அண்ணன் வர்றார் வழிவிடு… ‘கோட்’ ஸ்பெஷல் ஷோ-க்கு பெர்மிஷன் கிடைச்சாச்சு!

Published On:

| By Selvam

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை (செப்டம்பர் 5), தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு இன்று (செப்டம்பர் 4) அனுமதி அளித்துள்ளது.

விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் கோட். இந்த படத்திற்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று விஜய் அறிவித்துள்ளதால், அவரது ரசிகர்கள் கோட் படத்தை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கோட் படத்தின் ரிசர்வேஷன் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், முதல் நாள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, கோட் படத்திற்கு செப்டம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து கோட் படத்திற்கு நாளை (செப்டம்பர் 5) ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஐந்து காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.

கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளதால் உதயநிதி ஸ்டாலின் தான் அனைத்து துறைகளையும் கவனித்து வருகிறார்.

ஏற்கனவே, விஜய்க்கு எதிராக திமுக செயல்படுவதாக அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்தசூழலில், சிறப்பு காட்சி விவகாரத்தில் அதுபோன்ற குற்றச்சாட்டுக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உதயநிதி கவனமாக இருந்தார்.

அதனால் பெரிய ஸ்டார்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுறையை பின்பற்றி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க உள்துறை செயலாளருக்கு உதயநிதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் தான் கோட் படத்திற்கு இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை (செப்டம்பர் 4) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ச்சனா, உதயநிதிக்கு நன்றி தெரிவித்திருத்திருக்கிறார்” என்கிறார்கள்

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாரிசெல்வராஜை திணறடித்த ‘மலை நாட்டுக்காரி’ … யார் இந்த வைரல் கேர்ள் நிவிதா?

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா : நன்கொடை வாரி வழங்கிய முன்னணி நடிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel