பெங்களூருவில் உள்ள IFA நிறுவனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து குறும் படங்களை தயாரிக்க முன் வந்தது.
இதில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, 25 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்தப் படங்கள் கடந்த வருடம் பெங்களூருவில் நடந்த உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அதில் சுப்ரமணிய பாரதி அவர்கள் இயக்கிய ”பாஞ்சாலி” என்ற குறும் படம் முதல் பரிசை வென்றது.
இந்த 25 குறும் படங்களில் 15 குறும் படங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டன.
ராஜாசெல்லமுத்து இயக்கிய ”தொப்புள் கொடி”, ஸ்ரீராம் இயக்கிய ”சாயுபும் நானும்”, சுவாமி ராஜலிங்கம் இயக்கிய ”தண்டனை”, ஏ.வி.கிரி இயக்கிய ”மரப்பாச்சி பொம்மைகள்”, அசோக் பாண்டியன் இயக்கிய “ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷன்”, வீரசிங்கம் இயக்கிய“பால்நிலா பயணம்”, கங்கையின் செல்வன் இயக்கிய“ஆன்மாவின் ஆயுதம்”, கல்யாணசுந்தரம் பால்சாமி இயக்கிய ”கொடுப்பினை”, பூமிநாதன் இயக்கிய “சான்றோன்”, ரமேஷ் இயக்கிய “அம்மாவின் கதைகள்”,
அன்பரசன் இயக்கிய “லைஃப் ஆப் மூக்கன்”, பாக்யராஜ் பரசுராமன் அவர்கள் இயக்கிய “செங்கொடி”, சுப்ரமணியபாரதி இயக்கிய “பாஞ்சாலி”, வெற்றிவேலன் இயக்கிய “சரணாலயம்”, ஜெயராஜ் இயக்கிய “கருணை” ஆகிய 15 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அவைகள், 2023-ம் மே மாதம் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் உலக திரைப்பட விழாவின் குறும்பட போட்டிக்காக அனுப்பப்பட்டது.
இதில், சாயுபும் நானும், கொடுப்பினை, சான்றோன், செங்கொடி, சரணாலயம் ஆகிய 5 திரைப்படங்கள் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் போட்டிக்காக திரையிட ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
கேன்ஸ் உலக திரைப்பட விழாவில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களின் படங்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட குறும் படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வேல்ஸ் கல்வி குழுமத்தின் துணைவேந்தர் ஐசரி கணேஷ் கலந்துகொண்டார் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இயக்குநர்களும், துணை இயக்குநர்களும், சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இராமானுஜம்
டாஸ்மாக் டார்கெட்: மக்கள் கருத்து!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!