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே விஎஃப்எக்ஸ் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது துருத்தலாகத் தெரியாதது இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
அசர வைக்கும் சண்டைக்காட்சிகள், பிரமிக்க வைக்கும் ஹீரோயிசம், திரையை நிறைக்கும் நடிப்புக்கலைஞர்கள், அசத்தலான இசை, இவற்றோடு இதுவரை நாம் பெரிதாகப் பார்க்காத உலகமொன்றைக் காட்டுகிற திரைக்கதை என்று அமைந்த படங்கள் வித்தியாசமான காட்சியனுபவத்தை நமக்குத் தரும். அதனைத் தேவராவும் நிகழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில், ‘அது ஓவர்டோஸ் ஆக உள்ளதா’ என்று கேட்டால், ‘ஆம்’ என்று சொல்லவே தோன்றுகிறது.
சில பாத்திரங்களைத் திரைக்கதையில் சரியாக விளக்காமல் விட்டிருப்பது, ரசிக மனதைத் தொடாத கதாபாத்திர வடிவமைப்பு, அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் ஒன்றிணைக்கத் தவறிய திரைக்கதை, வழக்கமான தெலுங்கு படம் பார்த்த திருப்தியை உருவாக்கத் தவறியது என்று இதில் சில குறைகளும் உண்டு.
‘பான் இந்தியா’ படமாக மாற்றும் நோக்கோடு செயல்பட்டிருப்பதால் இந்தக் குறைகள் படத்தைத் தொற்றியிருக்கின்றன. அதற்குப் பதிலாக, இதனை ஒரு வட்டாரம் சார்ந்ததாக மட்டுமே முன்னிறுத்தியிருந்தால் இன்னும் செறிவான படமாக மலர்ந்திருக்கும் இந்த ‘தேவரா’. காந்தாரா போன்ற படங்கள் உதாரணமாக மாறியபின்னும், அந்த உத்தியைச் செயல்படுத்த முனையாமல் இருப்பது படக்குழுவின் பலவீனத்தைக் காட்டுகிறது.
போலவே, இரண்டாம் பாகத்திற்காகச் செய்யப்பட்ட சமரசங்கள் இதன் சாரத்தைப் பாழ்படுத்தியிருக்கின்றன. கடலின் வண்ணத்தைப் பிரதியெடுத்தது போன்று படம் முழுக்கப் பெரும்பாலான காட்சிகளில் நீல வண்ணம் விரவி நிற்கிறது. அது, வழக்கமான தெலுங்கு படம் பார்த்த திருப்தியை விரட்டியடிக்கிறது.
அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட கதைக்கும் நாயக துதிபாடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் செறிவான ஆக்கத்தைக் கொண்டதாக உள்ளது.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ‘தேவரா’ ஒரு சுமார் ரகப் படமே. ‘பரவாயில்லை, தியேட்டர்ல பார்க்க இது மாதிரிப் படம் தான் வேணும்’ என்பவர்கள் தாராளமாக இதனைப் பார்க்கலாம்; ரசிக்கலாம்; கொண்டாடலாம். அதேநேரத்தில், ‘ஒரே அடிதடி, சண்டைன்னு பார்த்து தலைவலியா போச்சு’ என்று சொல்பவர்களுக்கு ஏற்றதல்ல இந்த ‘தேவரா’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூடியூபர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா? – கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
கொடுமை தாங்க முடியாமல் ஜெயம் ரவி பிரிந்தாரா? – மெளனம் கலைத்த ஆர்த்தி