தமிழ் சினிமாவின் பழம்பெரும் சண்டை பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் முதுமையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 26) காலமானார்.
1970-களில் தொடங்கி சுமார் 50 ஆண்டுகாலம் திரையுலகில் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம்(95).
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு மிரட்டலான சண்டைக் காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார்.
குறிப்பாக 1970 -90 களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக இருந்துள்ளார் ஜூடோ ரத்னம்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கடைசியாக சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான தலைநகரம் படத்தில் வில்லனாக ஜூடோ ரத்னம் நடித்திருந்தார்.
1200க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதற்காக 2013ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். 2019ம் ஆண்டு கலைமாமணி விருதினை அவருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு கெளரவித்தது.
இந்நிலையில் முதுமை காரணமாக ஓய்வில் இருந்த சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.
இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒளவையார் டூ பாப்பாம்மாள் : டெல்லியில் கம்பீரம் காட்டிய தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி!