‘எங்களுக்கு வேண்டாம், தெலுங்கு சினிமாவை ஆந்திராவுக்கு கொண்டு போங்க’ – அடுத்த பரபரப்பு!

Published On:

| By Kumaresan M

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அல்லு அர்ஜுன் வீட்டின் மீது பூந்தொட்டி, கற்களை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரி இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று ஜாமீனும் வழங்கப்பட்டது.

இதில், கைதானவர்கள் பற்றி, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் கிருஷாங் கூறுகையில், ‘கைதான ரெட்டி ஸ்ரீனிவாஸ் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மிகுந்த நெருக்கமானவர்.

இவர் உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் மட்டுமல்ல. கொடங்கல் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டவர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் தெலுங்கு தேச கட்சி தலைவர் பல்லவா ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், ‘தெலுங்கு சினிமாவை ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவுக்கு மாற்ற வேண்டும். அங்கிருந்துதான் தெலுங்கு சினிமா இயங்க வேண்டும். இதையேதான் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் படம் எடுக்க மிகச்சிறந்த இடங்கள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் புரந்தரேஷ்வரி கூறுகையில், சந்தியா தியேட்டர் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளி. அப்படியிருக்கையில், அவரை கைது செய்தது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில்,தெலுங்கு தேச கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஷனா திருனாகிரி தன் எக்ஸ் பக்கத்தில் தெலங்கானா முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அல்லு அர்ஜுனை கைது செய்தது சரிதான். அதே வேளையில், தெலங்கானாவில் விடுதிகளில் மாணவர்களின் இறப்புக்கு யார் காரணம்? விவசாயிகள் தற்கொலைக்கு யார் காரணம்? அல்லு அர்ஜுன் விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகள், மாணவர்கள் பிரச்னைகளை பேச நேரம் இல்லையா? என்று கடுமையாக சாடியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.குமரேசன்

சடலத்துடன் உறவு கொண்டால் பாலியல் வன்கொடுமை கிடையாது- சட்டீஸ்கர் நீதிமன்றம் சொன்னது என்ன?

அந்த பெண் இறந்து விட்டார் என்று சொன்ன பின்னரும் அல்லு அர்ஜூன் 3 மணி நேரம் படம் பார்த்தார் – ஹைதராபாத் கமிஷனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel