தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : விதிகளை மாற்ற சதி?

Published On:

| By Kalai

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் முறைகேடு செய்வதற்கான சதிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை (2020-2022) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த நவம்பர் 22,2020 அன்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் இருந்தன. அவற்றில் 1,050 வாக்குகள் பதிவாகின.

அத்தேர்தலில் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவில், முரளி ராமசாமி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் மட்டும் வெற்றி பெற்றார்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தவேண்டிய நிலையில் 2020இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் அப்பொதுக்குழு அழைப்பிதழைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது, பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் தலைப்பில், சங்க சட்ட விதிகள் சேர்த்தல் மற்றும் திருத்தம் என்று இருப்பது.

இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தங்கள் அதிகாரபூர்வமான லெட்டர் பேடில் கடிதம் கொடுக்கவேண்டும், அதுவும் அதை செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாவது பொதுக்குழு நடக்கும் இடம். இம்முறை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் பொதுக்குழு நடக்கவிருக்கிறது. இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? என்று கேட்டால்,

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்பதை மாற்றி மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்று விதிகளில் திருத்தம் செய்தால், தேர்தலை சந்திக்காமலேயே இப்போதைய நிர்வாகம் தொடரலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த விதிகளுக்கெதிராகக் கருத்து சொல்பவர்கள் எவ்வளவு பேர் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளவே கடிதம் கேட்டிருக்கிறார்கள்.

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து சிலர் பிரச்சினையை செய்வார்கள். அதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே கலைஞர் அரங்கத்தில் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார்கள்.

ஆளும்கட்சியின் அரங்கம் என்பதாலும் அங்கு எப்போதும் காவல்துறை இருக்கும் என்பதாலும் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இது தேனாண்டாள் முரளி ராமசாமி அணியினரின் சதி என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இராமானுஜம்

கமல் குரலில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீடு! மற்ற பாடல்கள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel