தமிழ்க்குடிமகன் : விமர்சனம்!
சாதீயச் சடங்குகளுக்கு எதிரான வேள்வி!
மனித வாழ்வில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் வந்துபோனாலும், பிறப்பும் இறப்பும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவை தொடர்பான நம்பிக்கைகளும் வழக்கங்களும் கிராமங்களில் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சூழலில், ஈமச்சடங்குகள் செய்யும் நடைமுறைகளில் இருந்து விடுபட முனையும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதரின் வாழ்வைப் பேசுவதாக இருந்தது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ட்ரெய்லர்.
இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், அருள்தாஸ், வேல.ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், தீப்ஷிகா, துருவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நமக்குத் தரும் காட்சியனுபவம் எத்தகையது?
மரணத்திற்கு அப்பால்..!
செந்திப்பட்டி எனும் கிராமமொன்றில் மனைவி பார்வதி (ஸ்ரீ பிரியங்கா), தாய் (சுஜாதா), மகன், தங்கை வள்ளியோடு (தீப்ஷிகா) வாழ்ந்து வருகிறார் சின்னச்சாமி (சேரன்). அவரது முன்னோர், அந்த கிராமத்தில் துணி சலவை செய்யும் தொழிலைச் செய்தவர்கள். அந்த வழியில், அவரும் அதனை மேற்கொள்கிறார்; ஆனாலும், அரசு வேலையில் சேர்வதுதான் அவரது கனவு.
அரசுத் தேர்வு எழுதுவதற்கான வயது மூப்பை அடைவதற்கு முன்னால், கடைசி முறையாக விஏஓ பணிக்கான போட்டித் தேர்வுக்குச் செல்கிறார் சின்னச்சாமி. ஆனால், ஊராரின் சதியால் அது தடைபட்டுப் போகிறது. அது, அவரது மனதில் அடக்குமுறைக்கு எதிரான தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது.
ஊர் பெரியமனிதர் சுடலையின் (லால்) மகனும் (துருவா) வள்ளியும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஒருநாள், இந்த விஷயம் அவ்வூரில் உள்ள சிலருக்குத் தெரிய வருகிறது. அவர்கள், வள்ளியை அடித்து உதைத்துக் குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுச் செல்கின்றனர். அந்த சம்பவம் சின்னச்சாமியை மேலும் ரௌத்திரப்படுத்துகிறது.
சில மாதங்கள் கழித்து, சுடலையின் தந்தை பேச்சிமுத்து (ராமசாமி) மரணமடைகிறார். ஊரே திரண்டு நிற்க, சின்னச்சாமி தானாக வந்து ஈமச்சடங்குகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கின்றனர் சுடலையின் உறவினர்கள். அது நிகழாதிருக்க, அவருக்குத் தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், தன்னால் வர முடியாது என்பதைத் தேடி வந்தவர்களிடம் தீர்மானமாகச் சொல்லி அனுப்புகிறார் சின்னச்சாமி.
பக்கத்து கிராமங்கள், நகரத்தில் இருக்கும் சலவைத்தொழிலாளர்களும் கூட, சின்னச்சாமிக்கு நிகழ்ந்த அக்கிரமத்தை அறிந்து செந்திப்பட்டி இறப்பு நிகழ்வுக்குச் செல்ல சம்மதிப்பதில்லை. மீறி வருபவர்களும் கூட, சின்னச்சாமி பேச்சை மீறிச் செயல்படத் துணிவதில்லை. அதையடுத்து, பிணத்தை ‘ப்ரீசரில்’ வைக்கும் நிலை ஏற்படுகிறது. அதனை அவமானமாகக் கருதி, நள்ளிரவில் சின்னச்சாமியின் வீட்டை அடித்து நொறுக்குகிறது சுடலை தரப்பு. அடுத்தநாள் காலையில் ஈமச்சடங்குகள் செய்தாக வேண்டுமென்று மிரட்டல் விடுக்கிறது.
ஆனால், சின்னச்சாமியோ தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்குச் செல்கிறார். அதனை அறிந்த ஊர்க்காரர்கள், காவல் துறையில் பணியாற்றும் சுடலையின் உறவினரை நாடுகின்றனர். அவர் மூலமாக, சின்னச்சாமி மீது பொய் வழக்கொன்று போடப்படுகிறது. அதையடுத்து, காவல் நிலையம் செல்லும் அவரை போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர். ஈமச்சடங்குகள் செய்யச் சம்மதித்தால், வழக்கு வாபஸ் பெறப்படும் என்று மிரட்டுகிறது சுடலை தரப்பு.
இந்த விஷயம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வரை செல்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது? சின்னச்சாமி என்னவானார் என்பதை நீதிமன்றக் காட்சிகளின் ஊடாகச் சொல்கிறது ‘தமிழ்க்குடிமகன்’.
மரணத்திற்கு அப்பால் ஒரு ஆன்மா சாந்தத்தை அடைய, சில சடங்குகளைப் பின்பற்ற வேண்டுமென்ற நம்பிக்கை இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உயிர்ப்புடன் உள்ளது. அதனை மேற்கொள்ளும் குறிப்பிட்ட சாதியினர் மீது அடக்குமுறையும் ஏவப்படுகிறது.
அந்த வழக்கங்களை ஒழித்தால் சாதிப் பாகுபாடுகளை இல்லாமலாக்கலாம் என்கிறது இப்படம். அதுவே, இயக்குனர் இசக்கி கார்வண்ணனின் படைப்பை நாம் ஆதரிக்கவும் எதிர்க்கவும் காரணமாக அமைகிறது.
புதிய பேசுபொருள்!
சேரனின் இருப்பு, இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள சின்னச்சாமி பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹீரோயிசமோ, தனக்கான முக்கியத்துவமோ இல்லாத படமொன்றில் வெறுமனே நாயக பாத்திரமாக வந்து போயிருப்பது கதையின் மீதிருக்கும் அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது.
சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரியங்காவும் சரி, அவரது தங்கையாக நடித்துள்ள தீப்ஷிகாவும் சரி; அனைத்து காட்சிகளிலும் அழகுறத் திரையில் தோன்றியிருக்கின்றனர். அதேநேரத்தில், அவர்களது நடிப்பு குறை சொல்லும்படியாக இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
தீப்ஷிகா, துருவா காதல் காட்சிகளில் சினிமாத்தனம் லேசாகத் தலைகாட்டுகிறது. பின்பாதியிலும் கூட, இருவருக்கும் சில காட்சிகள் தந்திருக்கலாம்.
சேரனின் தாயாக வரும் சுஜாதா மாஸ்டர், அந்த பாத்திரமாகவே நமக்குத் தென்படுகிறார். அவராலேயே, இந்தப் படம் நம் மனதுக்கு நெருக்கமானதாக மாறுகிறது.
சுடலையாக நடித்துள்ள லால், சும்மா வந்து நிற்பதே மிரட்டலாக உள்ளது. அவரை விட, அருள்தாஸுக்கு இதில் ’ஸ்கோர்’ செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
’காந்தி பெரியார்’ எனும் பாத்திரத்தில் வேல.ராமமூர்த்தியும் இதில் தோன்றியிருக்கிறார். ’வேதம் புதிது’ சத்யராஜின் ‘ஜொராக்ஸ்’ போலத் தெரிந்தாலும், கதையில் வலியத் திணித்தது போன்றிருந்தாலும், அவரது இருப்பு ரசிகர்களைக் கவரும்.
இவர்கள் தவிர்த்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், சுரேஷ் காமாட்சி, ரவி மரியா, ராஜேஷ், தலையாரி மற்றும் லால் உறவினராக நடித்தவர் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் யதார்த்தம் ஒட்டிக்கொண்ட பாவனை. அதையும் மீறிப் பல ஷாட்கள் அழகாகத் திரையில் தெரிகின்றன. முன்பாதியில் சீராகச் செல்லும் கதை, பின்பாதியில் கொஞ்சம் சரிவைச் சந்தித்திருக்கிறது. திரைக்கதையில் ஏற்பட்ட அந்த தொய்வைச் சரிசெய்ய மறந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சன்.
கலை இயக்குனர் வீரசமர் கைவண்ணத்தில், நெல்லை வட்டாரத்து கோயில் கொடை நிகழ்வுகள், இடுகாட்டில் செய்யப்படும் சடங்குகள் திரையில் செறிவுடன் காட்டப்படுகின்றன.
இந்த படத்திற்கு இசையமைத்தவர் சாம் சி.எஸ். பாடல்கள் ஓரளவு கேட்கும் ரகம் என்றாலும், அவற்றைத் தாண்டி நிற்கிறது பின்னணி இசை. பின்பாதியில் உணர்வுப்பூர்வமாகத் திரையுடன் நாம் ஒன்ற அதுவே காரணமாக உள்ளது.
‘நாதியத்த எங்களை சாதியத்தவங்களா ஆக்கிடுங்கய்யா’, ‘அந்த எழவே வேண்டாம்னுதானே சிட்டிக்கு வந்து கடைய போட்டிருக்கேன், இங்கயும் வந்து அந்த எழவையே பண்ணச் சொல்றியோ’ என்பது போன்ற இயக்குனர் இசக்கி கார்வண்ணனின் வசனங்கள் சாட்டையடியாக உள்ளன. அவர் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது போன்ற ஒரு படத்தைச் சிறந்த வசனங்கள் மட்டுமே தாங்கி நிற்க முடியாது.
சேரன் குடும்பத்தைச் சார்ந்த கோயில் கொடை பிரசாதத்தைத் தந்தைக்குப் பயந்து துருவா வீசியெறிவதும், அதன்பிறகு தீப்ஷிகா மீதான காதலால் தன் வீட்டில் உள்ளவர்களிடம் கோயில் குறித்த அடையாளங்களை மறைத்துத் தருவதும், இன்னும் தெளிவாகத் திரையில் உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். இப்படிச் சில காட்சிகள் தகுந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தும் சரியாக வெளிப்படாமல் போயிருக்கிறது. அவற்றைச் சரிப்படுத்தி, பின்பாதியை செறிவாக்கியிருந்தால் ’தமிழ்க்குடிமகன்’ பெரிதாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.
உச்சமாக நீதிமன்றக் காட்சி!
இந்த படத்தின் இறுதியில், ஒரு நீதிமன்றக் காட்சி உண்டு. அது, எண்பதுகளில் வந்த படங்களை நினைவூட்டும் விதமாகவே உள்ளது. அதையும் மீறி, அதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் இன்றைய சமூக நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.
சனாதனம் குறித்த அனல் பறக்கும் விவாதங்கள் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், சமூகத்தில் நிலவும் சடங்கு சம்பிரதாயங்களே சாதீய அடக்குமுறைக்கு வேராக உள்ளன என்று சொல்கிறது ‘தமிழ்க்குடிமகன்’. அதனைச் சரிப்படுத்த ஒரு தீர்வையும் முன்வைக்கிறது.
அந்த இடம், படத்தில் மிகச்சரியாகக் கையாளப்பட்டுள்ளது. அது சாதீயம் விளையாடும் சடங்கு சம்பிரதாயங்களைப் பொசுக்கும் பெருந்தீயாக வெளிப்படுகிறது. இந்தக் கதையின் அழுத்தம் உச்சம் பெறும் இடமும் அதுவே. என்ன, அந்தக் காட்சியில் வசனங்கள் அதிகம் என்பதுதான் ஒரே குறை.
சாதி வன்முறைக்கு எதிரான படைப்புகளில் தமிழ்க்குடிமகன் திரைப்படம் மிக முக்கியமான ஒன்று. ஆனால், இப்படத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சரமாரியாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அது, இப்படத்துக்கான ஆதரவுக் குரல்களை நிச்சயம் மட்டுப்படுத்தும்.
எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தாலும், அதனை மீறி எதிர்காலத்தில் ‘தமிழ்க்குடிமகன்’ எனும் பதம் நிச்சயம் நம் சமூகத்தில் பேசுபொருளாக இருக்கும். அப்படியொரு நம்பிக்கையை விதைக்கும் வகையில், எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையான படைப்பொன்றைத் தந்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
உதய் பாடகலிங்கம்
இலவசப் பேருந்து பயணச்சீட்டை இணையதளம் மூலம் பெறுவது எப்படி?
பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை எப்போது?